Home ஆரோக்கியம் பொது மருத்துவம் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்

ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்

83

பொது மருத்துவம்:ஆண்களுக்கு 35 வயதிற்குப் பிறகான காலகட்டத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் பற்றிக் கவலைப்பட வேண்டியுள்ளது. தங்கள் தந்தை, நண்பர்கள் அல்லது சகோதரர்களுக்கும் அதுபோன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதைப் பார்ப்பதும் அவர்கள் கவலைப்படக் காரணமாகலாம். ஆண்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயங்கள் குறித்து இப்போது பார்ப்போம்:

1. இதய நோய்கள் (Heart Diseases)
எல்லா நாடுகளிலும், ஆண்கள் இறப்பதற்கு முக்கியக் காரணம் புற்றுநோய், மற்றது இதய நோய்களாகும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவு எனப் பல்வேறு வடிவங்களில் இதய நோய்கள் ஏற்படுகின்றன. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் இருந்தால், உங்களுக்கும் அவை உண்டாகும் ஆபத்து அதிகம், நீங்கள் மருத்துவரைப் பார்த்து சோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவைக் கண்காணிப்பதற்கான குறிப்பிட்ட இடைவேளைகளில் வருமாறு மருத்துவர் கேட்டுக்கொள்வார். உங்கள் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், புகைப் பழக்கம் உள்ளிட்ட ஆபத்து காரணிகளின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் மேலும் சில சோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.

2. விறைப்பின்மை (Erectile dysfunction)
ஆண்களுக்கு பாலுறவின் போது ஆண்குறி விறைப்பு ஏற்படுவதும், விறைப்பு நீடிப்பதும் கடினமாகும்போது, அந்தப் பிரச்சனையை விறைப்பின்மை என்கிறோம். இது பரவலாகக் காணப்படும் பிரச்சனையாகும், குறிப்பாக வயதான ஆண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. வயது அதிகரிக்கையில் (40-70), ஆண்களில் பாதி பேருக்கு விறைப்பின்மைப் பிரச்சனை தோன்றுவதாகக் கூறப்படுகிறது.

ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகின்ற அல்லது ஆண்குறியின் நரம்புகளை பலவீனப்படுத்துகின்ற சில உடல்நலப் பிரச்சனைகளால் விறைப்பின்மை ஏற்படுகிறது. மன அழுத்தம் அல்லது உணர்வுரீதியான பிரச்சனைகளும் இதற்குக் காரணமாகலாம். உடலில் சிகிச்சை தேவைப்படுகின்ற, வேறு ஏதேனும் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் விறைப்பின்மை இருக்கலாம். விறைப்பின்மைப் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டறிவதும், ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதும், பாலியல்ரீதியான மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும்.

3. புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் (Prostate Problems)
உங்கள் தந்தை அல்லது சகோதரர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகள் இருந்தால், நீங்களும் மருத்துவரைப் பார்க்க வேண்டும். இரத்தத்தில் புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட ஆன்டிஜென்னைக் (PSA) கண்டறியும் எளிய ஒரு சோதனை மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியலாம். PSA அதிகமாக இருப்பது, புற்றுநோயல்லாத புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தின் அடையாளமாகவும் இருக்கலாம், புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் பிற நோய்த்தொற்றுகளின் அடையாளமாகவும் இருக்கலாம்.

4. புற்றுநோய் (Cancer)
ஆண்களுக்கு மரணம் ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது நுரையீரல் புற்றுநோயாகும். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பெரும்பாலும் புகைப்பழக்கம் முக்கியமான காரணமாக உள்ளது. புகையிலையில் உள்ள நிக்கோட்டின், புகைப்பழக்கத்திற்கு ஒருவரை அடிமையாக்குகிறது. மேலும், பிற வழிகளில் புகையிலையைப் பயன்படுத்துவதும் வாய், தொண்டை மற்றும் குரல்வளைப் புற்றுநோய்களுக்குக் காரணமாகலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய் வயதானவர்களில் அதிகமாகவும், இளம் வயதினரிடையே அரிதாகவும் இருப்பதாகத் தெரியவருகிறது. புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய, உங்கள் மருத்துவர் PSA இரத்த சோதனை மற்றும் டிஜிட்டல் மலச்சிக்கல் பரிசோதனை செய்யுமாறு கூறுவார்.

புரோஸ்டேட் புற்றுநோய் மட்டுமின்றி, மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் ஆகியவை அடுத்த நிலையில் உள்ளன. குறிப்பிட்ட இடைவேளைகளில் தொடர்ந்து மலப் பரிசோதனை செய்தல், மற்றும் மலத்தில் கண்ணுக்குத் தெரியாத இரத்தம் உள்ளதா எனப் பரிசோதனை செய்தல் மற்றும் காலனோஸ்கோப்பி ஆகிய பரிசோதனைகள் மூலம், மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன.

5. நீரிழிவுநோய் (Diabetes)
இந்தியாவில் கிட்டத்தட்ட 7. 7 கோடி பேருக்கு நீரிழிவுநோய்க்கு முந்தைய நிலை உள்ளது, அதாவது, இவர்கள் வகை 2 நீரிழிவுநோயை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று பொருள். வயது அதிகரிக்கும்போது, நீரிழிவுநோய்க்கு முந்தைய நிலையம் நீரிழிவுநோயும் ஏற்படுவதும் அதிகரிக்கிறது.

வகை 2 நீரிழிவுநோய் பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதுமான உடலுழைப்பு ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்புக்குக் கொண்டுவர உதவலாம்.

இறுதிக் கருத்து (Conclusion)
ஆரோக்கியமான உணவு, தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்த்தல் போன்றவை உங்களை ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி இட்டுச்செல்லும்.

குறிப்பிட்ட இடைவேளைகளில் மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலம், ஏதேனும் நோய்கள் உள்ளதா என்று ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்!