Home இரகசியகேள்வி-பதில் “பாலியல் கேள்விகளுக்கு “தமிழ் டாக்டர் “றின் பதில்கள்!”

“பாலியல் கேள்விகளுக்கு “தமிழ் டாக்டர் “றின் பதில்கள்!”

69

என் இனிய நண்பர் கோவி. கண்ணன் பாலியல் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, என்னால் முடிந்த அளவில் இங்கு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அவருக்கு எனது நன்றி.

இங்கு சொல்லப்படுபவை எல்லாமும், மருத்துவக் குறிப்புகளும், ஆய்வுகளும் சொல்வதை வைத்தே நான் இடுகிறேன் என்பதையும், உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியம் என்பதையும் மனதில் கொள்ளவும். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டுமே! முடிந்தவரையில், உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.

கேள்வி -1

டிபிசிடி கேட்ட, கேள்வி :

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்தப் பிறகு தேவைப்பட்டால் பின்னாளில் மீள்பெற வழியுண்டா..(இருபாலர்க்கும்)…?

பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி!
ஏனென்றால் ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கும், பெண்களுக்கு செய்யப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஆண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை,[vasectomy] விந்தணு [sperm] வரும் குழாயை மட்டும் துண்டிப்பதால் நிகழ்கிறது. இதை அநேகமாக திருத்தி அமைக்க முடியும். ஏனென்றல், இது விரைப்பைக்குள்[scrotum] இருப்பதாலும், இந்தாக் குழாய் நீளம் அதிகம் இல்லாமல் இருப்பதாலும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு இதை வெற்றிகரமாக திருத்தக் கூடிய முறைகள் இருக்கின்றன.

பெண்கள் விஷயத்தில் இது சற்று சிக்கலானது. கருமுட்டை[ovum] சினையிலையில்[ovaries] உருவாகி, ஒரு குழாய்[fallopian tubes] மூலம் சினைப்பைக்கு[uterus] வருகிறது. இந்தக் குழாய் இருபுறமிருந்தும் [வலது, இடது] வருகிறது. இவை சற்று நீளமான குழாய்கள் என்பதால், அறுவை சிகிச்சை முடிந்தபின், இவை சுருங்கி விடுவதால், மீண்டும் சேர்ப்பது கடினமாகிப் போகிறது. இங்கு 100க்கு 40 சதவிகிதமே பலனளிக்கிறது. அதுவும் உடனே செய்யப்படுபவர்க்கே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
அறுத்துக் கொள்வதைவிட, மீண்டும் இணைப்பதற்கு அதிகச் செலவாகும்….. இரு முறைகளிலும்!

கேள்வி-2
குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் உடலுறவில் ஏதேனும் வித்தியாசம் வர வாய்புள்ளதா..?

பதில்: இங்கு ஆண்களைப் பற்றியே கேட்பதாக நினைக்கிறேன்.
இருந்தாலும், இருபாலர்க்கும் பொதுவாகவே சொல்லுகிறேன்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால், எந்த விதத்திலும்…… ஆமாம்….. எந்த விதத்திலும் உடலுறவு கொள்வதில் வேறுபாடே இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இதைச் செய்து கொண்டவரின் மனநிலையைப் பொறுத்து இதில் சில வேறுபாடுகள் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இனி தன்னால், ஒரு பெண்ணைக் கருவாக்க முடியாது என்பதால், சிலரது மனநிலை தளர்ந்துபோய், குறி விரைப்பிலிருந்து [erection], முழு உறவு கொள்வது வரைக்கும், பல ஆண்கள் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி, உடலுறவில் ஒரு உற்சாகமின்மையைக் கொள்ளுகிறார்களாம்!

பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என ஆய்வு சொல்லுகிறது!

தன்னிடமிருந்து ஒரு பெரிய துருப்புச் சீட்டு…. கருத்தரிப்பு என்ற ஒன்று…. பறிபோனதாகக் குமைந்து அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி, உடலுறவில் ஈடுபாடில்லாமல் போகிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.

இருபாலரும் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனிக் கருத்தரிக்க உதவமுடியாது என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த விதத்திலும் இதனால் குறையே இல்லை.

விரும்பிச் செய்து கொண்ட பின்னர், இப்படி மன வருத்தம் கொள்ளாமல், உடலுறவை மகிழ்வோடு, பயமில்லாமல் அனுபவிக்க இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்!

கேள்வி – 3

கிரி :

கோவி.கண்ணன் கூறியபடி பார்த்தால், அவரருடைய நண்பர் விலைமாதிடம் சென்றதால் தான் ஆண்மை குறைவு ஏற்பட்டதா?
பதில்: முழுக்க முழுக்க தவறான கருத்து இது! விலைமாதிடம் செல்வதால், ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பாலியல்நோய் வரவே நிறைய வாய்ப்பிருக்கிறது!

கேள்வி -4
ஆமாம் என்றால். விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?

கசடற: ஒரு சம்பந்தமும் இல்லை!

கேள்வி -5
இல்லை அவருக்கு முன்பே ஆண்மை குறைவு இருந்ததா?

பதில்: எனக்குத் தெரியாது! அப்படி இருந்திருந்தால், எப்படி அடிக்கடி அவரால் அங்கு செல்ல முடிந்தது?!!

கேள்வி -6

அனானி : மருத்துவர் வீஎஸ்கே ஐயா,

கோவி.கண்ணன் பதிவில், யரோ ஒரு நண்பர் ‘ஆண்கள் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு பின் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு காற்றுதான் வரும் என்று சொன்னதாகவும், அதைக் கேட்டு சிரித்ததாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு பதிலை அவர் சொல்லவில்லை. தாங்கள் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பற்றி விளக்க முடியுமா ?

பதில்: சுருக்கமாகச் சொல்லுகிறேன் இங்கு. ஏனென்றால், இதைப் பற்றி விரிவாக எனது அடுத்த பதிவு வரும்.

ஆண்களுக்குச் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம், கருத்தரிக்கச் செய்யும் விந்தணுக்கள்[sperms] உற்பத்தி ஆகும் குழாய்[vas deferans]…. இது விரைப்பைக்குள் இருக்கும் விரைவிதைகளில்[testicles in the scrotum] இருந்து துவங்குகிகிறது……. மட்டும் துண்டிக்கப்பட்டு, உடலுறவின் இறுதியில் வெளியாகும் விந்துவுடன் கலக்காமல் இருக்கச் செய்யப் படுகிறது.

இதன் மூலம், விந்தணு கலக்காத விந்து நீர்[semen] மட்டுமே இறுதியில் பாய்கிறது.
எனவே, காற்று மட்டுமே வரும் என்பதெல்லாம் யாரோ விட்ட புருடா! நம்பாதீங்க!

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படுகிறது என்பதை விரிவாக விளக்கி பதிவிடுகிறேன்.