Home ஆரோக்கியம் மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..

மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..

22

“மார்பக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டும்”

இயற்கையின் படைப்பில் பெண்கள் அதிசயமானவர்கள் மட்டுமல்ல, அபூர்வமானவர்களும்கூட! இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது. பெண்ணின் இந்த இரண்டு உறுப்புகளும் மனித இன சுழற்சிக்கு அச்சாணி போன்றவை. கருப்பை உடலுக்கு உள்ளே உள்ள உறுப்பாக அமைந்துவிட்டதால் அதன் தோற்றமோ, இயக்கமோ யாருடைய கவனத்தையும் ஈர்ப்பதில்லை. ஆனால் மார்பகங்கள் அப்படியல்ல, வெளி உறுப்பாகிவிட்டன. அதனால் அவை பெண்ணின் உடல் அமைப்புக்கும்- தோற்றத்திற்கும் முக்கிய காரணமாகிவிட்டன.

முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம். பெண் குழந்தை, சிறுமியாகி பத்து வயதைத் தொடும்போது மார்பகங்கள் வளருவதற்கான அறிகுறிதென்படும். 15 வயதுக்குள் பெரும்பாலான சிறுமிகள் பூப்படைந்து விடுவார்கள். அப்போது மார்பகங்கள் ஓரளவு வளர்ச்சியடைந்துவிடும். சினைப்பையில் இருந்து முட்டை வளர்ந்து, முதிர்ந்து, வெளியாகுவதே பூப்படைதலின் அடிப்படை. அப்போது ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண்மைக்கான ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். அந்த ஹார்மோனின் தூண்டுதலே மார்பகத்தை மெல்ல மெல்ல வளர்க்கிறது.

மார்பகங்கள் வளர்ச்சியடையும் காலகட்டம், அந்த மாற்றத்தை சந்திக்கும் எல்லா பெண் களிடமும் பல்வேறுவிதமான குழப்பங்களை உருவாக்குவதோடு கேள்விகளையும் எழுப்பும். அப்போது அவர்கள் பெரும்பாலும் சக வயது தோழிகளிடமே அது பற்றி பேசுவார்கள். அவர்கள் தங்களுக்கு தெரிந்ததை உண்மைபோல் சொல்லிவிடுவதால், அந்த பதில் சம்பந்தப்பட்ட பெண்ணை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குழப்பத்தை தீர்க்க, தாயார் தாமாகவே முன்வரவேண்டும். மகள் 15 வயதை எட்டும்போது அவளிடம் வெளிப்படையாக மார்பகங்களின் வளர்ச்சி பற்றி பேசவேண்டும்.

ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, சிற்பங்கள் அனைத்திலும் பெண்களுக்கு வட்டவடிவமாக மார்பகங்களை வடித்திருப்பதை பார்த்திருப்பாள். தனக்கும் அப்படித்தான் அமையும் என்று எதிர்பார்ப்பாள். அப்படி தனக்கு அமையாதபோது அதை ஒரு குறையாக அவள் கருதுவாள். ஆனால் உடற்கூறு அடிப்படையில் பெண்களுக்கு வட்டவடிவ மார்பகம் அமைவதில்லை. உடலியல் அடிப்படையில் ‘டியர் டிராப்’ எனப்படும் கண்ணீர்த் துளி வடிவத்தில்தான் மார்பகங்கள் உருவாகும். இது மேலே இருந்து கீழ்நோக்கி சற்று சரிந்த நிலையில் காணப்படும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மையை தாயார் எடுத்துச் சொல்லவேண்டும்.

