Home ஆரோக்கியம் நாக்கினை பாதுகாப்போம்.

நாக்கினை பாதுகாப்போம்.

57

bad-breath-brush-tongue (1)ஒரு துண்டு லட்டை வாயில் போடுகிறோம். உடனே நாக்கு வேகமாக செயல்படத் தொடங்குகிறது. உமிழ்நீருடன் கலந்து உருவாகும் லட்டின் ருசியை நாக்கு, சிக்னலாக மாற்றி மூளையில் சுவையை நிர்வகிக்கும் கட்டமைப்புக்கு அனுப்புகிறது. இது ஒரு பெரிய பயணம்போல் தோன்றினாலும், ஒரு வினாடிக்குள் எல்லாவற்றையும் நாக்கு செய்து முடித்துவிட்டு, ‘இது லட்டின் சுவை’ என்று அறிவித்துவிடுகிறது.

வாய்க்குள் வைக்கும் பொருளின் ருசியை சரியாக ஆராய, அந்த உணவை வாயின் பல பகுதிகளுக்கு நாக்கு அனுப்புகிறது. பற்களை சுத்தப்படுத்தும் வேலையையும் நாக்கு செய்கிறது. நாக்கால் உடனடியாக இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை அடையாளம் காண முடியும்.

வேறு எந்தெந்த சுவைகளை நாக்கால் உடனே அறிய முடியும் என்ற ஆய்வு தொடர்ந்துகொண்டிருக்கிறது. பதினைந்து வயதை தொடும்போது ஒருவருடைய நாக்கு பத்து சென்டிமீட்டர் நீளமாக இருக்கும். நாக்கு என்றதும் சாப்பாடு, ருசி போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால் நாக்கின் தசைகள் ஒத்துழைத்தால்தான் நம்மால் பேச முடியும்!

நாக்கை சுத்தப்படுத்த வேண்டியது அவசியமா? என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. சாப்பிடும்போது உணவின் துணுக்குகள் பற்கள், ஈறுகளில் படிகிறது. அதுபோல் நாக்கிலும் படிகிறது. அதை சுத்தப்படுத்தாவிட்டால், கிருமித் தொற்று ஏற்படலாம். அதனால் நாக்கை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம்.

ஆனால் உலோகம், பிளாஸ்டிக், தென்னை ஓலை குச்சி போன்றவைகளை பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லதல்ல. அத்தகைய கடினமான பொருட்களை பயன்படுத்தும்போது, நாக்கின் மேல் பகுதியில் உள்ள மென்மையான படிமப்பகுதிகளில் சேதம் ஏற்படும். அதை தவிர்க்க பல் துலக்கும் பிரஷ் மூலமே நாக்கையும் சுத்தம் செய்துவிடலாம்.

நாக்கில் வெள்ளை நிறத்திலான படிமம் போல் பலருக்கும் காணப்படுகிறது. ஆரோக்கியமான நாக்கு பிங்க் நிறத்தில் இருக்கும். மாறாக கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் நாக்கு தோன்றினால் அவர்களது வாழ்வியல் முறை முரண்பாடாக இருக்கிறது என்று அர்த்தம். புகைப்பிடித்தாலோ, வெற்றிலை மென்றாலோ நாக்கின் சுவை மொட்டுகள் பாதிக்கப்படும்.

அதனால் ருசியை உணரும்தன்மை மந்தமாகும். நாக்கு வெள்ளை நிறத்தில் இருந்தால் அது பற்றி டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும். வாயிலும், நாக்கிலும் புண் ஏற்பட்டு பலர் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்கு மூன்று விதமான காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று: பல்லின் கூர்மையான பகுதியில் உரசுவதால் நாக்கில் காயம் ஏற்படும். வாயிலும் அடிக்கடி காயம் ஏற்படும். இத்தகைய காயங்களை வெகு காலம் வைத்துக்கொண்டிருந்தால் அது புற்றுநோயாகக்கூட மாறக்கூடும். அதனால் பற்கள், வாயை காயப்படுத்தினால், பல் டாக்டரின் ஆலோசனைப்படி பற்களை சரிசெய்யவேண்டும்.

இரண்டு: வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் மூலமும் நாக்கில் புண் ஏற்படும்.

மூன்று: டென்ஷனும் வாய்க்குள் புண்களை ஏற்படுத்தும்.

மாணவ மாணவிகள் பரீட்சை காலத்தில் மனஅழுத்தம் கொள்கிறார்கள். அதன் மூலம் வாய், நாக்கில் புண் தோன்றும். அப்போது அவர்கள் உண்ணும் உணவின் அளவு குறையும். அதனால் போதிய சத்தின்றி புண்கள் ஆற காலம்பிடிக்கும்.

