Home ஆரோக்கியம் கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!

கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!

27

அதிக அளவு உடல் பருமன் கல்லீரலை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு, உடல்பருமன், இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பாகும். இதயம், மூளை, போன்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்லீரலுக்கு கொடுப்பதில்லை. தவறான உணவு முறைகள் வாழ்க்கை முறைகள் மூலம், நாம் கல்லீரலை பல விதங்களில் தாக்குகிறோம்.

உடலின் முழு ரத்தமும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது இது நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்கிறது. மனிதர்களின் இறப்பிற்கு மூன்றாவது காரணம் கல்லீரல் கோளாறுகள். கல்லீரலில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் உடனே தெரியவராது. முற்றிய பிறகே அறிகுறிகளை காண்பிக்கும்.

ஜீரண மண்டல பாதிப்பு

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் பாதிப்படைவது ஜீரணம் தான். வயிற்றில் ஜீரணம் சரிவர நடைபெற, கல்லீரல், பித்தநீரை தயாரிக்கிறது.
பித்த நீர் தவிர, கல்லீரல் ரத்த புரதம் மற்றும் நூற்றுக்கணக்கான என்ஜைம்களை தயாரிக்கிறது. இவற்றால் ஜீரணமும், இதர உடலின் வேலைப்பாடுகள் சரிவர நடக்கும்.

உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை லிவர் ‘கிளைக்கோஜென்’ ஆக மாற்றி அதை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது தருகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருட்களை நீக்குவதையும் கல்லீரல் செய்கிறது. குளூகோஸ், விட்டமின்கள் ஏ, பி12, டி, இரும்பு, காப்பர் முதலியவற்றை கல்லீரல் சேமித்து வைக்கிறது.

கொழுப்பேறிய லிவர்

கார்போஹைடிரேட்களையும், புரதத்தையும் கொழுப்பாக மாற்றி கல்லீரல், பிற்கால தேவைக்காக சேமித்து வைக்கிறது.கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் கல்லீரல் வீங்கி விடும். நீரிழிவு மற்றும் அதீத பருமன் உள்ளவர்களுக்கு இது ஏற்படும்.

மஞ்சள் காமாலை

ஹெபாடைடீஸ் கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதால் ஏற்படும். நோய் தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குடிப்பழக்கம், கல்லீரல், புற்றுநோய் இவற்றால் கல்லீரலில் ஹெபாடிடிஸ் உண்டாகும். இவற்றில் பல ரகங்கள் உள்ளன. சிரோசிஸ் எனும் கல்லீரல் வீக்கம் தீவிரமான இந்த பாதிப்பு பல கல்லீரல் நோய்களின் கடைசி நிலையாகும். இதற்கு மது அருந்துவது முக்கிய காரணம்.

சைவ உணவு

ஆயுர்வேதம் கல்லீரலை 5 ‘ஜீரண அக்னிகளின்’ உறைவிடம் என்கிறது. கல்லீரல் பாதிப்புகளுக்கு மருந்தாக பத்திய உணவுகளை பரிந்துரைக்கிறது.
கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் பத்திய உணவு உட்கொள்ள வேண்டும்.

திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும். மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது.

பூண்டு நல்லது

சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும்.பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம்படுத்தும். கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய்யை 20 லிருந்து 30 கிராம் வரை தினசரி உபயோகிக்கவும். அதிக எண்ணெய் ஆபத்து என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபல் சுத்தம் இதயத்தை காக்கும்
Next articleகூந்தலுக்கு மெருகூட்டும் ஹேர் மாஸ்க்!