Home குழந்தை நலம் குழந்தைகளை வளரவிடுங்கள்.. வாழ்ந்துகாட்டுங்கள்..

குழந்தைகளை வளரவிடுங்கள்.. வாழ்ந்துகாட்டுங்கள்..

15

captureகுழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுங்கள். அவர்களிடத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள். முக்கியமாக உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகளை அவர்களிடத்தில் திணிக்காதீர்கள். ஏனெனில் குறுகிய காலகட்டத்தை கொண்ட குழந்தை பருவத்தை ஒருபோதும் உங்களால் திருப்பி கொடுக்க முடியாது.

துறுதுறுவென்று உற்சாகத்தோடு ஓடி விளையாடி அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை கண்டு ரசியுங்கள். நம்மைவிட அதிக சந்தோஷத்துடன் உலா வருபவர்கள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் வெளிப்படும் மகிழ்ச்சியை கண்டு உங்கள் மனதை இலகுவாக்குங்கள். அதைவிடுத்து அவர்களிடம் கண்டிப்பு காட்டி உங்கள் மனதை இறுக்கமாக்கிக்கொள்ள வேண்டாம்.

நீங்கள் நினைப்பதையே உங்கள் குழந்தைகளும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவே அமையும். அவர்களுடைய சிந்தனை ஆற்றலையும் சுருங்க செய்துவிடும். அவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட விடுங்கள். உங்கள் கருத்துக்களை ஒருபோதும் அவர்களிடத்தில் திணிக்காதீர்கள். நீங்கள் சிந்திக்காத செயல்களையும் அவர்கள் செய்யும் விதத்தில் அவர்களை தயார்படுத்துங்கள்.

அதே நேரத்தில் குழந்தைகள் அழுது அடம்பிடித்து காரியங்களை சாதிப்பதற்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து பாசத்தை பொழியவும் செய்யாதீர்கள். எது சரியானதோ அதை மட்டும் செய்ய அனுமதியுங்கள். அதனால் உங்கள் மீது கசப்புணர்வு தோன்றும் சூழ்நிலை ஏற்பட்டாலும் கவலைப்படாதீர்கள்.

உங்களுடைய செயல்பாடுகளை கூர்ந்து கவனித்துதான் அவர்கள் தங்களை வழிநடத்திக்கொண்டிருப்பார்கள். அதனால் உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக, திறமையானவர்களாக, புத்திசாலித்தனம் கொண்டவர்களாக வளர்க்க ஆசைப்பட்டால் அதற்கு முன்மாதிரியாக நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்.