Home இரகசியகேள்வி-பதில் பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும்

பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும்

69

26.. குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?”
27. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?
28. வயது 30. எடை 65 கிலோ. மார்பு வளர்ச்சி இல்லை. சிகிச்சை ஏதாவது உள்ளதா?
29. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. தீர்வு என்ன?
30. கரப்பப்பையை எடுத்த பிறகு எடை கூடி விட்டது. குறைக்க வழி என்ன?
31. ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். உண்மையா?
32. குடும்பக் கட்டுப்பாடு செய்தால் அது தாம்பத்ய உறவைப் பாதிக்குமா?
33. கர்ப்பப் பையை எடுத்தபோது ஓவரீஸையும் சேர்ந்து எடுப்பது தவறா?
34. கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகுமா?
35. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி என்ன?
பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (3)

கேள்வி 26 : பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவரின் படிப்பு, உத்யோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் திருப்தியடைந்த பின்னரே திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனால், மணமான இந்த எட்டு மாதங்களில் அவருக்கும் எனக்கும் கேரக்டர், ரசனை அனைத்துமே நேர்மாறானதாக இருப்பதாக உணர்கிறேன். குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?”
பதில் : “பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் மட்டுமல்ல, காதல் திருமணங்களிலும் மணமான சில வருடங்களுக்கு கணவன் – மனைவி இருவரின் எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம் ஏமாற்றம் அடைவது இயல்புதான். இதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டால், சமூகத்தின் பொதுத்தன்மையில் உங்களது தனிப்பட்ட குடைச்சலாக நீங்கள் பதற்றப்படுவது சற்றே மட்டுப்படும்.

இப்பிரச்னையைப் பொறுத்தவரை, சொல்வதற்கு எளிதானதும் நடைமுறையில் சற்றுக் கடினமானதுமான தீர்வுஸ அட்ஜஸ்ட் செய்து போவதுதான். விட்டுக் கொடுக்கும்போது இழப்பதைவிட பெறுவதே அதிகமாக இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முயலுங்கள். காலக்கெடுவை நெருக்காது, உங்களவரை புரிந்து கொள்வதையும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களை அறிவதையும் ஒரு புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தோடு மேற்கொண்டு பாருங்கள்.
அதேபோல, ‘உங்கள் கணவரின் ஆர்வங்கள், ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காண முயலுங்கள். அவரது எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிய முற்படும்போது, தானாக அவரும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைவார். இது ஒரு ரேடியோ ட்யூன் செய்யப்படுவதுபோல இல்லறத்தில் இயல்பாக மலரும்.
எல்லாவற்றையும்விட, நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது முழுமையாகக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களின் இந்த எல்லா முயற்சிகளும் பலன் தரத் தவறினால், குடும்ப நல ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் உங்கள் எதிர்பார்ப்புகளை, சங்கடங்களை எல்லாம் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு பக்குவத்துடன் அடையாளம் காட்டலாம்.
‘எல்லா விஷயங்கள்லயும் அவரும் நானும் நேரெதிர்’ என்று கவலைப்படும் பெண்கள், இறுதியாக இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ‘ஐடியல் பார்ட்னர்கள்’ சினிமாவில், சீரியலில் மட்டுமே அமைவார்கள். நடைமுறையில், ஒருமித்த ரசனை உள்ள தம்பதியரைவிட வெவ்வேறு தளங்களில் ரசனை உள்ளவர்களின் தாம்பத்யமே வெகுகாலத்துக்கு சுவாரஸ்யமளிக்கும். ஆம்ஸ ஒருமித்த ரசனைகள் நாள்போக்கில் புதுமையின்றி போரடித்துப் போகலாம். எனவே, புலம்பலை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் புரிதலை துரிதமாக்குவதன் மூலம் உங்களை செம்மையான வாழ்க்கைத் துணையாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்!”
(பதிலளித்தவர் : டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர், வேலூர்)

கேள்வி 27 : ‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் கரு உண்டாகவில்லை. என் உறவினர் ஒருவர் ‘உடலின் அதிக சூடு காரணமாக விந்தணுக்கள் இறக்கக்கூடும். சூட்டை அதிகரிக்கிற புளியே உணவில் சேர்க்கக் கூடாது’ என்கிறார். என் வீட்டிலோ புளியோதரை, புளிக்குழம்பு போன்றவற்றை அடிக்கடி செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. மாதவிலக்கான நாளில் இருந்து சரியாக 14\வது நாள் உறவு கொண்டும் பலன் இல்லை.

