Home பாலியல் மகளிர்க்கு மட்டுமல்ல . . .!

மகளிர்க்கு மட்டுமல்ல . . .!

44

தெருவில் தன் வயசினையொத்த சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண்குழந்தை திடீரென தன் உடல் வெப்பமடைந்து லேசான வலியுடன், விளையாடுவதை நிறுத்தினாள். பக்கத்திலிருந்த பையன் உன் பாவாடையில் இரத்தம் என்று காட்டினான். வீட்டின் வெளியே குப்பையை கொட்ட வந்த அம்மா இதை கவனித்தாள். தன் மகளை தரதரவென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். வீடு மகிழ்ச்சியும், துக்கமும் ஆக இருந்து கொண்டிருந்தது. இந்த வயசிலேயே குத்த வைச்சிட்டாளே நான் என்ன செய்வேன்? எப்படி பாதுகாப்பேன்? சனியன் சனியன் நானெல்லாம் 15 வயசிலதான் ஆனேன். இதப்பாரு 11 வயசிலேயே என்று சொல்லிக்கொண்டே பிள்ளையை கட்டிக்கொண்டு அழுதாள். இதுபற்றி எதுவும் புரியாமல் பிள்ளை திருதிருவென்று முழித்துக் கொண்டு பாதியில் விட்டுவந்த விளையாட்டை நினைத்துக் கொண்டிருந்தது.

ஆண், பெண் பாகுபாட்டை காட்டத்தொடங்கும் முதல் நிகழ்வு. பெண்ணிற்கு போடப்படும் முதல் தடைக்கல். இன்னும் 40 ஆண்டுகள் படப்போகும் அவஸ்தைதான் முதல் தடவையாய் வந்துவிட்ட மாதவிடாய்.

மாதவிலக்கின்பொழுது கருப்பையில் இருந்து 28 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமும், வழவழப்பான திரவமும் பெண்குறி வழியாக வெளிவரும்; இந்நிலை சாதாரணமாக 3லிருந்து 7 நாட்கள் வரை நீடித்துக் காணப்படும். மாதவிலக்கு பெண் பூப்பெய்தியதிலிருந்து மெனோபாஸ் என்று சொல்லப்படும் சூலக ஓய்வு வரை சுமார் 45 வயதுவரை நீடித்து இருக்கும். பெண்களுக்கு பேறு காலங்களில் மாதவிலக்கு இராது. அதேபோல் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கும்பொழுதும் பொதுவாக 100க்கு 80 சதவீதம் மாதவிலக்கு ஏற்படாது.

மாதவிலக்கின்போது இரத்தம் பொதுவாக 2 முதல் 4 அவன்ஸ் அளவு வெளியேறும். மாதவிலக்கு ஏற்படக் காரணம் செக்ஸ் ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன்களே கருப்பை மீது வேலைசெய்து மாதவிலக்கு ஏற்படச் செய்கின்றன. ஆரம்பத்தில் மூளை அடிச்சுரப்பி ஹார்மோன் சூற்பையை இயக்குவதனால் ஈஸ்ட்ரோஜனும் உட்புறச் சுவரைத் தடிக்கச் செய்கிறது.

மாதவிலக்கு தொடங்கும் முதல் நாளிலிருந்து தொடங்கி 15 நாள் வரை இதன் உட்புறத்தோல் மெதுவாகத் தடித்துக் கொண்டு போகிறது. தடித்த கோழைப் படலத்திற்கடியில் இருக்கும் இரத்தக்குழலில் இரத்தம் அதிகமாகப் பாய ஆரம்பிக்கும். இதில் உள்ள இரத்தக் குழியின் அடர்த்தியும் தோலின் தடிப்பும் சேர்ந்து 1//4 செ.மீ. கனத்திலிருந்து அடுத்த மாதவிடாயின் நாள் நெருங்கும் நேரம் 1/2 செ.மீ. கனத்தை அடைகிறது. இக்காலத்தில் மெதுவான பஞ்சு போன்ற மெத்தையை கருப்பையானது தன்னுடைய உட்புறத்தோலில் தயார் செய்யும். இந்நிலை உருவாகக் காரணம், கருத்தரித்தால், கருவை இப்பஞ்சனை போன்ற உட்தோலில் மெதுவாகப் பொருத்தி வைக்கவே ஆகும். அப்படிக் கருத்தரிக்காவிட்டால் கருவுக்காகச் செய்யப்பட்ட இப்பஞ்சனைகள் மிக வருத்தத்தோடு கலைய ஆரம்பித்து விடுகிறது.

