Home ஆரோக்கியம் வியர்வை, துர்நாற்றத்திற்கு இதுதான் காரணமா? என்ன செய்யலாம்

வியர்வை, துர்நாற்றத்திற்கு இதுதான் காரணமா? என்ன செய்யலாம்

18

sweating_smell_002வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல, இதற்காகப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள் நிறைந்துள்ளன. தோலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களின் விளைவே வியர்வை துர்நாற்றம். அக்குள் (Armpit), பெண்ணின் மார்பு, பிறப்புறுப்புகள், ஆசனவாய், முகம் போன்ற பகுதிகளில் அதிக வியர்வை ஏற்படும்.
இது ஆண், பெண் இருவருக்கும் பருவ வயதில் (13 முதல் 19 வயதுக்குள்) அதிகம் காணப்படுகிறது. எக்கிரைன் சுரப்பி (Eccrine Glands), அபோகிரைன் சுரப்பி (Apocrine Glands) என இரண்டு வகை சுரப்பிகள் நம் உடலில் அதிவியர்வையை உண்டாக்குகின்றன.
காரணம் என்ன?
உடலில் தோன்றும் வியர்வை துர்நாற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
துரித உணவு வகைகளை அதிகம் உண்பது, உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது.
மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் – வெளிப்புற ஆடைகளை அணிவது, நெய், எண்ணெய் வகை தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிடுவது, உடல் பருமன், நாள்பட்ட நோய் நிலைகள், குறிப்பாக நீரிழிவு நோய், தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் (Lencorrhoea), அக்குள், பிறப்புறுப்புப் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது, இந்த இடங்களில் ரோமங்களை அகற்றாமல் வைத்திருப்பது, அசைவ உணவை அதிகம் உண்பது.
உணவுப் பாதையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது, தினசரி மலம் கழிக்காமல் இருப்பது, பல்வேறு ரசாயன வாசனை க்ரீம், தைலங்களைப் பயன்படுத்துவது, தலைப் பொடுகு, ஒரு சில மருந்துகளின் பக்க விளைவு, பாக்டீரியா நோய்க் கிருமிகளின் தாக்கம், காற்றோட்டம் இல்லாத, அசுத்தமான இடங்களில் வசிப்பது, தூங்குவது போன்ற பல்வேறு காரணங்கள் உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
உடலின் வாத, பித்தம், கபமான முக்குற்றங்களை சமன்படுத்தக்கூடிய உணவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினசரிக் காலை, மாலை, மலம் கழிப்பது, வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, வருடத்துக்கு இரண்டு முறை வயிற்றுப் பேதிக்குச் சாப்பிடுவது ஆகியவற்றைச் சிறுவயது முதலே பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
தினம் இருமுறை குளித்து இறுக்கமான உள்ளாடைகளைத் தளர்த்தி, முழு பருத்தி ஆடைகளை பயன்படுத்துங்கள்.
எண்ணெய்யில் பொரித்த பலகாரங்களைத் தவிர்ப்பது, அசைவ உணவைக் கட்டுப்படுத்திக்கொள்வது, துரித உணவு, குளிர்பானங்கள், கேக் வகைகள், சொக்லேட் வகைகள், தரைக்கடை உணவு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அக்குள், பிறப்புறுப்பில் வளரும் ரோமங்களை அடிக்கடி அகற்றுவது, தோல் நோய், பொடுகு, வெள்ளைப்படுதல் இருந்தால் முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்வது, தைராய்டு குறைபாடுகளுக்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வது, பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயறு வகைகள், கிழங்கு வகைகளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது, அடிக்கடி முகம், கை, கால்களைக் கழுவிக்கொள்வது போன்ற செயல்பாடுகளால் அதிவியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் வராமல் தடுக்க முடியும்.
மருத்துவச் சிகிச்சை
திரிபலா சூரண மாத்திரை, அமுக்கரா சூரண மாத்திரை, குங்குமப்பூ மாத்திரை ஆகியவற்றைச் சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையோடு வயது, குறைபாடு, நோய் நிலைகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேய்த்துக் குளிக்கத் திரிபலா சூரணம், கார்போக அரிசி, ரோஜாமொட்டு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ, கருஞ்சீரகம், கசகசா, சந்தனத் தூள், பாசிப் பயறு, வெந்தயம், எலுமிச்சை தோல், மருதாணி ஆகியவை கலந்த குளியல் பொடியைப் பயன்படுத்தலாம்.