Home ஆரோக்கியம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருக்கும் போது கட்டாயம் செய்யக்கூடாதவைகள்!

சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருக்கும் போது கட்டாயம் செய்யக்கூடாதவைகள்!

22

சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், இடுப்புப் பகுதியில் வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும். இந்நிலையில் ஒருசில செயல்களை செய்தால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

இங்கு ஒருவருக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருந்தால் கட்டாயம் செய்யக்கூடாதவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்தால், விரைவில் சிறுநீர் பாதையில் உள்ள நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம்.

போதிய நீர் பருகாமை
சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் இருக்கும் போது, போதிய அளவில் நீரைப் பருக வேண்டியது அவசியம். இதனால் சிறுநீர் பையில் பாக்டீரியாக்களின் உருவாக்கம் தடுக்கப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் அந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டுவிடும்.

சிறுநீரை அடக்குவது
சிறுநீரை அடக்குவதே தவறான பழக்கம். அதிலும் சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று இருக்கும் போது அடக்கினால், அதனால் நிலைமை தான் மோசமாகும். எனவே சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிடுங்கள்.

சுயமாக மருந்துகள் எடுப்பது
சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் இருக்கும் போது, தானாக சரிசெய்கிறேன் என்று கண்ட மருந்து மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் சிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், மருத்துவரிடம் சென்று உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ஆன்டி-பயாடிக்குகளைத் தவிர்ப்பது
மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டி-பயாடிக்குகளை எடுத்த இரண்டு வேளையிலேயே சரியாகிவிட்டது என்று நிறுத்திவிடக்கூடாது. மருத்துவர் எத்தனை நாட்கள் எடுக்க சொன்னாரோ, அத்தனை நாட்களும் ஆன்டி-பயாடிக்குகளை எடுக்க வேண்டும்.

பாலியல் செயல்பாடு
முக்கியமாக சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கும் போது, பாலியல் உறவில் ஈடுபடாமல் இருப்பதே சிறந்தது. இதனால் நிலைமை மோசமாவது தடுக்கப்படும். இல்லாவிட்டால், அதுவே நோய்த்தொற்றை மோசமாக்கிவிடும்.