Home ஆரோக்கியம் பொது மருத்துவம் நாய்க் கடி ஆபத்தானதா?

நாய்க் கடி ஆபத்தானதா?

65

நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரிய வேண்டிய தகவல், அது நல்ல நாயா, வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான். ஆனால் எப்படியானாலும் நாய்க் கடித்த உடனே அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். உடனடி சரியான சிகிச்சை கட்டாயம் உயிரைக் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை; எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?

 வெறிநோயின் சுவாரசிய தகவல்கள்..! 

வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது.

மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!

வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே – வருகிறது. அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது. ஆனால் அமெரிக்காவில் வௌவால் & பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons) ஷங்க்(skunks) ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது.

நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது. வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்பட பாதை போட்டுத் தருகிறது.

முற்றிய வெறிநோய்!

வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின் வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான் ஒரே முடிவாக இருக்கும்.

நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!

நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார். பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்…

வெறிநோயின் பயணப்பாதை..! 

வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது. பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது. பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.

வைரஸின் அதிவேக செயல்பாடு!

மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டி இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே, அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.

நோயின் அறிகுறிகள்..! 

துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்; ஒழுகும். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். சுவாசிக்க முடியாமையால் உயிர்ப் பிரிதல் நேரிடும்.

வெறிநோய் உருவாக்கும் லைசாவின் தந்திரங்கள்..!

வெறிநோய் வைரசான லைசாவில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நம் உடலின் படைவீரர்களான இரத்த வெள்ளையணுக்களின் ஒரு பிரிவான லிம்போசைட்டுகளிடம் (Lymphocytes) லைஸா வைரஸ் பெப்பே காண்பித்து நம் உடலுக்குள் நுழைந்துவிடும். பின் அதன் பார்வையிலிருந்து தப்பி மறைந்து வாழும் திறன் உள்ளது இந்த லைஸா வைரஸ். அதனால், இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தாலும், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், உடலுக்குள் நுழைந்த வைரசுடன், போர்வீரர் வெள்ளையணுக்கள் போரிட முடியாது. எனவே, எந்த தற்காப்பு நடவடிக்கையும் நம் உடலால் எடுக்கப்பட மாட்டாது. உடலுக்குள் லைஸா கொலை வெறியுடன் ஜாலியாய் சுற்றி வரும். லைஸா வைரஸ் நம் உடம்பில் நுழைந்த சில நாட்கள்/வாரங்களுக்குள் (நுழையும் இடத்தைப் பொறுத்து, கால் என்றால் சில மாதங்கள், வயிறு என்றால் சில வாரங்கள் வாய்/கன்னம்/நெற்றி என்றால் 10 நாட்களில் ) வெறிநோயின் அடையாளங்களை/அறிகுறிகளை, உடலில் பதிவு செய்யும். சில சமயம் இந்த வைரசின் அடைகாக்கும் திறன் 7 ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு.

லைஸா வைரசின் தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!

லைஸா வைரஸ் எந்த மூலக்கூறு செயல்பாட்டில் (Molicular mechanism ) ஏறிப் பயணம் செய்து தாவிப் பரவுகிறது என்ற தகவல் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒரு முறை வெறிநோய் அறிகுறிகள் வெளிப்படையாய் தெரிய ஆரம்பித்து விட்டால் போதும். நம்மை இந்த உலகில் எந்த மருத்துவராலும், எந்த சக்தியாலும் எந்த வகையிலும் காப்பாற்றவே முடியாது. இந்த வைரஸ் செல்லுக்குள் தனியான வைரஸ் தொழிற்சாலை (Virus factory) உண்டாக்கி, அதில் தன் பெருக்கத்தைச் செய்யும். அதன் பெயர் நைக்ரி துண்டுகள் (Naigri bodies). இதனைக் கண்டுபிடித்தவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் லேன்னோக்ஸ் பாவன் என்ற ஒரு பாக்டீரியலாளர்.. (Dr. Joseph Lennox Pawan of Trinidad in the West Indies, a Government Bacteriologist ).இந்த நைகரி உடலை இவர் 1931 ல் வௌவால்களின் மூளையிலிருந்து கண்டறிந்தார்.

லைஸா வைரசின் மோதல்/போர் உடலுக்குள்..!

இந்த வைரஸ் நம் உடலின் இண்டர்பெரானுடன் (interferon) முட்டி மோதி சண்டையிட்டு அதனை தோல்வியுறச் செய்கிறது. உடலின் தற்காப்புத் திறனைக் காலி செய்கிறது. மூளையின் பலவித நடவடிக்கைகளை முடக்குகிறது. அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. பின் நமது உமிழ் நீர் சுரப்பிக்கும் தாவுகிறது. ஏராளமான உமிழ் நீர் கட்டுக்கடங்காமல் சுரக்கிறது. அந்த உமிழ்நீரில் எக்கச்சக்க வைரஸ் இருக்கும். அத்துடன் வாய் மற்றும் கன்னத்திலும் வைரஸ் கோடிக்கணக்கில் வழியும். எனவே நாய் கடித்து 2 நாளிலிருந்து-5 ஆண்டுகள் வரையிலும் வெளியிலேயே தெரியாமல் அடைகாத்து, இது உடலில் தங்கி, பின்னர் அறிகுறி உண்டாகி முடிவில் இறப்பு ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புக்குள்ளான பாலூட்டிகள் கடித்த ஒரு சில வாரங்களிலேயே உலகை விட்டு சென்றுவிடும். ஆனால் ஆப்பிரிக்க கீரி மட்டும், இந்த உடல் உபாதைகளோடேயே பல ஆண்டுகள் வாழ்கின்றன.

