Home ஆரோக்கியம் 35 வயதிற்கு மேல் பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகள்

35 வயதிற்கு மேல் பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகள்

16

பெரும்பாலும், இந்தியக் குடும்பங்களின் பெண்கள் சுமைதாங்கிகளாகவே இருந்து வருகிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக நிகழ்ந்த வாழ்க்கை முறை மாற்றத்தாலும், பொருளாதாரத் தேவைகள் அதிகரிப்பாலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிக்குச் செல்ல நேர்கிறது. அதனால் குடும்பச்சுமை மட்டுமின்றி அலுவலகச் சுமையும் பெண்களை வதைக்கிறது.

இதனால் ஏற்படும் மன அழுத்தம், மாறிப்போன உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் உடலியல் மற்றும் மனம் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை வைட்டமின்கள், மினரல்கள் குறைபாடுதான்.

பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய் அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால், இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

ஷைனி ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்யத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற ‘பச்சை’க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

அடுத்ததாக உடற்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடற்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.