Home ஆரோக்கியம் வலி நிவாரணியால் ஏற்படும் உடல் உபாதைகள்

வலி நிவாரணியால் ஏற்படும் உடல் உபாதைகள்

17

வலி நிவாரணிகள் என்பவை, நமது நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, நமக்கு வலி ஏற்படுத்தும் உணர்வை செயலிழக்கச் செய்யும் மருந்தாகும். இது, ஒரு தற்காலிக மாற்று நிலையே தவிர, நமது வலிக்கான நிரந்தரத் தீர்வு கிடையாது.

அதிக வீரியம் உள்ள வலி நிவாரணிகள் ‘ஓப்பியாய்டு‘ எனப்படும் போதைப் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான வலி நிவாரணிகள் ஆக்சிகோடோன், ஹைட்ரோகோடோன், மெப்ரிடைன், ஹைட்ரோமார்போன், ப்ரொபாக்ஸிபீன் போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, அதை மந்தப்படுத்தி வலி உணர்வைப் போக்குகின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.

வலி நிவாரணிகளை டாக்டர் பரிந்துரையுடன் எடுத்து கொள்ளும் போது மிகவும் பாதுகாப்பான மருந்தாகச் செயல்படுகின்றன. ஆனால், எந்த வழிகாட்டுதலுமின்றி, தங்கள் விருப்பம் போல் எடுக்கும் போது அதுவே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது, குமட்டல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண், அலர்ஜி போன்றவை ஏற்படும். அளவுக்கு அதிகமாக வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டால், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் பிரச்சினைகள், எலும்புத் தேய்மானம், பற்கள் வலுவிழத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வலி என்கிற அறிகுறி, சாதாரணப் பிரச்சினையால் கூட ஏற்பட்டிருக்கலாம். அதை கண்டறிந்து தீர்வு பெற வேண்டும். அதைவிடுத்து சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளும் போது, பிரச்சினை தீவிரமடைகிறது. சிலவகை ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், வலி நிவாரணியையும் சேர்த்து எடுக்கும் போது, அவை ஒன்றிணைந்து உயிரிழப்பு வரை செல்கிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், வலி நிவாரணிகள் எடுக்கும்போது செரிமானப் பிரச்சினை, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள்கூட ஏற்படலாம்.

உடம்பில் மருந்தைச் செயல்படுத்தி, வெளியேற்றும் பணியை கல்லீரலும், சிறுநீரகங்களும் செய்கின்றன. அளவுக்கு அதிகமாக மருந்தை எடுத்துக் கொள்ளும் போது, கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விடுகின்றன. சில வகை வலி நிவாரணிகளைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது தூக்கமின்மை ஏற்படும்.

உதாரணமாக அல்சர், காயங்கள் உள்ளவர்கள் ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகளை உபயோகிக்கும் போது, அது ரத்தப்போக்கை ஏற்படுத்தும். வலிகளைத் தடுப்பதற்கு அவற்றின் தன்மைக்கு ஏற்ப, சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒருவருக்கு ஏற்படும் வலியின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொரு சிகிச்சையையும் தகுந்த நிபுணரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.