Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு கொழுப்பு உணவு கொடுங்கள்!

குழந்தைகளுக்கு கொழுப்பு உணவு கொடுங்கள்!

32

எனக்கு கொலஸ்டரோல் இருக்கு. இவருக்கும் (கணவருக்கு) கொலஸ்டரோல் இருக்கு எண்டபடியால் பிள்ளைக்கும் எண்ணெய்ச் சாப்பாடு குடுக்கிறதே இல்லை’ எனப் பெருமை அடித்துக் கொண்டாள் அந்த இளம் தாய்.

பாவம் அந்தப் பிள்ளை!

அதற்கு நான்கு வயது கூட இருக்காது. ‘பாவம்’ என நான் குறிப்பிட்டது அப் பிள்ளைக்கு வாய்க்கு ருசியான சாப்பாடு கிடைக்காது என்பதற்காக மட்டும் இல்லை. தனது அறியாமையால், வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான ஒரு முக்கிய வகை போஷாக்கு உணவைக் கொடுக்காமல் தவிர்க்கிறாரே என்ற ஆதங்கத்தில்தான்.

மனிதர்களின் குருதியில் கொலஸ்டரோல் என்பது திடீரென ஏற்படும் பிரச்சனை அல்ல என்பது உண்மைதான். சிறுவயதிலிருந்தே இது ஆரம்பிக்கத் தொடங்குகிறது. எனவே சிறுவயதிலிருந்தே உணவில் அதீத கொழுப்புப் பண்டங்களைச் சேர்ப்பது நல்லதல்ல என்பதும் உண்மைதானே. அவ்வாறெனில் அந்தத் தாய் செய்ததில் என்ன தவறு என்று உங்களுக்குத் தோன்றலாம்.

மாப்பொருள், புரதம், கொழுப்பு, விட்டமின்கள், கனியங்கள் இவை யாவும் எமது உடலுக்கு அவசியமானவை. அதிலும் முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை. இப் போஷணைப் பொருட்கள் ஒவ்வொன்றும் சரியான விகிதத்தில் உணவில் கலந்திருக்க வேண்டும். மிகுந்தாலும் தீமை பயக்கும், குறைந்தாலும் ஆகாது. வளர்ந்த ஒருவர் தினசரி உட்கொள்ளும் உணவின் கலோரிப் பெறுமானத்தில் 15 சதவிகிதமளவு எண்ணெய், கொழுப்புப் பொருட்களாக இருக்க வேண்டும்.அதற்கும் மேல் இருப்பதும் நல்லதல்ல.

ஆயினும் இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரையில் எண்ணெய், கொழுப்பு. கொலஸ்டரோல் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. இரண்டு வயதிற்கு மேல் அவர்களின் உணவின் தினசரிக் கலோரிப் பெறுமானத்தில் 30 சதவிகிதம் கொழுப்பிலிருந்து கிடைக்க வேண்டும்.

இதை வாசித்தவுடன் ‘குழந்தைகளுக்கு டொக்டர் கொழுப்பு உணவு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்’ என்று சொல்லியபடி கிழங்குப் பொரியல், வடை, மிக்ஸர், பட்டர், சொக்கிளேட் என அள்ளி அள்ளி ஊட்ட வேண்டாம். அவை நல்ல கொழுப்புகள் அல்ல. நீங்கள் கொடுப்பது நல்ல வகையான கொழுப்பாக இருக்க வேண்டியது அவசியம். பால், முட்டை,சோயா பட்டர் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பு குழந்தைகளுக்கு உகந்தது.

சட்டம் வைத்து, சத்தம் போட்டு, அடி கொடுத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முடியாது. பெற்றோராகிய நீங்கள்தான் முன்மாதிரியாக நடந்த வழி காட்ட வேண்டும்