வைரசின் வாழ்க்கை முறை..!

வைரசின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வைரஸ் பெருக்கம் செய்ய/உயிர் வாழ கட்டாயமாய் இன்னொரு செல்/உயிர் வேண்டும். வைரஸ் தானே தனியாய் தனித்தியங்கி சுதந்திரமாய் வாழ இயலாது. இன்னொரு செல்/உயிர் கிடைக்கும் வரை வைரஸ் சிவனே என்று காத்துக்கிடக்கும். அந்த காத்திருத்தல் காலம், சில சமயம் 2 ஆண்டுகள்/200 ஆண்டுகள்/2000 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குப்பின்னும் கூட! ஆனால் ஓர் உயிர் மட்டும் கிடைத்துவிட்டால் வைரஸ் டபக்கென்று உயிர்த்தெழுந்து தன் இனத்தை விருத்தி செய்யும்.

உலக நாடுகளில் வெறிநோய் நிலைமை..!

உலகம் முழுவதும் 97% வெறிநோய், நாய்க்கடியிலிருந்துதான் உருவாகிறது. நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். நமக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நம்மை வெறிநாய்க்கடியிளிருந்து 3 ஆண்டுகள் தப்பிக்கலாம். அமெரிக்காவில் விலங்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மூலம் வீட்டு நாய்களுக்கு வெறிநோய் வருவது கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட அமெரிக்காவில் வௌவால், பூனை மற்றும் ராகூன் மூலம் வெறிநோய் வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளில் வெறிநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நோய் வௌவால் மூலம் காற்றின் வழியே பரவுகிறதாம்.

வெறிநோய் இறப்பின் தகவல்கள்..!

வெறிநோய் இன்று சுமார் 150 நாடுகளுக்கு மேல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெறிநாய் வாழும் இடங்களில்/வெறிநோய் வரும் வாய்ப்புள்ள இடங்களில் சுமார் 330 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் 55,000௦௦௦ மனித உயிர்களைப் பலி வாங்குகிறது வெறிநோய். இந்த இறப்புகளில் 90% ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் நிகழ்கிறது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 20,000 பேர் வெறிநோயினால் இறக்கின்றனர். இது உலகில் ஏற்படும் வெறிநோய் சாவுகளில் 36% ஆகும். இறப்பு நிகழ்வில் 40% வெறிநோய் இறப்புக்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. இவர்களும் கடித்த நாய், வெறிநோய் வந்த நாய் என்று தெரியாமலே கடிபட்டு, பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வெறிநோய் வியாதி முற்றும் வரை வெளியே தெரியாமல் கமுக்கமாய், அடக்கமாய் உடலுக்குள்ளேயே இருக்கும். வெறி முற்றிய பின்தான் அதன் அறிகுறிகள் வெளியே வெளிப்படும்.

வெறிநோயிலிருந்து காப்பாற்றப்படும் மனித உயிர்கள்..!

ஒவ்வொரு ஆண்டும், உலகில் சுமார் 1 1/2 கோடிப்பேர், நாய்க்கடிக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் 32,700 இறப்புக்கள் தடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தெரு நாய்கள் மூலமும், சில சமயம் வளர்ப்பு நாய்கள் மூலமும் வெறிநோய் உண்டாகிறது.

வெறிநோயின் ஆதிகால சரித்திரம்…!

வெறிநோய் பற்றிய தகவல் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக பதிவுகள் சொல்கின்றன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய பதிவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தவகல்கள் சொல்லுகின்றன. மனிதனுக்கு நாயுடன்தான் முதலில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. இதன் வயது சுமார் 12,000 வருடங்கள். ஆனாலும் கி.மு 1930களில் எஷ்னுன்னாவின் கோடக்சில்(Codex of Eshnunna)தான் வெறிநோய் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கியூநிபாரம் எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் சொந்தக்காரருக்கு எப்படி வெறிநோய் அறிகுறிகள் உருவாயின என்றும், அதற்கான தடுப்பு முறைகளும் கூட கூறப்பட்டுள்ளன. அதன் பின்னர் கி.மு 800-700௦௦களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார். கி.மு 420களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். கி.மு. 400ல் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார்.

வெறிநோய்த் தடுப்பு மருந்தும் உயிர் காத்தலும்!

பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885ல் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) & எமைலி ரௌக்ஸ் (Emile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்கனவே வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர். இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.

முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.

வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?

முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும். ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம். 4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.

வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப்படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.

கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப்பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.

நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.

வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.

உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப்படுதலும் நிச்சயம்.

வெறிநோய் உற்பத்திக்கூடம்..!

இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி, இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500/= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.

உலக வெறிநோய் தினம்..!

செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப்பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன் போராடி வெற்றி கண்டார். இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில் 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில் 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர். வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.

வெறிநோய் பற்றிய ஆய்வு..!

சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம்.

வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!

ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. நம்மிடையே இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது. மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.

நீங்கள் செய்யவேண்டியவை..:

நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள். அதன் மூலமும் வெறிநோய் வரலாம்.

வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும்.

விலங்குகளால் ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.

நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி பழகக் கூடாது.

குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.

நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.

உலகம் முழுவதுமே வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்