Home குழந்தை நலம் குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !

குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !

14

முகத்தின் அழகிற்கும், வசீகரத்திற்கும் காரணமாக திகழ்பவை பற்கள். குழந்தை பருவத்தில் இருந்தே பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால்தான் வயதானாலும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்து விட்டால் அவர்களால் தெளிவாக பேசமுடியாது. ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்து விடும். பற்கள் நன்றாக இருந்தால் தான் முகம் அழகுடன் பளிச்சிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஆஸ்துமாவை விட ஐந்து மடங்கு அதிகமாகவும், இன்புளுயன்சா என்ற வைரஸ் தாக்குதலால் வரும் ஒருவித சுவாச மண்டலத்தை பாதிக்கும் காய்ச்சலான ப்ளூ ஜுரத்தை விட ஏழு மடங்கு அதிகமாகவும் பல் நோய்கள் வருவதாகத் தெரிகிறது. முக்கியமாக, இரண்டு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் பல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிரிப்பே அழகு

குழந்தையின் சிரிப்பில் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல் இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும். இதனால் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள். மோசமான பற்கள் இருப்பதால், அவர்களால் படிப்பில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல்போகலாம். அவர்கள் சிரிப்பது குறைந்து போகலாம். தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடும்.

குழந்தை பிறந்து 6 முதல் 7-ம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். ஒன்றரை வருடத்தில் 20 பற்கள் முளைத்து விடும். பல் முளைக்கும் கால கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதனால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.

இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும். மோசமான பல் பராமரிப்பு, சர்க்கரை நோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நொறுக்குத் தீனி ஆபத்து

நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியை வாங்கித் தரும் பெற்றோர், சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது.

குழந்தைக்கு சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவ்வேண்டும் வுவது நல்லது.

சத்தான உணவு கொடுங்க

ஸ்நாக்ஸ் சாப்பிடும் வயது வந்ததும், சீஸ், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளும், மென்று சாப்பிடக் கூடிய வகைகளையுமே தேர்ந்தெடுக்கவும். சர்க்கரை சேர்க்காத, இனிப்பூட்டப் படாத பானங்கள், ஜூஸ், மற்றும் தண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள், மிட்டாய்கள், கர்போனேட்டட் பானங்களை முற்றிலும் தவிர்க்கவும். ஜவ்வு போன்ற உணவுகளை (சுயிங் கம் போன்ற) மற்றும் உறிஞ்சி குடிக்கக் கூடிய பானங்கள் ஆகியவை இளவயதினருக்கு, பல் இன்னும் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், பற்சிதைவு ஏற்படலாம்.

சொத்தை பற்கள்

குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும். இதற்கு முன்பே பற்களில் ஏதும் பிரச்சினைகள் தென்பட்டால் அப்போதே மருத்துவரிடம் காட்டித் தெளிவு படுத்திக் கொள்ளவும்.

பற்சிதைவு பெரும்பாலும் ஈறுகளை ஒட்டிவாறு முன் பற்கள், அல்லது பின் பற்களில் தான் ஏற்படுகிறது. வித்தியாசமான வெள்ளை நிறமோ, அல்லது ப்ரௌவுன் நிறமோ பற்களில் அல்லது ஈறுகளில் தென்பட்டால் உங்கள் பல் மருத்துவரை உடனடியாக அணுகவும்.