Home குழந்தை நலம் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

28

குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். பள்ளி, ட்யூஷன், திறன் வகுப்புகள், வீடு, உறவினர்கள்,உளவியல் நிபுணர் நப்பின்னை நண்பர்கள் என இந்தச் சூழல்களில் எல்லாம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவற்றை விளக்குகிறார், உளவியல் நிபுணர், முனைவர் நப்பின்னை.

* ”ட்யூஷன், பாட்டு, நடனம் என குழந்தையை அனுப்பும் வகுப்புகள் அமைந்துள்ள இடம், அதன் பயிற்சியாளர், அங்கு பணியாற்றுபவர்கள் என அனைத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டு, பின்னரே குழந்தையை அங்கு அனுப்புவது பற்றி முடிவெடுக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் குழந்தையை வீட்டினர் யாராவது அழைத்துச் சென்று விடுவதும், மீண்டும் அழைத்து வருவதும் முக்கியம். பிறகு, அவ்வப்போது பெற்றோர்கள் அங்கு சென்று கண்காணிப்பதும் அவசியம்.

* ஆண், பெண் நண்பர்களிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம், பயிற்சியாளர்களிடம், சமூகத்தில் அன்றாடம் சந்திப்பவர்களிடம் என ஒவ்வொருவரிடம் குழந்தை பழகக்கூடிய விதம், எல்லையை தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.

* இன்றைக்கு பாலியல் கல்வியை பலரும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான், பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலுக்குக் காரணமாக இருக்கிறது. பாலியல் கல்வியை பள்ளிகளில் கற்பிக்க அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வயது மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 10 வயதுக் குழந்தைக்கு, அப்போது அதன் உடலில் நடைபெறும் மாற்றங்களுக்கான பயாலஜிக்கல் விளக்கங்களை, அது புரிந்துகொள்ளும் மொழியில் விளக்க வேண்டும். அப்போது எதிர்பாலினத்தவர் குழந்தையிடம் எந்த எல்லைக்குள் பழக அனுமதிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான், ஓர் ஆண் தன்னிடம் என்ன கண்ணோட்டத்தில் பழகுகிறார் என்பதை அதனால் அறிந்துகொள்ள முடியும்.

விளையாடும் பெண் குழந்தைகள்

* குழந்தைகளை தற்காப்பு வகுப்புகள் அனுப்பலாம். அல்லது, சீண்டலுக்கு உட்பட்டால் கத்துவது, கடிப்பது, அடிப்பது போன்ற தற்காப்பு பயிற்சிகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அப்போதுதான் ஆபத்தான சூழலில் இருந்து வெளிவரும் தைரியம் அவர்களுக்குக் கிடைக்கும்.

* தாய்-தந்தை, அண்ணன்-தம்பி இவர்களைத் தவிர ஒருவர் குழந்தையிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகுவது, உடலில் தொட்டுப் பேசுவது, பரிசுப்பொருட்களை கொடுத்து நெருங்கிப் பழகுவது, அதீத அக்கறையுடன் பேசுவது என நடந்துகொண்டால், ஆரம்பகட்டத்திலேயே தங்களிடம் தெரிவிக்கும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லி வைக்கவும். அதை உறுதி செய்தபின், சம்பந்தப்பட்ட நபரை எச்சரிக்கவும் தவற வேண்டாம்.

* அம்மா, அப்பா முன்னிலையில் பழக்கப்பட்ட நபர் அன்பு காட்டும் விதமாக, ‘குட் டச்’ ஆக உன் உடல் மீது கை வைக்கலாம். ஆனால், யாரும் இல்லாத சூழலில் மற்றவர்கள், அது யாராக இருந்தாலும், அவர்கள் ‘குட் டச்’ செய்தாலும்கூட, அவர் கையைத் தட்டிவிட்டு விலக வேண்டும். அதையும் மீறி அவர் உன் மீது கைவைத்தால், சத்தம் போடு. ஓடிச்சென்று அருகில் இருப்பவர்களிடம் சொல். அம்மா, அப்பாவிடம் சொல்’ என்று விளக்கமாக அறிவுறுத்தவும்.

* பல குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அச்சத்தினால் வெளியில் சொல்வதில்லை. அதனால் தினமும் குழந்தையின் நடவடிக்கை, செயல்பாடு, உடல்நிலை, உணர்வுகளை கண்காணிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக பெண் குழந்தைகள் நடந்துகொண்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

பள்ளி செல்லும் பெண் குழந்தை

* தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது, யாரோடு எல்லாம் குழந்தை பழகியது, சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் ஏதாவது நடந்ததா என்பதை பெற்றோர்கள் பொறுமையுடன் கேட்க வேண்டும். ‘உனக்கு ஒரு பிரச்னை வந்தால் உடனடியாக எங்ககிட்ட வந்து சொல்லு. உன் மேல எந்த தப்பும் இல்லாத பட்சத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. தைரியமா இரு’ என்று குழந்தைகளுக்கு நம்பகமான நம்பிக்கை ஊட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பகட்டத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள், பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு புரிதலுடன், தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போது, தனக்கோ, தன் தோழிக்கு ஏதாவது நடந்தால்கூட, தன் பெற்றோர்களிடம் அதைச் சொல்லி, பிரச்னையை சரிசெய்ய முடியும்.

* ஒருவேளை குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தால், அச்சம்பவத்தில் இருந்து அது முழுமையாக வெளிவர பெற்றோர்கள் பலம் கொடுக்க வேண்டும். மாறாக நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும்படியே நடந்து கொள்வது, அச்சம்பவத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டுவது, ட்யூஷன், அவுட்டிங் என்று அனைத்தையும் முடக்கி அவர்களை வெளியுலகில் இருந்து துண்டிப்பது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வது… இவையெல்லாம் குழந்தைகளுக்கு இன்னும் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

* குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் தந்தவர்கள் பற்றி காவல் துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும். அவமானமாக நினைத்தோ, அச்சத்தினாலோ அதைச் செய்யாமல் விட்டால், அதே துன்புறுத்தலை அந்தக் குழந்தைக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ சம்பந்தப்பட்ட மோசமான நபர் மீண்டும் தரும் அபாயம் இருக்கிறது.

* குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களை, அவர்களின் பின்புலன்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

ஒரு விஷயம் நடந்த பின்னர் வருத்தப்படுவதைவிட, முன்னரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறார், நப்பின்னை.