Home ஆரோக்கியம் ஒழுங்கற்ற தூக்கம் மாரடைப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகுறிப்பு

ஒழுங்கற்ற தூக்கம் மாரடைப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகுறிப்பு

17

தூக்கம் என்பது அவசியம் தேவையானது என்றும், அதுவும் ஒழுங்கற்ற தூக்கம் அல்லது குறைவான தூக்கம் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளைத் தருகிறது என்றும் தெரிந்திருப்பீர்கள், இந்த வகையில் இதனைப் பற்றி புதிய ஆய்வு முடிவு ஒன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி உள்ளது.

தூக்கமின்மையால் தொற்றுநோய்கள், இதய நோய்கள், மன அழுத்தம்,உயர் குருதி அழுத்தம், உளநோய்கள், பக்கவாதம், நீரிழிவு, உடல் பருமனடைதல் இப்படியே பட்டியல் போடலாம். இந்த வரிசையில் சமீபத்தைய ஆய்வில் இரவில் தூக்கமின்மை அழற்சி நோய்களை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் இதய நோய்கள், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு (Stroke) என்பதனை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.

அட்லாண்டாவில் உள்ள எமொரிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பாடசாலையில் அலானா மொரிசு என்னும் இதயநோய் நிபுணராலும் அவரது சகாக்களாலும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க இதய நிறுவனத்தின் கூட்டம் (AHA) ஒன்றில் 14 நவம்பர் 2010 அன்று வெளியிடப்பட்டது.

இவ்வாய்வில் 525 நடுத்தர வயதுடையவர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் தூக்கத்தின் தன்மையும் தூக்க நேரமும் ஆராயப்பட்டது. பிட்ஸ்பெர்க் தூக்கத் தன்மையைச் சுட்டி (PSQI) எனப்படும் அளவு தூக்கத்தின் தன்மையைக் கணிக்கப் பயன்பட்டது, இதன்படி இந்தச் சுட்டின் பெறுமானம் ஆருக்கும் மேல் இருந்தால் ஒழுங்கற்ற தூக்கம் எனக் கணிக்கப்பட்டது. இத்துடன் அவர்கள் தூங்கும் நேர அளவும் இரவில் ஆறு மணிநேரத்துக்கும் குறைவான தூக்கம், தூக்க நேரம் 6 – 8.9 , ஒன்பதுக்கு மேல் என மூன்று பிரிவுகளாக்கப்பட்டது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் குருதி உறைதலைத் தூண்டும் முதற் காரணியான பைபிரினோஜன் [Fibrinogen (factor I) ], அழற்சி மற்றும் காய்ச்சலின் போது சுரக்கும் இன்டெர்லியுகீன் – 6 (IL-6), அழற்சியின் போது உயர்வடையும் அத்துடன் இதய நோயை எதிர்கூறும் C-தாக்கப் புரதம் (CRP) ஆகியன குருதியில் தொடர்ச்சியாகக் கணிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் கவனிக்கப்பட்டவை:

· நன்றாகத் தூங்கியோருடன் ஒப்பிடுகையில் ஒழுங்கற்ற தூக்கம் கொண்டோரில் மேற்கூறிய மூன்றும் (பைபிரினோஜன், IL-6, CRP) உயர்வடைந்திருந்தது.

· மேற்கூறிய பதார்த்தங்கள் மூன்று விதமான தூக்க நேர அளவின் ஒவ்வொன்றிலும் வேறுபட்டுக் காணப்பட்டன.Posted Image

· தூக்க நேர அளவு 6 – 8.9 மணிநேரமாக உள்ளோரில் மூன்று பதார்த்தங்களும் குறைவாகக் காணப்பட்டன.

· தூக்க நேர அளவு 6 – 8.9 மணிநேரத்துக்கும் 9 மணிநேரத்துக்கும் இடையே எதுவித குறிப்பிடத்தக்க புள்ளிவிபர வேறுபாடுகள் காணப்படவில்லை.

இதிலிருந்து ஒழுங்கற்ற தூக்கமும் குறைந்த மணிநேர இரவுத்தூக்கமும் அழற்சியைக் கூட்டவல்லது எனக் கருதப்பட்டது. இதிலிருந்தும் முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்தும் ஒரு நாளைக்கு ஏழு தொடக்கம் எட்டு மணிநேரம் இரவுத்தூக்கம் கொள்பவர்கள் ஆரோக்கியமாக நீண்ட நாள் உயிர்வாழலாம் என்பது உறுதியாகி உள்ளது. இந்த அளவில் இருந்து குறைந்தாலோ அல்லது கூடினாலோ வாழ்க்கை நேரம் குறைந்துவிடும் என்பது வெளிப்படை, இவர்களில் உயர் குருதி அழுத்தம், உளநோய்கள், நீரிழிவு, உடல் பருமனடைதல் என்பன வரலாம், இவையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும் காரணிகளாகத் திகழ்கிறது.

எனவே இரவு நேரத்தில் தொழில் புரிதல், முழித்திருந்து படித்தல், கணிணி உலகில் (குறிப்பாக இணையத்தில்) வலம் வருதல் போன்றவற்றைத் தவிர்த்து இரவுத் தூக்கத்தை ஒழுங்காக 7-8 மணிநேரம் தூங்கிடுவோம், நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி வாழ்வோம்.