Home ஆரோக்கியம் பொது மருத்துவம் இளைஞர்களைவிட முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் வர காரணம்

இளைஞர்களைவிட முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் வர காரணம்

132

பொது மருத்தவம்:ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக ஆண்டு ‘போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாகத் தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில், இளைஞர்களைவிட, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக ‘இறுக்கமான தோள்பட்டை’ எனப்படும் ‘ப்ரோசன் ஷோல்டர்’ உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. சிறுவர்கள் புத்தகப்பை மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூடை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது தோளும், முதுகும்தான். ஆனால், நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பு அல்ல.

நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டை போல் கூடுதல் சுமையை தாங்கும் எலும்பு அல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும்.

இதன் அறிகுறியாக, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, இரவில் தூங்கும்போது எந்தப் பக்கம் வலி இருக்கிறதோ, அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலி போன்றவை ஏற்படும்.

இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்களில், ஐந்து பேரில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ‘ப்ரோசன் ஷோல்டர்’ பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரிசெய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை (ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி) மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்தும்போது, கையை முன் பின்னாக சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.

இதுதவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்தும் போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது.