Home ஆரோக்கியம் பொது மருத்துவம் டர்ர்ர்ர்ர்…. வந்தா அடக்காதீங்க… ஏன் தெரியுமா?

டர்ர்ர்ர்ர்…. வந்தா அடக்காதீங்க… ஏன் தெரியுமா?

21

பலரும் உடலில் இருந்து வெளியேறும் வாய்வு பற்றி பேச தயங்குவார்கள். ஆனால் இது மனித உடலில் இயற்கையாக நடைபெறும் ஒரு செயல். அதே சமயம் இந்த வாய்வு உடலில் இருந்து வெளியேறும் போது துர்நாற்றத்துடன் வருவதால், பலரும் இதை அடக்க முயற்சிப்பார்கள். ஆனால் வாய்வு வெளியேறும் போது அதை அடக்குவது என்பது நல்லதல்ல. சொல்லப்போனால், ஒருவரது உடலில் இருந்து வாய்வு வெளியேறினால் தான், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்றே அர்த்தம். இங்கு மனித உடலில் உற்பத்தியாகி வெளியேறும் வாய்வு குறித்த சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை அறிகுறி ஒருவரது உடலில் இருந்து வெளியேறும் வாய்வு, அவரது ஆரோக்கியத்தைப் பற்றி கூறும் என்பது தெரியுமா? ஆம், வாய்வு வெளியேற்றம் தான் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் ஓர் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாகும். ஒருவர் வாயுவை வெளியேற்றும் போது, தாங்க முடியாத அளவில் கடுமையான துர்நாற்றம் வீசினால் அல்லது வலியுடன் வாய்வு வெளியேறினால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பிரச்சனையை எடுத்துக் கூறுங்கள்.

வயிற்று உப்புசம் குறையும் வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின், அந்த உணவு செரிமானமாகும் போது, உடல் அதிகப்படியான நீரையும், குடல் அதிகளவு வாயுவையும் உற்பத்தி செய்யும். இப்படி உற்பத்தியாகும் வாய்வு உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்தால் தான், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். அது வெளியேறிவிட்டால், வயிற்று பிரச்சனைகள் குறையும்.

வாய்வு நாற்றம் நல்லது ஒருவர் தான் வெளியிடும் வாயுவை சுவாசிப்பது ஆரோக்கியமானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. உடலில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவில் சில சில உட்பொருட்கள், தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்குமாம். அதேப்போல் அழுகிய முட்டையில் இருந்து வெளிவரும் ஹைட்ரஜன் சல்பைடு என்னும் கெமிக்கலை, ஒருவர் அளவுக்கு அதிகமாக சுவாசிக்கும் போது, அது மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதையே அளவாக சுவாசித்தால், அது உடலினுள் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றில் இருந்து தடுக்கும்.

ஊட்டச்சத்து தேவைகளை உணர்த்தும் உடலில் இருந்து வெளியேறும் வாய்வு, உங்கள் டயட்டில் எது இல்லை என்பதை சொல்லும். நாம் உண்ணும் பலவகையான உணவுகளும், பல வகையான வாயுக்களை உற்பத்தி செய்து, எதை அதிகம் சாப்பிட்டோம் அல்லது எதை குறைவாக சாப்பிட்டோம் என்பதை உணர்த்தும். அரிதாக வாயுவை வெளியேற்றினால், அவர்களது உணவில் நார்ச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். அத்தகையவர்கள் முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சற்று அதிகம் சேர்ப்பது நல்லது. அளவுக்கு அதிகமாக இறைச்சிகளை உட்கொண்டால், கடுமையான துர்நாற்றத்துடன் வாய்வு வெளியேறும்.

வாய்வு நல்ல பாக்டீரியாக்களைக் குறிக்கும் துர்நாற்றமின்றி வாயுவை அதிகமாக வெளியிடுபவர்கள், தங்கள் உணவில் நார்ச்சத்துக்களை அதிகம் சேர்ப்பதோடு, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்கின்றனர் என்று அர்த்தம். இதனால் இத்தகையவர்களுக்கு செரிமான பிரச்சனையே இருக்காது. அதோடு, இத்தகையவர்களின் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகமாக இருக்குமாம்.

வாயுவை ஏன் அடக்கக்கூடாது? வாயுவை ஒருவர் அடக்குவது என்பது ஆரோக்கியமற்ற செயல். இப்படி அடக்குவதால், குடலியக்கம் தான் பாதிக்கப்பட்டு, கடுமையான வயிற்றுப் பிடிப்பால் கஷ்டப்பட நேரிடும். ஆகவே வாய்வு வெளியேறும் போது அடக்காமல் வெளியேற்றுங்கள்.

சௌகரியமாக உணரச் செய்யும் வாயுவை ஒருவர் அவ்வப்போது வெளியேற்றிவிட்டால், அவர்கள் சற்று ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம். இந்த கட்டுரையைப் படித்தப் பின்பாவது, வாயுவை அடக்காமல் வெளியேற்றிவிடுங்கள்.