Home பாலியல் பெண்கள் பாலியல் தொடர்பான டாக்டர் சொல்லும் சில செய்திகள்

பெண்கள் பாலியல் தொடர்பான டாக்டர் சொல்லும் சில செய்திகள்

37

பெண்கள் பாலியல்:திருமணமான, திருமணமாகாத அல்லது தாயான பெண்களுக்கு தங்கள் மனதில் பல வித கேள்விகள் இருக்கும்; உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து பலவித பயங்களும் இருக்கும். சில நேரங்களில் மிகவும் தனிப்பட்ட முறையில் யாரிடமும் மனம் திறந்து கேட்கக்கூட இயலாத வகையில், சிற்சில பிரச்சனைகள் ஏற்படலாம்..! அப்படிப்பட்ட நேரங்களில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று தோன்றும்; ஆனால், பெரும்பாலான பெண்கள் மருத்துவரிடம் வினவ சங்கடப்பட்டுக் கொண்டு அப்படியே விட்டுவிடுவர். இது சரியான நடைமுறை அல்ல.

ஏதேனும் நடைமுறைக்கு மாறான சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை மருத்துவரிடம் கேட்டுத் தெளிவது நல்லது. அப்படி சில பெண்கள் தங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டுத் தெளிந்த தகவல்களை இந்த பதிப்பில் கொடுத்துள்ளோம்..! பெண்கள் கேட்ட கேள்விகளும், அதற்கான மருத்துவரின் பதில்களும் பற்றி இந்த பகுதியில் காணலாம்..!

பிறப்புறுப்பு சுத்தம்

15 நாட்களுக்கு முன்தான் எனக்கு திருமணம் ஆனது; மாதவிடாய் தோன்றி 20 நாட்களுக்குள் மீண்டும் இரத்தப்போக்கு விட்டு விட்டு வந்து கொண்டே உள்ளது. இது வரை இவ்வாறு நடந்ததில்லை, பயமாக உள்ளது. என்ன செய்வது என்று கூறுங்கள்?

இது மாதவிடாய் இரத்தப்போக்காக இருக்காது; உடலுறவினால் உண்டான காயம், அக்காயத்தின் மீது கிருமிகளின் தாக்குதலாக இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதித்து, மருந்து மற்றும் களிம்பு மூலம் குணப்படுத்த இயலாம்; அதிக நீர் குடிப்பது அவசியம். சுத்தமான ஆடை அணிய வேண்டும். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; உடலுறவுக்குப் பின், பிறப்புறுப்பை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்..!

2 ஆண்டுக்கு ஒருமுறை

மாதவிடாய் பிரச்சனைக்காக மருத்துவரை சந்தித்தேன்; பேப் ஸ்மியர் பரிசோதனை செய்து, அதில் ஏதேனும் வித்தியாசம் இருந்ததால் கோல்போஸ்கொப்பி மற்றும் பையாப்ஸி செய்துகொள்ள சொல்கிறார், அது அவசியமா?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு முன், அதில் உண்டாகும் வித்தியாசங்களை அறியவே பேப் ஸ்மியர் பரிசோதனை உதவுகிறது. அதன் பின் கோல்போஸ்கொப்பி மற்றும் பையாப்ஸி அவசியமாகிறது. பலமடங்கு பெரிதுபடுத்தி காண்பிக்கும் லென்ஸ் பொருத்திய கோல்போஸ்கொப்பில் காண்பதால் மிகச்சிறிய மாற்றத்தையும் ஆராய்ந்து அறிய முடியும்; அதிலிருந்து சதையை எடுத்து பரிசோதிப்பதே, பையாப்ஸி. இது எவ்வகையான சிகிச்சை தேவை என்பதை தீர்மானிக்க உதவும்; அனைவரும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை செய்து கொள்வது நோயை தடுக்க உதவும்.

மார்பில் திரவம்
3 வருடங்களுக்கு முன்னர் எனக்கு திருமணம் நடந்தது, குழந்தையில்லை. கடந்த ஓராண்டாக மாதவிடாய் வருவதில்லை. ஆனால், அடிக்கடி மார்பிலிருந்து பால் போன்ற திரவம் கசிந்து வருகிறது. எதனால் இது ஏற்படுகிறது? இதற்கும் கருத்தரிக்காமைக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ப்ரோலேக்டீன் எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தலே இதற்கு காரணம். இந்த ஹார்மோன், மார்பக இரத்த நாளங்களில், செயல்பட்டு பால் சுரக்க வைக்கிறது. ப்ரோலேக்டீன் அதிகமிருந்தால், அது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். சினைப்பையில், சினை முட்டைக்குமிழ்கள் ஏற்படாதபடி இச்செயல் தடுக்கின்றன. ஆகையால் மாதவிடாயும் வராது; கரு உருவாகாமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். ப்ரோலேக்டின் அளவைக் குறைக்க மாத்திரைகளும் மருந்துகளும் உள்ளன; தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின் எடுத்துக் கொள்ளவும்.

குடும்பக் கட்டுப்பாடு
48 வயதான எனக்கு 3 குழந்தைகள் உள்ளன; குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். 2 மாதங்களாக விட்டு விட்டு மாதவிடாய் வந்து கொண்டிருக்கிறது. இது புற்றுநோய்க்கு அறிகுறியோ என்று மிகவும் பயமாக உள்ளது.

இவ்வயதில் கருப்பையில் கருமுட்டை உற்பத்தி குறைந்து விடும். தேவைப்படும் ஹார்மோன் இல்லாததால் விட்டு விட்டு மாதவிலக்காகலாம். ஆனால் கருப்பையில் புற்று, கட்டி போன்றவை உள்ளதா என்பதை ஸ்கேன், எண்டோமெட்ரியல் பையாப்ஸி போன்ற சோதனைகள் மூலம் அறிந்து, உடனடி சிகிச்சை வாயிலாக குணப்படுத்த முயலலாம்.

மார்பக மாற்றங்கள்
மாதவிடாய் வருமுன்னரே எனக்கு மார்பகத்தில் குத்துவது போன்ற வலி எடுக்கிறது. மாதவிடாய் முடிந்ததும், வலியும் நீங்கிவிடுகிறது. இப்படி ஆவது எதனால்? சிகிச்சையால் குணப்படுத்த இயலுமா?

மாதவிடாயின் போது, மார்பக மாற்றம்உண்டாவது சாதாரண செயலே. மார்பகம் கல் போன்று கடினமாவதும், பெரிதாவதும், கைவைத்துப் பார்த்தாலே சிறுசிறு கோளங்கள் இருப்பதுபோல ஒரு உணர்வும், வலியும் கூட உண்டாகலாம். ப்ரொஜெஸ்ட்ரோன், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் மாதவிடாய்க்கு 3-4 நாளுக்கு முன் இரத்தத்தில் அதிகளவு காணப்படும்; இது மார்பகத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன்மூலம் உடலில் நீர் கோர்ப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் ஏற்பட்டவுடன், ஹார்மோன்களின் அளவு குறைவதால் மார்பகம் பழைய நிலைக்கு வந்து விடும். சிலசமயம் பழைய நிலையை அடைய 7 நாள்கள் கூட ஆகலாம்; இதற்கு சிகிச்சை என தனியாக எதுவும் தேவையில்லை; வலி அதிகமானால், வலிநிவாரணிகளை உபயோகப்படுத்தலாம்.