Home ஆரோக்கியம் மார்பகப் புற்றுநோய் எனும் மர்மம்

மார்பகப் புற்றுநோய் எனும் மர்மம்

34

சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய். நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு முறை ஒரு உயிரை இழக்கும் போதும், நம்மையும் அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து, பயத்தில் நாமும் கொஞ்சம் சாகவே செய்கிறோம். யெஸ்…. பெண்ணாகப் பிறந்த யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம், காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், எச்சரிக்கைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் ரத்தப் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமநாதன்.

‘‘பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு இரண்டாம் இடம். 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. எந்த வயதுப் பெண்களுக்கும் இது வரலாம். வயது கூடக் கூட நோய் தாக்கும் அபாயமும் கூடும். எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய செல்கள் இருக்கும். ஆனால், அவை புற்றுநோயாக மாறாமலிருக்க, நமது உடலிலுள்ள பாதுகாப்புப் படை எந்நேரமும் ‘அலர்ட்’ ஆக இருந்து, அழித்துக்கொண்டே இருக்கும். புற்றுநோய் என்பது சாதாரண இன்ஃபெக்ஷன் மாதிரி திடீரென வெளியே வராது. உடலுக்குள் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால், புற்றுநோய் செல்களாக மாறும்.

ஒரு நல்ல குடும்பத்து மனிதர், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீவிரவாதியாக மாறுவதில்லையா? அப்படித்தான் நல்ல செல்கள், புற்றுநோய் செல்களாக மாறுவதும்! அதற்கு என்னவெல்லாம் காரணங்கள் தெரியுமா?

* பரம்பரையாகத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வெறும் 5 முதல் 10 சதவிகிதம்!

* இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவது, மிக தாமதமான மெனோபாஸ், அதாவது 55 வயதுக்குப் பிறகு… இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.

* திருமணம் செய்யாமலிருப்பது.

* 30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பிரசவிப்பது. பூப்பெய்தியதில் இருந்து, 15 வருடங்களில், உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிக மாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் அபாயம் அதிகமாகும்.

* பருமன்… குறிப்பாக கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள், எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

* வருடக்கணக்கில் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோயை வரவேற்கும் விஷயங்கள்.

அறிகுறிகள்
* முதல் அறிகுறி கட்டி. வலியே இருக்காது. பல பேர் ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தி விட்டு, திடீரென ஒரு நாள் எலுமிச்சை அளவு கட்டியோடு வருவார்கள். அது அந்தளவுக்கு வளர 3 முதல் 5 வருடங்கள் ஆகியிருக்கும். பட்டாணி அளவில் இருக்கும்போதே அதைத் தொட்டு உணர முடியும். இந்தக் கட்டத்தில் கண்டு பிடித்தால், சிகிச்சை சுலபம். சிலருக்கு ஃபைப்ராய்டு கட்டி இருந்து குழப்பலாம். இந்தக் கட்டி கோலிக் குண்டு மாதிரி அங்குமிங்கும் ஓடும். ஆனால் புற்றுநோய் கட்டி, ஒரே இடத்தில் இருந்தபடி நாளுக்கு நாள் வளரும்.

* இரண்டாவது அறிகுறி வலி. புற்றுநோயைப் பொறுத்தவரை நோய் முற்றிய பிறகுதான் வலி, தன் தீவிரத்தைக் காட்டும்.

* மூன்றாவதாக மார்பகங்களின் மேல் வீக்கம், நிறம் சிவந்து காணப்படுவது, குழிவு ஏற்படுதல்…

* கடைசியாக மார்பகக் காம்புகளில் இருந்து நீர் அல்லது ரத்தம் வடிதல், காம்புகள் உள்ளிழுத்த நிலை, புண்கள் ஏற்படுதல்.

* வயது கூடக் கூட, மார்பகங்கள் தொய்வடைவது இயல்பு. அப்படி ஆகாமல், இரண்டு மார்பகங்களுமோ, இரண்டில் ஒரு மார்பகம் தூக்கிக் கொண்டு நின்றால், அதற்குக் காரணம் உங்கள் இளமையின் பூரிப்பு எனப் பெருமைப்பட வேண்டாம். அது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

* சுய பரிசோதனை செலவில்லாத, சுலபமான சோதனை இது. இதன் மூலம் 97 சதவிகித மார்பகப் புற்றுநோயை, முற்றுவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியும். மாதவிலக்கானதில் இருந்து 7வது நாள் மாதம் ஒரு முறை செய்ய வேண்டும். கட்டிகள் இருப்பதை உணர முடியும். மார்பகங்கள் முழுவதுமாக உருவெடுத்திருக்காது என்பதால், 20 வயதுக்குக் குறைவானவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.
இது தவிர வருடம் ஒரு முறை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரிடம், நேரில் சென்று பரிசோதித்துக் கொள்வது பாதுகாப்பானது. மகப்பேறு மருத்துவர்களைவிட, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களால், இதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

* மேமோகிராம் 40 வயதுக்குப் பிறகு வருடம் ஒரு முறை செய்யலாம். எக்ஸ் ரே மாதிரியான ஒரு பரிசோதனை இது. இரண்டு மார்பகங்களையும் அழுத்திச் செய்யப்படுகிற சோதனை என்பதால், பலரும் இந்தச் சோதனையைத் தொடர்ந்து செய்வதில்லை.

* கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், திவீஸீமீ ழிமீமீபீறீமீ கிsஜீவீக்ஷீணீtவீஷீஸீ சிஹ்tஷீறீஷீரீஹ் (திழிகிசி) என்கிற ஊசியின் மூலம், திசுக்களை எடுத்து, அது புற்றுநோயா என உறுதி செய்து, அதற்கேற்ப சிகிச்சைகள் தொடங்கப்படும்.

* கட்டியின் அளவைப் பொறுத்து, அது சிறியதா அல்லது அக்கம் பக்கத்தில் பரவியிருக்கிறதா, குறிப்பாக எலும்புகளில் பரவியிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டறிய வேண்டியது முக்கியம். எக்ஸ் ரே மற்றும் ஸ்கேனுக்கு 5 ஆயிரமும், எலும்புகளுக்கான ஸ்கேனுக்கு 3,500 ரூபாயும் செலவாகும். வசதியிருப்பவர்கள் இந்த மூன்றையும் தவிர்த்து பெட் ஸ்கேன் (றிமீt ஷிநீணீஸீ) செய்து கொள்ளலாம். புற்றுநோய் கட்டியா, இல்லையா என்பதை இது சொல்லிவிடும். செலவு ரூ.25 ஆயிரம்.

புற்றுநோயின் நிலைகள்

நிலை 1 : மார்பகத்தில் மட்டும் சின்ன கட்டி.
நிலை 2 : கொஞ்சம் பெரிய கட்டி, மார்பகங்கள் மற்றும் அக்குள் பகுதி வரை பரவியிருக்கும்.
நிலை 3 : மார்பகத்திலிருந்து அக்குள் அல்லது நெஞ்சுக்கூடு வரை அதிகமாகப் பரவியிருக்கும் பெரிய கட்டி.
நிலை 4 : நுரையீரல், எலும்புகள், ஈரல் என உடல் முழுக்கப் பரவி விடுதல்.
முதல் 2 நிலைகளில் குணப்படுத்தும் வாய்ப்பு 90 சதவிகிதம்.
3-வது நிலையில் 50 சதவிகிதம்
4-வது நிலையில் 0 சதவிகிதம்

சிகிச்சைகள்

முதல் நிலையில் திசுவானது 1 செ.மீ-க்கும் குறைவாக இருந்தால், மிவிஸிஜி என்கிற கதிரியக்க சிகிச்சை மட்டுமே கொடுத்து, மார்பகங்களை அகற்றாமல் காக்கலாம். இரண்டாவது நிலையில் கட்டியை எடுத்து விட்டு, கீமோதெரபி தர வேண்டியிருக்கும். மார்பகங்களைக் காப்பாற்றுவது சற்று சிரமம்தான். மூன்றாவது நிலையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சைகள் தேவை. நான்காவது நிலையில் ஒன்றும் செய்ய முடியாது. தற்காலிக சிகிச்சைகளின் மூலம் மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போடுவது மட்டுமே சாத்தியம்.
கீமோதெரபி என்பது ஒவ்வொரு முறையும் உடம்புக்குள் ஒரு குண்டு போடுவதற்கு இணையானது. இதயம் பாதிப்பதிலிருந்து, முடி
கொட்டுவது வரை பக்க விளைவுகள் நிச்சயம். கதிரியக்க சிகிச்சை கொடுக்கும் போது, சருமம் எரிந்து புண்ணாவதைத் தவிர்க்க முடியாது.

வரும்… ஆனா வராது!
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் அது திரும்பாவிட்டால், மறுபடி வர வாய்ப்பே இல்லை என்பது பலரின் தவறான அபிப்ராயம். 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட அது சிலருக்குத் திரும்பவும் வரலாம்!
வருமுன் காக்க…
* குண்டான பெண்கள், கண்டிப்பாக எடையைக் குறைத்தாக வேண்டும்.
* உடற்பயிற்சி மிக முக்கியம். தினம் 3 கி.மீ நடை… 10 நிமிடங்களில் 1 கி.மீ தூரத்தை வேகமாக நடப்பதுதான் சரி!
* பேருந்தில் இறங்க வேண்டியதற்கு ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே இறங்கி, வீடு வரை நடக்கலாம்.
* டி.வி முதல் ஏசி வரை எல்லாவற்றுக்கும் ரிமோட் கன்ட்ரோல்… குனிந்து, நிமிரத் தேவையே இல்லாமல் மாடுலர் கிச்சன்… இது எல்லாமே ஆபத்து! அலமாரியில் உள்ள பொருள்களை கைகளை நீட்டி, மடக்கி எடுப்பது, குனிந்து எடுப்பது என உடலை வளைக்க வேண்டியது மிக முக்கியம்.
* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளவும். அசைவப் பிரியர்கள் பொரித்து உண்பதைத் தவிர்த்து, குழம்பாகச் சாப்பிடுவது சிறந்தது. பெரிய துண்டுகளாகச் சமைக்காமல், சின்னதாகவே செய்யுங்கள்.
* நேரடித் தணலில் நீண்ட நேரம் சமைக்கப்படுகிற உணவுகளில் புற்றுநோய்க்கான விஷயங்கள் அதிகம்!
* அதிக மன உளைச்சல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பாதுகாப்புப் படையை அழித்து விடும். அதன் காரணமாக காலப் போக்கில் புற்றுநோய் தாக்கலாம். எனவே டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்குப் பழகுங்கள்.

Previous articleபடுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது
Next articleசுத்தம் சுகம்தரும்