Home ஆரோக்கியம் பொது மருத்துவம் பல் சுத்தம் இதயத்தை காக்கும்

பல் சுத்தம் இதயத்தை காக்கும்

18

வாய் சுத்தத்திற்கும் இதயத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் இதயநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பற்களுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ரிச்சர்டு வாட் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசியர் வாட் கூறினார். தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாயில் புண் ஏற்பட்டால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் பராமரிப்பு செவிலியர் ஜூடி ஓ சுலிவான் தெரிவித்தார். தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதால் வாய்ப்புண்ணால் ஏற்படும் பாக்டீரியா தொற்று தடுக்கப்பட்டு இதயம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார். தங்களது ஆய்வு முடிவுகளை இதய நோய் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இது பற்றி மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாட் தெரிவித்துள்ளார். இனி இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் பற்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.