Home ஆரோக்கியம் பூட்டி வைக்காதீர்..!

பூட்டி வைக்காதீர்..!

17

couple_in_bed-350x250சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட, தனிமையில் வாடினார். குழந்தைகளும் இல்லாமல் போனது வருத்தத்தை அதிகப்படுத்தியது. அவர் அலுவலகத்தில் சக பணியாளராக இருந்த அனுபமாவுக்கு சபரிநாதனின் குணநலன்கள் பிடித்துப் போனது. நட்பாக ஆரம்பித்த அவர்களின் உறவு காதலில் முடிந்தது. இருவரும் அலுவலகம் முடிந்ததும் பீச், ஹோட்டல் என சுற்ற ஆரம்பித்தனர்.

அனுபமாவுக்கு 37 வயதாகியும் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இனி திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த தருணத்தில்தான் சபரிநாதனின் நட்பு அந்த எண்ணத்தை மாற்றியது. இருவரும் எளிய முறையில் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். திருமணம் நடக்க ஒரு வாரம் இருந்த போது விரகதாபம் இருவரையும் பாடாகப்படுத்தியது. திருமணத்துக்கு முன்னால் ஒரு முறை உறவு கொள்ளலாம் என முடிவெடுத்து புதுச்சேரி சென்றார்கள். ஒருவித பதற்றத்தில் இருந்தார் சபரிநாதன். பயமும் இருந்தது. இருவரும் உறவு கொள்ள முயன்றனர்.

சபரிநாதனுக்கு உடலுறவில் சரிவர ஈடுபட முடியவில்லை. அவரது குறி விறைப்புத்தன்மை அடையவில்லை. அவரது ஆண்மையின் மீது அவருக்கு சந்தேகம் வந்தது. ‘இனிமேல் செக்ஸில் ஈடுபட முடியாமல் போய்விடுமோ’ என அஞ்சினார். அனுபமாவுக்கும் அதே சந்தேகம் எழ, எதற்கும் டாக்டரை பார்த்து செக் செய்துவிடுவோம்’ என்றாள். சபரிநாதனை பரிசோதனை செய்த பாலியல் மருத்துவர், ‘எந்தப் பிரச்னையும் இல்லை, தாராளமாக செக்ஸில் ஈடுபடலாம்’ என்று சொல்லிவிட்டார்.

சபரிநாதனுக்கு எதனால் இந்தப் பிரச்னை வந்தது?

இந்தப் பிரச்னைக்கு Widower’s syndrome என்று பெயர். துணையை இழந்த பிறகு ஒருவித வெறுமை மனநிலையில் வெகு நாட்கள் செக்ஸில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னை. நீண்ட நாட்கள் செக்ஸ் இன்றி இருப்பதும், மனதில் பல கஷ்டமான விஷயங்களை போட்டு பூட்டி வைத்திருப்பதும்தான் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாமைக்கான காரணமாக அமைந்துவிடுகிறது. இவர்களின் மனநிலையும் ஒரே இடத்தில் குவியாமல் மாறிக்கொண்டே இருக்கும் Emotional Roller Coaster ஆக இருக்கிறது.

மனைவியை திடீரென்று இழக்கும் கணவருக்கு மனரீதியாக அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்டகாலம் ஆகிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என பலர் இந்த விஷயத்தில் சலிப்படையவும் செய்கிறார்கள். மனரீதியில் ஓரளவு நார்மலாகி மறுதிருமணம் செய்ய முடிவெடுக்கும் போது செக்ஸில் பயிற்சியின்றி இருக்கிறார்கள். செக்ஸ் ஆசை எல்லோருக்கும் எளிதாக வரும். ஆனால், அதற்கான திறன் இருந்தால்தான் இயங்க முடியும். தொடர்ந்த முயற்சியும் பயிற்சியுமே காமக்கலையின் இரு கண்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒரு கிரிக்கெட் வீரர் சில வருடங்கள் விளையாடாமல் இருக்கிறார். திடீரென ஒரு நாள் மைதானத்தில் இறங்கி போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னால் அவரால் சரிவர விளையாட முடியுமா? பியானோ வாசிக்கும் கலைஞர் ஒருவர் சில ஆண்டுகளாக பியானோவை தொடாமல் இருக்கிறார். அவரால் சரிவர ஒரு லைவ் கச்சேரியில் வாசிக்க இயலுமா? யோசித்துப் பாருங்கள். அது போலத்தான் காமக்கலையும். தொடர்ந்த பயிற்சி அவசியம். இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்கள் தேவையற்ற மனப்பதற்றம், குற்றவுணர்வு ஆகியவற்றையெல்லாம் விட்டு விட வேண்டும்.

இழந்தவர்களை நினைத்து உருகாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எந்த உறுப்பையும் நெடுநாட்கள் பயன்படுத்தாமல் விட்டால் திறனற்று போய்விடும். அது போலத்தான் ஜனன உறுப்புகளும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். Use it! or Lose it! பாலியல் உணர்வு மனிதனுக்கு இன்றியமையாதது. அதை யாரும் கட்டுப்படுத்தவோ, குற்ற உணர்வாக நினைக்கவோ தேவையில்லை. செக்ஸில் எந்தப் பிரச்னை வந்தாலும் தாராளமாக ஒரு பாலியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.