Home ஆரோக்கியம் வயிறு வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !

20

உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் இன்றைக்கு பலரும் அதிக காரமுள்ள உணவுகள், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிறு புண்ணாகிவிடுகின்றன.

இன்றைக்கு நாம் உட்கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் வெப்பத்தில் சமைக்கப் பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக வெப்பத்தில் கரையக்கூடிய அல்லது ஆவியாகக்கூடிய சத்துகள் சமைக்கும் பொழுது ஆவியாகிவிடுவதால் நமக்கு உண்ணும் உணவின் பலன் கிடைப்பதில்லை. ஆகையால் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன. நமது உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள உரம், பூச்சி மருந்து ஆகியவை உணவுப்பாதையை சேதப்படுத்துகின்றன.

உணவுப்பாதையில் புண்களை உண்டாக்கி, அவற்றில் நுண்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் கடுமையான குடற்புண்களும், உணவுப்பாதை சார்ந்த நோய்களும் உண்டாகின்றன. ஒவ்வாத உணவுகள் அல்லது பயன்படாத உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக உணவை செரிப்பதற்கு அதிகமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து, இரைப்பையின் உட்சுவர்களையும் சேதப்படுத்துகின்றன.

இந்த புண்களின் விளைவால் முறையே ஏப்பம், நெஞ்சுகரித்தல், உணவு உண்டபின் வயிற்றுவலி, பித்தவாந்தி பின் மலம் கழிக்கும்பொழுது கறுப்பாக மலம் செல்லுதல் அல்லது உறைந்த ரத்தம் வெளியேறுதல் ஆகியன படிப்படியாக தோன்றும். இவ்வாறு தோன்றும் உணவுப்பாதையில் ஏற்படும் புண்களை கட்டுப்படுத்தாவிட்டால் இரைப்பை, குடல் போன்றவற்றில் ஓட்டை விழுந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவசரகால சிகிச்சையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

உணவுப்பாதையில் புண்கள் ஏற்படாமல் தடுக்க எளிதாக செரிக்கக்கூடிய பச்சை காய்கறி, பழங்கள், பழச்சாறுகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் முறை அரிசி கழுவிய நீர் குடலுக்கு நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதனை உட்கொள்ளலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

உணவுப்பாதையில் தோன்றும் பல்வேறு வகையான உபாதைகளை நீக்கி, இரைப்பை மற்றும் குடலுக்கு வலிமையை தரும் மூலிகை சீமைதுத்தி. இந்தச் செடிகளின் பூ மற்றும் பிற பாகங்களும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. சீமைதுத்தி இலைச்சாற்றை 10 மிலியளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, தினமும் ஒரு வேளை சாப்பிட வயிற்றுப்புண்கள் ஆறும். மிளகுத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் சீமைதுத்தி இலை மற்றும் பூவிதழ்களை சமைத்து, கீரையாகவோ அல்லது தண்ணீர்ச்சாறு செய்தோ சாப்பிட்டுவர பல்வேறு வகையான குடற் புண்கள் ஆறும்.

சீமைத்துத்தியின் பூ மற்றும் இலைகளிலுள்ள பிளேவனாய்டுகள் கேம்பரால், குர்சிட்டின், டையோஸ்மெட்டின், பாலிபினாலிக் அமிலங்கள் மற்றும் கவுமாரிக் அமிலங்கள் பல்வேறு வகையான நுண்கிருமிகளை நீக்கி, வயிறு மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்து கின்றன. சீமைதுத்தி இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கீரைபோல் நீராவியில் வேகவைத்து, கடைந்து சாப்பிட குடற்புண்கள் நீங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.