அதாவது கருப்பையின் உட்புறத்தோல் அப்படியே தற்கொலை பண்ணிக்கொள்வது போல் சிறுசிறு துண்டுகளாக வெளிப்பட ஆரம்பிக்கின்றது. இப்பொழுது அதனுடைய அடியில் மிக வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த இரத்தக்குழல் வெடித்து அதிலிருந்து இரத்தம் வெளிவர ஆரம்பிக்கும். இதுவே மாதவிலக்கு ஆகும். மறுபடியும் அடுத்த மாதமும் உருவாகப் போவதாக ஆசைப்பட்டுக் கொண்டு கருப்பை பஞ்சணையைத் தயாரிக்க ஆரம்பித்துவிடும். இப்பஞ்சணை கருத்தோன்றாத பொழுது கலையும். கருத்தரித்தால் மாதவிலக்கு தோன்றாது. கருவளரத் தொடங்கும். இதுவே உலகம் வாழ, தழைக்க நடைபெறும் நிகழ்ச்சி ஆகும்.

மாதவிலக்கின்போது கவனிக்க வேண்டியவை : –

இச்சமயத்தில் முதலில் மலச்சிக்கலுக்கு இடந்தராமல் இருக்க வேண்டும். பிறப்பு உறுப்புக்களை சுடுநீரில் சிறிது கிருமி நாசினி மருந்து கலந்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நல்ல சுத்தமான துணியையோ, நல்ல நாப்கின்களையோ உபயோகிக்க வேண்டும். துணி உபயோகித்தால் அவற்றைச் சுடுநீரில் துவைத்து நல்ல வெயிலில் உலர்த்தி உபயோகிக்க வேண்டும். மேலும் வெப்ப நாடுகளில் அதிக நாட்களும், குளிர் நாடுகளில் கொஞ்ச நாட்களுமாக மாதவிலக்கு இரத்தக்கசிவு ஏற்படும். உள்துணியை இரண்டு மணிக்கொரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் இரத்தம் அதிகமாக வெளிவரும் பொழுது பாதுகாப்பு உள்துணி காய்ந்தவுடன் கடினமாகி நடக்கையில் உடலுறுப்புகளில் உராய்ந்து வேதனை தரும். இக்காலங்களில் கட்டாயம் இருவேளை குளிப்பது நல்லது.

மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு தேவை. குளிக்கக் கூடாது. உடற்பயிற்சி கூடாது, மங்கலப் பணிகளில் பங்கேற்கக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் உள்ளன. பெருமளவில் மாதவிலக்குக்கு முன்னமோ அல்லது தொடக்கத்திலோ சில அறிகுறிகள் தோன்றும். மார்பகங்கள் சற்று பெரிதாகத் தோன்றும். வலிகூட இருக்கலாம். மன இறுக்கம், சோர்வுணர்வு போன்ற உளவியல் அறிகுறிகளும் காணப்படலாம். இவை கவலைப்பட வேண்டாதவை. தாமாகவே சரியாகிவிடும்.

மாதவிலக்குக்கு இடைப்பட்ட காலத்திலும் சிலதுளிகள் வெளிப்படலாம். இது அண்ட அணு சூற்பையிலிருந்து வெளிவருவதேயாகும். இதனைத் தொடர்ந்து வயிற்றில் ஒரு பக்கம் வலி உருவாகக் கூடும். இதுபோன்ற நிலை மூன்று அல்லது நான்கு மாதங்கள் தொடர்ந்தும், பிறகு மறைந்தும் ஏழு எட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தோன்றவும் கூடும் இது இயற்கை. இவற்றைப் பதட்டமின்றி கவனித்து வருவது நல்லது. மகளிர் நலவியல் மருத்துவர்களுக்கு சில நோய்க்குறிகளில் இந்தத் தகவல் பயன்படும். கருவுறுதலைத் திட்டமிட விரும்புவோருக்கும் இக்குறிப்புப் பயன்படும்.

மாதவிலக்குக்கு முன்னர் தோன்றும் வலிதான் பெண்களுக்குத் தோன்றும் நரம்புக் கோளாறுகளிலேயே முதன்மையானது. எட்டு அல்லது பத்து நாட்களுக்கு முன்பே சிலருக்கு உடல் உளவியல் மாறுபாடுகள் தோன்றலாம். சிடுசிடுப்பு, கவனமின்மை, சோர்வு, தலைவலி, நடுமுதுகுவலி, மார்பக வீக்கம் போன்றவை கவலைப்பட வேண்டாதவை. இன்னொரு விஷயம்… இவை கருவுறத் தகுதியான பெண்களுக்கு பெருமளவில் காணப்படுகிறது என்பதே மருத்துவ அறிவியலார் கணிப்பு.

மாதவிலக்குக்கு 1 வாரத்திற்கு முன்னர் உடலில் கூடுதலாக நீர் சேமித்து வைக்கப்படுகிறது. எடை கூடுகிறது. உடல் பருத்தாற் போலத் தோன்றும். ஆனால் இந்நிலை மாதவிலக்குக்குப் பிறகு மாறிவிடும். நீரும் வெளியேறுவதால் உடலில் இறுக்கம் மட்டுமல்ல மன இறுக்கமும் தளர்கிறது.

