Home ஆரோக்கியம் கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்…

கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்…

29

கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்று தான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடைபெறுகிறது. கருக்கலைத்தல் காயத்தை ஏற்படுத்துமா? காயம் என்றால் அது உடல் ரீதியான காயம் என்றில்லை, அது மன ரீதியான காயமாக கூட இருக்கலாம். கருக்கலைத்தலைப் பற்றி பல வாக்குவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கருக்கலைப்பு செய்வதால் பெண்களுக்கு மன ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கருக்கலைப்புக்கு பின் ஒரு பெண் மன ரீதியாக காயங்களை பெறுகிறாள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

கருக்கலைப்பு என்பது பெண்களிடம் பல விதமான அலை எழுச்சிகளை உண்டு பண்ணும். அதனால் குற்ற உணர்வு, படபடப்பு, மன அழுத்தம், எதையோ இழந்த உணர்வு, கோபம், ஏன் தற்கொலை போன்ற பல உணர்சிகளுக்கு கூட ஆளாவார்கள். கருக்கலைப்பைப் பற்றி தன்னுடைய உணர்வை புரிந்து கொள்ளவே பல பெண்களுக்கு கடினமாக இருக்கும். அதனால் தான் அவ்வகை பெண்கள் பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றனர். குற்ற உணர்வு மற்றும் எதையோ இழப்பதை போன்ற உணர்வு தான், பல பெண்கள் தங்களை தாங்களே பழிப்பதற்கும், காயப்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகிறது.

கருவை கலைத்த பின் ஏற்படும் வருத்தம் தீர்ந்தவுடன், சில பின் விளைவுகளை பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதனை கையாள பெண்கள் சிலவற்றை பின்பற்ற வேண்டும். இப்போது கருக்கலைப்புக்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.

வலியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

முதலில் அடக்கிய உணர்ச்சிகளை எல்லாம் வெளிக்கொண்டு வர வேண்டும். பொதுவாக வெட்கம், குற்ற உணர்வு மற்றும் சிசு இழப்பு போன்ற உணர்வுகளையெல்லாம் உங்களுக்குளே அடக்குவீர்கள். இப்படி உங்களுக்குள் ஒழித்து வைத்திருக்கும் உணர்வுகளை வெளியில் கொட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான், மனம் அந்த இழப்பை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அடையும்.

கோபத்தை அறிந்து கொள்ளுங்கள்

கருக்கலைப்பு செய்யும் பல பெண்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தயங்குவார்கள். உண்மையிலேயே அவர்கள் முழு மனதுடன் இந்த கருக்கலைப்பை செய்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் அவர்களை கருக்கலைப்பு செய்ய தூண்டியிருக்கும். அதனால் ஏற்படும் கோபத்தை, அவர்கள் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்வார்கள். இப்படி அடக்கி வைத்திருக்கும் கோபம் ஒரு நாள் வெடித்து பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும். அதனால் கருக்கலைப்பு செய்த பெண்கள் கோபத்தை வெல்வது மிகவும் முக்கியம்.

கவுன்சிலிங் செல்லுங்கள்

கருக்கலைப்பின் வலியை ஒரு பெண் அனுபவித்த பின், அந்த வேதனையை திரும்பி பெற இயலாது. ஆனால் கண்டிப்பாக அந்த வலியை பற்றி யாரிடமாவது பேசலாம். அதனைப் பற்றி உங்கள் கணவனிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ பேச தயக்கமாக இருந்தால், கவுன்சிலிங் செய்யும் வல்லுனரிடம் செல்லலாம். ஏனெனில் கவுன்சிலிங் கொடுப்பவர் உங்கள் வலியை போக்க சில தெரபிகளை பரிந்துரைப்பார்கள். மேலும் மன அழுத்தத்தை நீக்க உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள்.

எனவே கருக்கலைப்பு செய்த பின் மன ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை நீக்க மேற்கூறிய வழிகளை பின்பற்றுங்கள். அப்படி செய்தால் உங்கள் வலி சீக்கிரமாகவே குறையும்.