Home ஜல்சா உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..

41

அவளுக்கு 30 வயது. திருமணமாகி, ஒரு குழந்தையின் தாய். கல்லூரி படிப்பை முடித்தவள். படிக்கும் காலத்தில், ‘நன்றாக படிப்பவள். நல்ல பெண்’ என்று பெயரெடுத்தவள்.

அவளுக்கு 30 வயது. திருமணமாகி, ஒரு குழந்தையின் தாய். கல்லூரி படிப்பை முடித்தவள். படிக்கும் காலத்தில், ‘நன்றாக படிப்பவள். நல்ல பெண்’ என்று பெயரெடுத்தவள்.

அவள் இன்று கண்ணீரும் கம்பலையுமாக நடைபிணம் போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒரு சில வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், எந்நேரமும் அழுது அழுது மனநலம் பாதிக்கப்பட்டவளைப் போன்று காட்சியளிக்கிறாள்.

அவளுக்கு இப்படிப்பட்ட சோக நிலை ஏற்பட என்ன காரணம்? அந்த பெண் வாயாலே சொல்லக்கேட்போம்!

“நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். கல்லூரி படிப்பை முடித்ததும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். எங்கள் நிறுவனத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் என்னை விரும்புவதாக கூறினார். எனது பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்ததால் நான் முதலில் காதலுக்கு மறுத்தேன். ஆனால் அவர் என்னை துரத்தி துரத்தி காதல் தூதுவிட்டார்.

அப்போது ஒருமுறை, ‘என்னை திருமணம் செய்துகொள்கிறவர் என்னோடு எங்கள் வீட்டிலேதான் வாழவேண்டும். என் பெற்றோருக்கும் அவர் உபகாரமாக இருக்கவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் என் பெற்றோரிடமிருந்து என்னை பிரித்துவிடக் கூடாது’ என்றும் கூறினேன். அதற்கெல்லாம் அவர் சம்மதித்தார். அதன் பின்பு நானும் அவரை காதலித்தேன்.

பொதுவாக பல அவசரக்காதலன்கள், ‘காதலிக்கும்போதே பெண்களுக்கு ஆசையைத் தூண்டுவிட்டு அனுபவித்துவிடுவார்கள் என்றும்- காதலிகளின் பணத்திலே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வார்கள்’ என்றும் கேள்விப்பட்டிருக் கிறேன்.

அப்படி அவர் இல்லை. நாகரிகமானவராகவும், சுயநலமற்றவர் போலவும் நடந்துகொண்டார். அதனால் நான் அவரை கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். என் பெற்றோரும் என் தேர்வு சரியாக இருக்கும் என்று கருதி தீர விசாரிக்காமல் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டனர்.

எங்களுக்கு கோவில் ஒன்றில்வைத்து திருமணம் நடந்தது. சில மாதங்களில் நான் கர்ப்பமானேன். வேலையை விட்டுவிடச்சொன்னார். அவர் சொன்னபடியே வேலையை ராஜினாமா செய்தேன். குழந்தையையும் பெற்றெடுத்தேன்.

அந்த காலகட்டத்தில் அவர், வெளியூர் நிறுவனம் ஒன்றுக்கு அதிக சம்பளத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறினார். நானும் மகிழ்ச்சியோடு அனுப்பிவைத்தேன். மாதத்தில் சில நாட்கள் வந்து தங்கிவிட்டு செல்வார். ஒருசில மாதங்கள் பணம் தந்தார். பின்பு தரவில்லை.

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு ஆள்வைத்து ரகசியமாக விசாரித்தபோது, அவர் என்னை திருமணம் செய்துகொள்வதற்கு நான்கு வருடத்திற்கு முன்பே தனது சொந்த ஊரில் ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பதும், அவர்களுக்கு ஏற்கனவே குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போலீஸ், வழக்கு என்று அலைய என் மனதில் தெம்பில்லை. என் குழந்தையை, முதிய பெற்றோருக்கு பாரமாக விட்டுச்செல்லவும் எனக்கு மனமில்லை.

அதிகாலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் என் குழந்தையோடு வீட்டைவிட்டு வெளியேறி, ஆற்றில் குதித்தேன். நினைவு வந்தபோது நான் மருத்துவமனையில் படுத்திருந்தேன். என் குழந்தை மட்டும் இறந்திருக்கிறது. என்னை யாரோ காப்பாற்றி கரை சேர்த்துவிட்டார்கள்”

வருடங்கள் சில ஆனபின்பும் அந்த சோகத்தில் இருந்து அவளால் மீளமுடியவில்லை. ‘என் குழந்தையை நானே கொன்றுவிட்டேனே!’ என்று குமுறுகிறாள்.

தாய்மார்களே! எவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டாலும் இதுபோன்ற தவறான முடிவினை நீங்கள் எடுத்தால், குற்ற உணர்வோடு வெகுகாலம் கண்ணீர்விடவேண்டியதாகிவிடும்!