எனவே வாய்க்குள் புண் இருப்பவர்கள், மன அழுத்தம் இன்றி வாழ பழகிக்கொள்ள முன்வரவேண்டும். நாக்கில் புண் தோன்றுவதற்கு இரும்பு சத்து குறைபாடு முக்கிய காரணம். வைரல் இன்பெக்ஷன், சர்க்கரை நோய், ஹைப்போதைராடிசம் போன்ற பாதிப்புகளும் காரணமாக இருக்கின்றன. வைட்டமின் குறைபாடும் நாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வைட்டமின் பி12, பி6, பிகாம்ப்ளக்ஸ் போன்றவைகளின் குறைபாடு நாக்கின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். மினுமினுப்பாக தோன்றும். சுவையை உணருவதில் சீரற்றதன்மை இருப்பதால் ருசியற்ற நிலை தோன்றும். அதனால் அவர்கள் ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். உடல் பலகீனமாகி விடும்.

நாக்கின் ஒரு பகுதியில் கறுப்பு படிந்து காணப்படுபவர்களை ‘கருநாக்கர்’ என்பார்கள். அது நோயல்ல. உடலில் பல்வேறு பகுதிகளில் மச்சம் ஏற்படுவதுபோல், நாக்கிலும் மச்சம் ஏற்படும். அது கருநாக்கு என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் கறுப்பு நிறம் வாய், உதடு போன்று அதிகரித்தால் டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

பல்வேறு நோய்களுக்கு அறிகுறியை வெளிப்படுத்தும் விதமாக நாக்கு அமைந்திருக்கிறது. சிலர் அதிக சூட்டில் டீ, காபி போன்ற பானங்களை பருகுவார்கள். உடலில் மற்ற பகுதிகளில் சூடான திரவத்தை கொட்டினால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அதே பாதிப்பு நாக்கிலும் ஏற்படும். அதிக சூட்டை தாங்கிக்கொள்ள முடியாமல் நாக்கு மரத்துப்போகும். பின்பு சரியாகிவிடும்.

ஒருவர் கிட்டத்தட்ட 15 வயதை தொடும்போது அவரது நாக்கில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சுவை மொட்டுகள் இருக்கும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அவை புனரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். வயதாகும்போது சுவை மொட்டுகளில் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும்.

புனரமைப்பும் மந்தமடையும். அதனால் வயதாகும்போது ருசியின்மை தோன்றும். ஜலதோஷம், அலர்ஜி, சிலவகை மருந்துகளை சாப்பிடும்போது தற்காலிகமாக ருசியின்மை தோன்றும்.

நோயாளியின் நாக்கை பரிசோதித்தால், நோய்களின் தன்மையை டாக்டர்களால் புரிந்துகொள்ள முடியும். நிமோனியா, டைபாய்டு, அட்ரினால் ஹார்மோன் சீரின்மை போன்ற பல நோய்களை டாக்டர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் உணருவார்கள். இது நோயாளிகளுக்கு சிகிச்சையை உடனே தொடங்க ஏதுவாகிறது. நாக்கு தடித்து காணப்பட்டால் அதுவும் சில நோய்களுக்கான அறிகுறியாகும்.

நாக்கின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?

* தினமும் 12 கப் தண்ணீர் பருகவேண்டும்.

* நாக்கு, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். சாப்பிட்ட பின்பு பற்களை துலக்குவது நல்லது.

* காக்காய் வலிப்பு போன்ற நோய் இருப்பவர்களின் நாக்கில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் அத்தகைய நோய்களுக்கு சரியான மருந்துகளை சாப்பிட்டு நாக்கு சேதமடைவதை தவிர்க்கவேண்டும்.

* வெற்றிலை போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகள் நாக்கின் ஆரோக்கியத்திற்கு எதிரானவை.

* அன்னாசிபழம் போன்றவைகளை முள் நீக்கி விட்டு சாப்பிடவேண்டும். முள்ளோடு சாப்பிட்டால் நாக்கில் பாதிப்பு ஏற்படும்.

* மவுத் வாஷ் பயன்படுத்துகிறவர்கள், தேவைக்கு தக்கபடியான அளவில் மட்டும் பயன்படுத்துங்கள்.

* நெஞ்சு எரிச்சல், புளிப்புதன்மையோடு உணவு மேல் எழும்புதல், தொடர்ந்து ஏப்பம் விடுதல் போன்றவை நாக்கை பாதிக்கும். அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று அதிலிருந்து விடுபடவேண்டும்.

* மனஅழுத்தம் நாக்கை பாதிக்கும். அதனால் மகிழ்ச்சியாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.