Home ஜல்சா உஷாரய்யா உஷாரு.

உஷாரய்யா உஷாரு.

21

அவள் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறாள். அவர் சுயதொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இருதரப்பு பெற்றோரும் சேர்ந்து அவர்கள் திருமணத்தை நிச்சயித்தார்கள்.

இருவரும் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெரிய திருமண மண்டபம் ஒன்றில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த நினைத்தார்கள். அந்த மண்டபத்திற்காக ஆறு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதிருந்ததால், திருமண தேதி தள்ளிப்போனது.

நிச்சயித்த ஜோடி என்பதால் அவர், தனது வருங்கால மனைவியை அடிக்கடி சந்திக்க விரும்பினார். ஆனால் அவளோ அதிக வெட்கமும், கூச்சமும் கொண்டவளாக இருந்ததால், சந்திப்புகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்கினாள். செல்போனில் மட்டும் அவரோடு பேசிக்கொண்டிருந்தாள்.

நாட்கள் கடந்தன. அவள் ஓரளவு சகஜமானாள். முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பின்பு ஷாப்பிங் மால், ரெஸ்டாரன்ட் என்று பயணம் தொடர்ந்தது.

அன்று அவரது உறவுப் பெண் ஒருவரது திருமணம். அதில் கலந்து கொள்ள சென்ற மாப்பிள்ளை பையன், போகிற வழியில் வற்புறுத்தி தனது வருங்கால மனைவியையும் தனது காரில் ஏற்றிக் கொண்டார். இருவருமாக காரில் போய்க்கொண்டிருந்த போது, அவரது அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். அவரோ, ‘அந்த கல்யாண வீட்டில் நமது உறவினர்கள் நிறைய பேர் இருப்பார்கள். திருமணத்திற்கு முன்பே நீங்கள் ஜோடியாக சென்றால், தவறாக நினைத்து விடுவார்கள்’ என்றார்.

அந்த கல்யாணத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அவர், அந்த ஊரில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து அவளை தங்க வைத்து விட்டு தான் மட்டும் சென்று, திருமணத்தில் கலந்துவிட்டு விரைவாக திரும்பினார்.

லாட்ஜ்க்கு வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். தனிமையும், சூழ்நிலையும் எல்லை மீற வைத்தது. வீடு திரும்பும்போது குற்ற உணர்ச்சியால் அவளுக்கு அழுகை வந்து விட்டது. ‘என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. பின்விளைவுகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. நான் கர்ப்பமாகி விடக்கூடாது. இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்’ என்றாள். அவர், ‘நடந்ததை’ அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘ஒரு நாள் உறவில் கர்ப்பம் ஆகமாட்டாய். பயப்படாமல் இரு..’ என்று கூறி, அழைத்துச் சென்று அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார்.

தனது வீட்டிற்கு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘அந்த பொண்ணு நல்லவள்தானா? நல்லவள் என்றால் திருமணத்திற்கு முன்பே உன்னோடு வருவாளா? ஓட்டலில் தங்கவும் உடன்படுவாளா? எனக்கு எதுவும் சரியாப்படலை’ என்று அம்மா வசைபாடினாள்.

‘அவள் ரொம்ப நல்ல பொண்ணும்மா, நான்தான் கட்டாயப் படுத்தி கூட்டிட்டு போனேன். என்னை என்ன வேணும்னாலும் சொல்லு. ஆனா அவளை குறை சொல்லாதே, அதை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது’ என்றார்.

மகன் அப்படி சொன்னதும் தாய் ஆத்திரமடைந்தாள். ‘திருமணத்திற்கு முன்பே அவளுக்காக இப்படி பரிந்து பேசுகிறானே.. திருமணத்திற்கு பின்பு நம்ம கதி என்ன ஆகுமோ!’ என்ற கோணத்தில் குதர்க்கமாக யோசித்த தாயார், மறுநாளே பெண் வீட்டிற்கு போன் போட்டு, ‘என்ன பொண்ணு வளர்த்து வைச்சிருக்கீங்க. கல்யாணத்துக்கு முன்பே என் பையனோடு லாட்ஜில் போய் தங்கியிருக்கிறாள்’ என்று கேட்க, ஒரே களேபரம்.

இப்போது கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற அளவுக்கு நிலைமை சிக்கல் ஆகியிருக்கிறது. இருபக்கத்தினரும் தடித்த வார்த்தைகளால் உச்சகட்ட ‘ஈகோ’ போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெண்ணும், பையனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலும், பெற்றோரின் போருக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கர்ப்பமாகி விடக்கூடாதே என்ற கவலையும் அவளை சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது.

நிச்சயதார்த்தத்திற்கும்– கல்யாணத்திற்கும் இடையில் நடக்கிற சந்திப்பில் எப்படிப்பட்ட வம்பெல்லாம் நடக்கிறதெங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க..!