Home ஆரோக்கியம் பித்தம் உடலுக்கு நன்மை செய்யுமா?

பித்தம் உடலுக்கு நன்மை செய்யுமா?

18

5fef5218-0e05-496d-86a9-19374c8d18c0_S_secvpfபித்தம், லேசான எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் வீரியம் மிக்கது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்துப் போவது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், ரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டது.

உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது. உண்ட உணவை சீரணிக்கச் செய்வது அதுதான், உடலுக்குத் தேவையான வெப்பம், ஆசை, பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப் பாதுகாக்கிறது. ஆனால், இதே பித்தம் அதிகமாகி விட்டால் தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்பு சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-

பாசக பித்தம்:-

இரைப்பை, ஜீரணப்பை இவற்றின் நடுவில் இருக்கிறது. இது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி‘ என்ற பெயரும் உண்டு. உணவை செரிக்கச் செய்து, அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன் இடத்திலிருந்தே ஊட்டமளிக்கிறது.

ரஞ்சக பித்தம்:

இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு, அதிலுள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.

சாதக பித்தம்:

இது இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தன்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவற்றைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.

ஆலோசக பித்தம்:

இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.

பிராஜக பித்தம்:

சருமத்தை உறைவிடமாகக் கொண்டு, சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து, அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது. காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோசா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. பித்தத்தைக் கட்டுப்படுத்த, இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.