மாதவிலக்கு பல ஹார்மோன்களின் விளைவுகளேயாகும். மேலும் கருவுறாத நிலையில் மாதந்தோறும் கருப்பையை ஆயத்தப்படுத்தி, குறிப்பிட்ட காலம் கடந்த பின்னர் அந்த ஏற்பாடுகளைக் கலைத்து வெளியேற்றி விட்டு, மீண்டும் ஆயத்தப்படுத்துவது ஹார்மோன்களின் பணிகளாகும். எனவே, ஹார்மோன்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

ஒன்றுமட்டும் இதுவரை மாறவில்லை. மாதவிலக்கு என்பது நடைமுறை வாழ்வில் சங்கடந்தரும் ஒன்றாகவே உள்ளது. இதன் நடைமுறைத் துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளப் பலர் முயல்வதேயில்லை. ஆனால் மருத்துவ அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நாம்… என்ன செய்யலாம்? அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை நமது பிள்ளைகளுக்குக் கூறாதிருக்கலாம்.

மாதவிடாய்க் காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

மாதவிடாய் நேரத்தில் உடல் களைப்பாக இருக்கும். அப்பொழுது வேலையைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அச்சமயத்தில் அதிகமாக உணரப்படும். பெண்கள் தான் உபயோகிக்கும் உள்ளாடைகளையும், டவல்களையும் (சானிடரி நாப்கின்ஸ்) மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைக்காவிட்டால் தொற்றுக்கான கிருமிகள் பரவி கருப்பையில் உள்ளே இருக்கும் இரத்தக் குழலில் எளிதில் புகுந்து தொற்று மற்றும் டெட்டனஸ் என்னும் வாய்ப்பூட்டு நோயையும் உண்டு பண்ணு-ம்.

சாதாரணமாக பெண்ணுக்கு மாதவிலக்கில் 14ஆவது நாளில் அடிவயிற்றில் வலி உண்டாகும். இவ்வலியானது அண்ட அணு சூற்பையிலிருந்து வெளிவருவதையே குறிக்கிறது.

சிலருக்கு அடிவயிற்றில் வலப்புறமோ இடப்புறமோ இதே காரணத்தினால் வலி உண்டாகும். மாதவிலக்கின்போது தினசரி வேலைகளைப் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இதேப்போல் மாதவிலக்கின்போது சுகாதாரத்திற்காக மட்டுமே உடல்உறவு கொள்வது கூடாது என்று கூறுப்படுகிறது. மாதவிலக்கின்போது உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தியாவில் நிறையப் பழங்கதைகள் உள்ளன. இக்கதைகள் எல்லாம் சுகாதாரத்தினைப்பற்றி அறியாத காலத்தில் ஏற்பட்ட கதைகள் ஆகும். கூட்டுக் குடும்பங்களில் இம்மூன்று நாட்கள் வீட்டைவிட்டு ஒதுக்குப்புறமாக உட்கார வைப்பது, அப்பெண்ணிற்கு அதிக வேலையிலிருந்து ஓர் ஓய்வுக்கான நேரமாகவே அமையும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் இல்லை.

நாட்டுப்புறங்களில் பழக்கத்தில் வந்துவிட்டதால் செய்யும் மூடச்சடங்குகளை தவிர்த்துப் பார்த்தால் அவர்கள் கொடுக்கும் உணவு வகைகள் அந்தப் பெண்ணை எந்தக் காலத்திலும் வலிமையாக வைத்திருக்கும். முதலில் நல்லெண்ணையும், முட்டையும் கொடுப்பார்கள். அடுத்த 15 நாட்களுக்கு உளுந்து, வெந்தயம் போன்ற பொருட்களால் ஆன களி உணவு வகைகளைக் கொடுத்து மகிழ்வுடன் இருக்கச் செய்வார்கள்.

பெண் குற்றவாளிகள்பற்றிய ஆய்வில் நான்கு மடங்கு அதிகக் குற்றம் மாதவிலக்கின்போதே நிகழ்ந்துள்ளன. தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விருப்புப் பெறுகின்றனர் அல்லது சரிவரப் பணிபுரிவதில்லை. மேலும் வேலைத்திறனும் குறைந்தே காணப்படுகிறது. காரோட்டிகளான பெண்கள் அதிக அளவு விபத்துக்குள்ளாவதாகப் பதிவுகள் கூறுகின்றன. மேற்குறித்த தகவல்களும் பதிவுகளும் மருத்துவ உலகை உலுக்குகின்றன.

முடிவாக ஒரு தகவல்:-

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசதி, சோர்வு மற்றும் உடல் வலிகளை போக்கும் மருத்துவ சக்தி கொண்டதாக கொய்யப்பழம் உள்ளது. இதனை சாப்பிட்ட சில மணித்துளிகளில் இருந்து அது தனது பணியைத் தொடங்குகிறது. எனவே இந்தக் காலங்களில் கொய்யப்பழம் உங்கள் நண்பனாக இருக்கட்டும்.