Home ஆரோக்கியம் வயிறு வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

43

விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே எடுக்கலை. சரியா சாப்பிட முடியலை” என்ற புலம்பல்கள் அடிக்கடி நம் காதில் விழும் வார்த்தைகளாகும்.

வயிறு பெரிதாக இருப்பது என்பது இப்போதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயமாகி விட்டது. வயிறு பெரிதாக, உருண்டையாக இல்லாதவர்களைத் தேடுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் கஷ்டம். இதில் ஆண், பெண் வித்தியாசமே கிடையாது. வயிறு பெரிதாக இருப்பது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் மாத விலக்கு நேரத்திலும், மாதவிடாய் நிற்கிற வயதிலும் `கேஸ்’ தொந்தரவு பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடாததாலும், ஒழுங்கான உணவுகளை சாப்பிடாததாலும், வேளை கெட்ட வேளையில் சாப்பிடுவதாலும், இரைப்பையிலும், குடலிலும் சேரும் காற்றே, `கேஸ்’ என அழைக்கப்படுகிறது. வயிறு வீங்கியும், வயிறு பெரிசாகவும், வயிறு முழுக்க நிரம்பியிருப்பது போலவும் இருந்தால், அவர்களுக்கு உணவு ஜீரணம் ஆவதில் கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

உணவுப் பாதையில் உருவாகும் `கேஸ்’ நிறமற்ற, மணமற்ற, பல வாயுக்களைக் கொண்டு உருவானது. கார்பன்-டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன், சில சமயங்களில் மீதேன் வாயு, இவையெல்லாம் சேர்ந்து உருவாவதே `கேஸ்’ ஆகும். சில சமயங்களில் சிலருக்கு, உடலின் கீழ்ப்பகுதியில் இருந்து வெளியாகும் கேஸில், பயங்கர நாற்றம் இருக்கும். பெருங்குடலில் இருக்கும் கெட்ட பேக்டீரியாக்கள் வெளிவிடும் மிகக் குறைந்த அளவிலான சல்பர் வாயுதான் இதற்குக் காரணம்.

இந்த சல்பர் வாயு, மற்ற வாயுக்களுடன் சேர்ந்து வெளியாகும்போது, `கேஸ்’ மிகுந்த நாற்றமடிக்கும். ஒழுங்கில்லாத சாப்பாடு, அடிக்கடி வெளியில் உணவு, அதிக மசாலாக்கள், அதிக காரம் உள்ள உணவு, சரியாக வேகாத உணவு, சுகாதாரமற்ற உணவு, ஒழுங்கான முறையில் சமைக்கப்படாத உணவு, இவைகளையெல்லாம் சாப்பிட்டால், குடலில் சல்பர் வாயு உண்டாகத்தான் செய்யும்.

மேலும் வேகவேகமாக தண்ணீர் குடிப்பதனாலும், வேகவேகமாக சாப்பாட்டை விழுங்குவதாலும், சிக்லெட், சூயிங்கம் முதலியவைகளை அடிக்கடி மெல்லுவதாலும், சரியான அளவில்லாத `பல்செட்’ மாட்டியிருப்பதாலும், வெளிக்காற்று, வாய் வழியாக, வயிற்றுக்குள் போய், `கேஸ்’ உருவாகிறது. வாய் வழியாக விழுங்கப்படும் கேஸ், ஏற்கனவே வயிற்றில் உருவான கேஸ், இவை இரண்டும் சேர்ந்து, வயிற்றிலும், குடலிலும் பெருமளவு தங்குகிறது.

இதில் அதிக அளவு கேஸ் `ஏப்பம்’ மூலமாக உடலை விட்டு வெளியேறி விடுகிறது. மீதியிருக்கும் `கேஸ்’ சிறுகுடலுக்கு நகர்ந்து சென்று, அங்கு உள்ளிழுக்கப்படுகிறது. மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச கேஸ், பெருங்குடல் வழியாக வந்து, ஆசன வாய் வழியாக வெளியேறி விடுகிறது.

நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து, ஸ்டார்ச் சத்து உள்ள சில உணவுப் பொருட்களை சிறுகுடல் ஜீரணம் பண்ணுவதில்லை. ஏனெனில் இந்த உணவுப் பொருட்களை ஜீரணம் பண்ணத் தேவையான சில என்சைம்கள், சிறுகுடலில் மிகக் குறைவாகவும், தேவையான அளவு இல்லாமலிருப்பதும்தான் காரணம். எனவே, நன்றாக, ஜீரணம் ஆகாது என்று தெரிந்த உணவுப் பொருட்களை தயவு செய்து சாப்பிடாமல், தவிர்க்கப் பாருங்கள்.

இஞ்சியின் மகிமை அறிந்துதான் இப்பொழுது இந்திய சமையலில் அனைத்து உணவுப் பொருட்களிலும் இஞ்சி சேர்க்கப்படுகிறது. தினசரி மூன்று பல் வெள்ளைப்பூண்டு, ஒரு விரல் அளவு இஞ்சி சேர்ந்து அரைத்து காய்ச்சிய கசாயம் காலை வெறும் வயிற்றில் குடிக்க வாய்வு தொந்தரவு நீங்கும். அதேபோல் ஜீரணக்கோளாறு, வாய்வு தொந்தரவு உள்ளவர்கள் துளசி இலையை தண்ணீர் ஊற்றி வேகவைத்து கசாயம் போல அருந்தலாம். அதேபோல் உணவு உண்டபின்னர் சிறிதளவு இஞ்சி சாப்பிடலாம் அல்லது எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.

பால் பொருட்களில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம். இது எளிதில் ஜீரணமாகும். அதேபோல் வெள்ளைப்பூண்டு சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறிவிடும். வாயு தொந்தரவு இருக்காது. தேங்காய் தண்ணீர், இளநீர் போன்றவைகளை குடிக்கலாம் கேஸ் தொந்தரவு ஏற்படாமல் தடுக்கும்.

கேஸ் பிரச்சினை உள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், புருக்கோலி, பீன்ஸ், போன்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அதேபோல் பால் பொருட்கள் சோடா, கார்பனேட் பானங்கள், பீர் போன்றவைகளை உட்கொள்ளக்கூடாது என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் மன அழுத்தம் இருந்தாலும் வாயுத் தொந்தரவு ஏற்படும். எனவே எதற்காகவும் கவலைப்படாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொண்டாலும் கேஸ் பிரச்சினை ஏற்படாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.