Home ஆரோக்கியம் பொது மருத்துவம் கோடை கால வெப்பத்தை சமாளிப்பது எப்படி?

கோடை கால வெப்பத்தை சமாளிப்பது எப்படி?

74

கோடைகால வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். அன்றாட தட்ப வெப்ப நிலை அறிந்து கொள்ள வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண் கண்ணாடி அணிவது மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.

வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும். உப்பு கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜூஸ், ‘லெஸி’ மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர் சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைசுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்படின் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.

வீட்டில் உள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும். மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல், அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பணிபுரியும் இடத்தின் அருகில் போதிய அளவு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள் நேரடியாக சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வேலை செய்யும் பொழுது, கூடுதல் ஓய்வு நேரம் எடுத்து கொள்ள வேண்டும். வெயில் குறைவாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகளை செய்ய திட்டமிடல் வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் கர்ப்பிணி தொழிலாளர்கள் மருத்துவ நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங் களில் குழந்தைகளையோ அல்லது செல்ல பிராணிகளையோ விட்டு செல்லக்கூடாது. வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மது அருந்துவது, டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர் சத்தை குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.