Home ஆரோக்கியம் பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்

பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்

26

லிப்பெடீமா என்பது என்ன?
லிப்பெடீமா என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும். இதனை ‘பெயின்ஃபுல் ஃபேட் சின்ட்ரோம்’ என்றும் அழைப்பர். உலகளவில் சுமார் 11% பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது.

லிப்பெடீமா எதனால் ஏற்படுகிறது?
லிப்பெடீமா ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் இந்தப் பிரச்சனை இருந்திருந்தால், அவருக்கும் வர வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது. இந்தப் பிரச்சனை பொதுவாக பூப்படையும்போது, கர்ப்பத்தின்போது அல்லது மாதவிடாய் நிற்கும் சமயத்தில் ஏற்படுவதால், ஹார்மோன்களுக்கும் இதில் பங்கிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. லிப்பெடீமா என்பது பிரதானமாக அடிபோஸ் திசுக்களின் (கொழுப்பு) பிரச்சனையாகும். உடல் பருமன் காரணமாக லிப்பெடீமா ஏற்படுவதில்லை. சரியான உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சனை வரலாம்.
லிப்பெடீமாவின் அறிகுறிகள்:
இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்:
கால்களில் சமவிகிதமற்ற செங்குத்துத் தசைப்பகுதிகள் காணப்படலாம்
பெரும்பாலும் வலி இருக்கும். தொடும்போது உணர்திறன் அதிகமாக இருக்கும்
கைகள், மூட்டு அல்லது தொடைகளுக்கு மேல் கொழுப்பு ஒரு பட்டை போல் படிந்து காணப்படும்
நடமாடுவதில் சிரமம் அதிகரிக்கும்
தோலின் நெகிழ்தன்மை இழக்கப்படும்
லிப்பெடீமா எப்படி உறுதிப்படுத்தப்படுகிறது?
உங்கள் மருத்துவர் உடலைப் பரிசோதனை செய்து லிப்பெடீமா இருப்பதைக் கண்டறியலாம், அதற்கான காரணத்தையும் தீர்மானிக்கலாம். பெரும்பாலும், இதனை உடல் பருமன் என்றோ லிம்ஃபோடிமா (நிணநீர் சேருவதால் ஏற்படும் வீக்கம்) என்றோ தவறாகக் கருத வாய்ப்புள்ளது. உடலில் திரவம் கூடும்போது லிம்ஃபோடிமா ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளும் லிப்பெடீமா அறிகுறிகளும் ஒன்றேபோல் இருக்கலாம். ஆனால் லிப்பெடீமாவில் தோலுக்கடியில் கொழுப்பு சேரும், லிம்ஃபோடிமாவில் திரவம் சேரும்.

லிப்பெடீமாவுக்கான சிகிச்சை:
அறுவை சிகிச்சையற்ற சிகிச்சைகளும் உள்ளன, கொழுப்பு சேர்ந்துள்ள திசு சில கருவிகளின் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் லிப்போசக்ஷன் முறையும் பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையற்ற சிகிச்சை முறைகள்:
மசாஜ்: மசாஜ் செய்வதன் மூலம் திரவம் உடல் முழுதும் பரவச் செய்யப்படுகிறது.
கம்ப்ரஷன் சிகிச்சை: இதில் இறுக்கமாக உடைகளும் பேண்டேஜ்களும் அணிவிக்கப்படுகின்றன.
உடற்பயிற்சி: நீந்துவதும் பிற அதிக பாதிப்பில்லாத உடற்பயிற்சிகளும் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.
லிப்போசக்ஷன்: பாதிக்கப்பட்ட உடல் பரப்பு மரத்துப்போகச் செய்யப்படுகிறது, பிறகு கூடுதலாக உள்ள கொழுப்பு ஒரு குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.
அடுத்து செய்ய வேண்டியவை
உங்கள் உடலில் எங்கேனும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பதை நீங்கள் கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.