அதுபோல் இரண்டு மார்பகங்களும் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு கொண்டிருப்பதாக நினைத்து பெரும்பாலான பெண்கள் அதற்காக கவலைப்படுகிறார்கள். இதுவும் ஒரு தேவையற்ற கவலையே! மனித உடலில் கண், காது, கை போன்று இரண்டாக இருக்கும் எந்த உறுப்புகளும் துல்லியமாக ஒரே அளவில் இருக்காது. அதே போன்று மார்பகங்களிலும் லேசான வித்தியாசம் இருக்கவேசெய்யும். ஒன்றுக்கொன்று அதிக வித்தியாசம் இருந்தால் மட்டுமே அதை கவனத்தில்கொண்டு டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்பதை தாய்மார்கள் வலியுறுத்த வேண்டும்.

வளரிளம் பருவ பெண்கள் தற்போது பெரும்பாலும் உணவு முறையாலும், உடல் வியர்க்கும் அளவுக்கு விளையாடாததாலும் குண்டாக இருக்கிறார்கள். அவர்களது உடல் குண்டாகும்போது அதற்குதக்கபடி மார்பகங்களும் பெரிதாகும் என்ற உண்மையை அவர்களிடம் தாய்மார்கள் எடுத்துச்சொல்லி, முறையான உணவுப் பழக்கத்திற்கு உட்படுத்தவேண்டும். கிரீம்களை பயன்படுத்துவது, மசாஜ் செய்வது போன்றவை மூலம் மார்பகங்களின் அளவிலோ, நிலையிலோ எந்த மாற்றத்தையும் உருவாக்கமுடியாது என்பதையும் மகளுக்கு தெளிவாக தாய் புரியவைக்கவேண்டும். அதோடு மார்பகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமையையும் உணர்த்தி சரியான முறையில் பாதுகாக்கவும் சொல்லித்தர வேண்டும்.

பத்து வயதில் அரும்பத் தொடங்கும் மார்பகங்கள் 18 வயதில் முழு வளர்ச்சியை எட்டிவிடும். குழந்தைக்கு பால் புகட்டுவதற்கான முழுமையை அப்போதே எட்டிவிடும். ஆனால் உடல் எடைக்கு தக்கபடியும், கர்ப்பகாலம் போன்ற சூழ்நிலைக்கு தக்கபடியும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் நுட்பமான கட்டமைப்பை கொண்டவை. அதில் 60 சதவீதம் அளவுக்கு கொழுப்பு அடங்கியிருக்கிறது. ஏராளமான பால் சுரப்பிகளும், பால் சுரப்பு குழாய்களும் அமைந்திருக்கின்றன. மூளையின் இயக்கம் மற்றும் தூண்டுதலால் பிரசவகாலத்தில் பால் மார்பகத்திலே உற்பத்தியாகி, காம்புகள் வழியாக குழந்தைக்கு உணவாகிறது.

மார்பகங்கள் குழந்தைகளுக்கு பால்புகட்டு வதற்காக படைக்கப்பட்டவை என்ற நிலை யையும் தாண்டி பெண்களின் கம்பீரத்தின் அடையாளமாகவும், தோற்றப்பொலிவுக்கு துணைபுரிவதாகவும், தன்னம்பிக்கைக்குரியதாகவும் காலத்தால் மாற்றப்பட்டிருக்கிறது. பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் தங்கள் தோற்றப்பொலிவுக்கு அது இடைஞ்சலாக இருப்பதாக கருதுகிறார்கள். அதை மற்றவர்கள் கிண்டலாக்கிவிடுவார்களோ என அஞ்சி சமூகத்தின் முன்னால் செல்லத் தயங்கி தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள்.

அதனால் அவர்களது வளர்ச்சிக்கும், திறமைக்கும் தடைவிழுந்துவிடுகிறது. அந்த தடையால் அவர்கள் படித்த கல்விக்கு ஏற்ற பலனை அனுபவிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இன்னொருபுறத்தில் அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களால் பெண்கள் பல்வேறு விதமான உடல் அவஸ்தைகளையும் எதிர்கொள்கிறார்கள். தோள்வலி, முதுகுவலி, கூன்விழுதல், மார்பகங்களின் அடியில் தொற்று ஏற்படுதல் போன்ற தொந்தரவுகள் அவர்களை கஷ்டப் படுத்துகின்றன.

அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட நவீன மருத்துவ சிகிச்சைகள் கைகொடுக்கின்றன. அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கி அழகுபடுத்திவிடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்பையும், பால் சுரப்பிகளையும் நீக்கம் செய்தாலே போதுமானது. மார்புகளை சிறிதாக்கும்போது ஆபரேஷன் செய்த கோடு தெரியும்.

மார்பகங்களை பெரிதாக்க, அதன் கீழ்ப் பகுதியில் கீறி, உள்ளே சிலிக்கான் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதனால் தழும்பு எதுவும் வெளியே தெரியாது. மேற்கத்திய நாடுகளில் மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சையை பெறுபவர்களே அதிகம். ஆனால் இந்தியாவில் மார்பகத்தை சிறிதாக்க விரும்புபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

மார்பகத்தை சிறிதாக்கும்போது வடு தெரியும் என்பதால் திருமணத்திற்கு பின்பு கணவர் ஒப்புதலோடு இந்த அழகு சிகிச்சையை பெண்கள் மேற்கொள்வதே சிறந்தது. முன்பு மார்பக அழகு சிகிச்சையில் பெண்கள் போதுமான விழிப்புணர்வு பெறவில்லை. அதனால் பயத்தோடும், பதற்றத் தோடும் அணுகினார்கள். இப்போது தங்கள் உடலுக்கும், மனதுக்கும், சவுகரியத்திற்கும் எது எதையோ அதை தேர்ந்தெடுத்து செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மார்பகத்தை பெரியதாக்கும்போது புற்றுநோய் ஏற் படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சிகளில் அப்படி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மார்பகத்திற்குள் பாலியூரித்தீன் அல்லது சிலிக்கான் ஜெல்லில் உருவான வழுவழுப்பான பொருளை இணைக்கிறோம். நமது உடலுக்குள் எந்த செயற்கை பொருளை இணைத்தாலும் தொற்று ஏற்படும்.

அதனால் மிகுந்த கவனத்தோடு இதனை உள்ளே செலுத்தவேண்டும். பொருத்தி இரண்டு வருடங்களான பின்பு அந்த இணைப்பின் மீது ஒருவித கோட்டிங் உருவாகும். ஒரு சிலருக்கு அந்த கோட்டிங் உருவாகி, சுருங்கத் தொடங்கினால் மார்பகம் வலிக்கத் தொடங்கும். அப்போது மீண்டும் ஆபரேஷன் செய்து அதை நீக்கிவிட்டு, 4 மாதங்கள் கழித்து மீண்டும் இணைக்க வேண்டும். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, அவர்கள் உடலிலே அதிகமாக இருக்கும் கொழுப்பை எடுத்து, இணைத்தும் மார்பகங்களை பெரிதாக்கலாம். ஊசி மருந்து மூலம் மார்பகங்களை பெரிதாக்குவது என்பது நல்ல பலன்களை ஏற்படுத்தாது.

பெண்களின் மார்பகங்கள் அவர்களது மனநிலையோடும், உடல்நிலையோடும், தன்னம்பிக்கையோடும் தொடர்புடையது என்பதால், அது பற்றிய பாலியல் கல்வி சார்ந்த விழிப் புணர்வை பெற்றோரும், கல்வி நிலையங்களும் வழங்கவேண்டும். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து கல்லூரி மாணவிகளிடம் இதுபற்றிய விழிப் புணர்வை உருவாக்கி வருகிறோம். அவர் களுக்கு உடலியலின் அடிப்படைக்கூறு களையும், அதன் விஞ்ஞான உண்மைகளையும் எடுத்துக்கூறு கிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

Previous articleஅந்த இடத்தில் உண்டாகும் அரிப்பை போக்கும் மூலிகை
Next articleஉடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது ஏரோபிக்ஸ் பயிற்சி