Home ஆரோக்கியம் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள்

நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள்

96

பொது மருத்துவம்:தற்காலத்தில் உள்ள தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்டன. ஆனால் அவற்றில் ஒரு பிரச்சனை உள்ளது. அதாவது ஒருவர் தான் பெறும் செய்தியை (அனுப்பியவரின் உணர்வில் அன்றி) தான் நினைக்கும்படி புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. தகவல் பரிமாற்றத்தில் மொழி மட்டுமின்றி உடல் மொழி, பேசும் தொனி, உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய அம்சங்களும் உள்ளன. ஒருவர் பேசும்போது, அவர் பேசும் சொற்களை மட்டுமின்றி, அவரின் உடல் மொழி போன்றவற்றையும் வைத்தே அவரைப் பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. இது பற்றி பல ஆண்டுகளாக பலரும் விரிவாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள், அப்படி இருந்தும் நிபுணர்களுக்கும் இது இன்னும் குழப்பமாகவே உள்ளது!

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த நிலையில், நாம் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்துப் பேசுவதே குறைந்துவிட்டது. அதிக செலவே இல்லாமல் வீடியோ அழைப்பு வசதிகள் மூலம் எளிதில் நேருக்கு நேராகப் பேச முடியும் என்றும் பலர் கூறலாம். ஆனாலும் அது நேரில் பேசுவதற்கு இணையாகாதல்லவா! கொஞ்சம் கொஞ்சமாக நாம் உறவுகளுடனும் நண்பர்களுடனும் நெருக்கத்தை இழக்கத் தொடங்கிவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

கண்கள் ஒருவரின் மனதில் உள்ளதைக் காட்டும் ஜன்னல் என்று கருதப்படுகிறது. ஒருவரின் உடல் மொழி, அவரின் உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், அவரின் கண்களில் காணப்படும் நகர்வுகள் ஆகியவற்றை வைத்தே அவரது எண்ணங்களைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.

ஆனால் இந்தக் கண்ணோட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ஆனால் ஒருவரின் முக பாவனைகள் அல்லது உடல் மொழியைக் காட்டிலும், அவரது குரலைக் கவனிப்பதன் மூலமே அவரது உணர்வுகளை இன்னும் சிறப்பாக நாம் புரிந்துகொள்ள முடியும் என்று யேல் பல்கலைக்கழகத்தில் உளவியலாளராக உள்ள மைக்கேல் க்ராஸ் கூறுகிறார். பேசுபவரின் குரலையும் அவரது முக பாவனைகளையும் ஒன்றாகப் பொருத்திப் பார்த்து இரண்டையும் கவனிப்பதே, அவருடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சரியாகப் புரிந்துகொள்ள சிறந்த வழியாக இருக்கும் என்று மைக்கேல் க்ராஸ் கூறுகிறார். ஆனால் இரண்டையும் சேர்த்து கவனிக்கும்போது கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் அது அந்த அளவுக்கு பலனளிக்காமல் போகலாம்.

அதாவது, ஒருவரது எண்ணங்களையும் உணர்வுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது, அவரது குரல், அவரது முக பாவனைகள் இரண்டையுமே ஒரே சமயத்தில் கூர்ந்து கவனித்து நீங்கள் புரிந்துகொள்ள முயன்றால், சிறப்பான முறையில் அவரது எண்ணங்களை உணரும் உங்கள் திறன் பாதிக்கப்படும். உங்களால் சரியாகக் கணிக்க முடியாமல் போகக்கூடும். ஆகவே குரலை மட்டும் கவனமாகக் கேட்பதே நல்லது. அதுமட்டுமின்றி, ஒருவர் தன் உணர்வுகளை மறைக்க முக பாவனைகளை மாற்றிக்கொள்ள முடியும் அல்லது மறைக்க முடியும். ஆனால் குரலில் அது நடக்காது.

நாம் தொலைபேசியில் பேசும்போது, ஒருவர் பேசுவதை வைத்தே அவரது உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, சுவாசம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து (மெதுவாக உள்ளதா வேகமாக உள்ளதா) எதிர் முனையில் பேசுபவர் பதற்றமாக இருக்கிறாரா என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். ஒரு நபர் அதிக வேகத்தில் உச்ச குரலில் பேசும் போது, அவர் சந்தோஷமாகவும் பரபரப்பாகவும் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஒருவர் பேசுவதை மட்டும் கவனித்தால் மட்டுமே, அவரது குரலில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள், பேசும் விதம் போன்றவற்றை நன்றாகக் கவனிக்க முடியும். அவை தான் அவர்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் நாம் அறிந்துகொள்ள பெரிதும் உதவுபவை.

குரலை வைத்தே பிறர் உணர்வுகளை அறிந்துகொள்ளும் கலையின் முதன்மையான திறன் பேசுவதைக் கவனிப்பது. அந்தத் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது?

பெரிய இரகசியம் எதுவுமில்லை! ஒரே நாளில் இதில் நிபுணராகிவிட உதவும் வித்தை எதுவும் இல்லை! பிறர் நம்மிடம் பேசும்போது, அவரது முக பாவனைகள், உடல்மொழி, சைகைகள் போன்றவற்றைக் கவனிப்பதை நிறுத்திவிடும்போது, தானாகவே நம் கவனம் முழுதும் அவரது குரலில் குவியும். பிறகு அவரது குரலை வைத்தே நம்மால் பல விஷயங்களை உணர்ந்து அறிந்துகொள்ள முடியும்.

நாம் பிறர் பேசுவதைக் கவனிக்கும்போது, அவரது உணர்வினைப் புரிந்துகொள்ளும் ஒரு பக்குவத்தில் இருப்போம், இதனால் அவர்கள் மீது நாம் அக்கறையாக இருப்போம், இதனால் அவர்களின் உணர்வுகளை நம்மால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இது உறவுகள் மேம்படவும், சந்தோஷமான வாழ்க்கை வாழவும் உதவுகிறது.