என் கேள்விகள் இதுதான்…
1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?
2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை?
3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’
பதில் : ‘‘உங்கள் வயது என்னவென்று நீங்கள் குறிப்பிடவில்லை. 24 வயதுக்குள்தான் என்றால் நீங்கள் தாராளமாக இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கலாம். மற்றவர்கள், ஸ்பெர்ம் அனலைசஸ் அதாவது விந்தணு, முட்டை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

30-ஐ நெருங்கியவர்களாகவோ, 30-க்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
சாப்பாட்டில் புளி அதிகம் சேர்ப்பதால் எல்லாம் தாம்பத்ய உறவிலோ, விந்தணுக்கள் உற்பத்தியிலோ எந்த பாதிப்பும் இருக்காது. கவலை வேண்டாம்.
ஆண்களுக்கு, உடம்பில் சூடு அதிகமானால் விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மைதான். தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் அருகில் பணிபுரிகிறவர்களுக்கு உடம்பில் நேரடியாக சூடுபடுவதால், விந்தணுக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு, ரத்த நாளங்களில் ஏற்படுகிற சில மாற்றங்களால் உடம்புக்குள் சூடு அதிகரித்து, அதனாலும் விந்தணுக்கள் குறையலாம்.
மற்றபடி, பொதுவாக, திருமணம் முடிந்து 5 அல்லது 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவ சிகிச்சை எடுக்கிறவர்கள் மட்டுமே, மருத்துவரின் அறிவுரைப்படி, நாட்களை கணக்கிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது என்கிறீர்கள். தாம்பத்ய உறவிலும் பிரச்னை இல்லை என்பதால், கருத்தரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பதில் தப்பே இல்லை!’’
(பதிலளித்தவர் : டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை)

கேள்வி 28 : ‘‘என் வயது 30. எடை 65 கிலோ. இன்னும் திருமணம் ஆகவில்லை. என் உடம்பிற்கு தகுந்த மார்பகங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் காம்புகளின் வளர்ச்சி இல்லை. தடவிப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதுவும் சில நேரங்களில் உள்ளே அமிழ்ந்து விடுகிறது. அப்படியே வெளியே வந்தாலும் ஒரு துளியூண்டுதான் வருகிறது. தினமும் காலையில் இழுத்துவிட்டுப் பார்த்தும், எந்த முன்னேற்றமும் இல்லை.

இதேபோன்ற ஒரு பிரச்னைக்கு ஒரு பதிலில் சிரின்ஜ் மூலம் இழுத்துவிடச் சொல்லியிருந்தார்கள். அது பாலூட்டும் ஒரு தாய்க்கு அளிக்கப்பட்ட பதில். நான் அப்படிச் செய்யலாமா? நான் வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சை ஏதாவது உள்ளதா?
என்னுடைய தோழி பார்த்துவிட்டு, ‘இப்படி இருக்காதே.. நீளமாகத்தானே இருக்கும்’ என்கிறாள். இதனால் எனக்கு கல்யாணம் செய்துகொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த வயதிலாவது எனக்கு திருமணம் நடக்க வேண்டும். உங்கள் பதிலில்தான் என்னுடைய வாழ்க்கையே உள்ளது. டாக்டரிடம் சென்று கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. என்னுடைய நிலைமையை உணர்ந்து, பதில் தாருங்களேன்..’’
பதில் : ‘‘உங்களுக்கு உள்ளிழுக்கப்பட்ட மார்பு காம்பு (Retract-d-Nipple) என்கிற பிரச்னை உள்ளது.

நீங்கள் கேட்டிருந்ததுபோல உங்கள் மார்புக் காம்பை வெளியில் இழுத்து விடுவதுதான் இதற்கு சிறந்த சிகிச்சை. 20 சிசி ப்ளாஸ்டிக் சிரிஞ்சின் (20cc Plastic Syringe) முனையை வெட்டிவிட்டு, பின்னர் சிரிஞ்சின் உள்பகுதியைத் திருப்பிப் போட்டு மார்பில் நன்றாகப் பொருத்தி இழுத்தால் ஏற்படும் நெகடிவ் அழுத்தத்தில் காம்புகள் நன்றாக வெளியில் வரும் (எப்படிச் செய்வது என்கிற சந்தேகம் இருந்தால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசியுங்கள்). இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
நீங்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிரசவத்திற்குப் பின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க சிரமமிருந்தால் நிப்பிள் ஷீல்டு எனப்படுகிற நிப்பிள் உறை உபயோகிக்கலாம். அல்லது பாலை எடுத்து பாலாடை அல்லது ஸ்பூனில் ஊற்றிக் கொடுக்கலாம்..’’
(பதிலளித்தவர் : டாக்டர். ஆர். கலைச்செல்வி, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர், சேலம்)

கேள்வி 29 : ‘‘என் வயது 31. எடை 86 கிலோ. திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. ஏழு மற்றும் பதினோரு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டேன்.

என் இரண்டாவது பையன் பிறந்த பிறகு அடிக்கடி கழிப்பறைக்கு போக ஆரம்பித்தேன். டாக்டரிடம் விசாரித்தபோது, காரம் அதிகம் இல்லாமல் சாப்பிடச் சொன்னார். நானும் அப்படித்தான் சாப்பிட்டு வருகிறேன். இருந்தாலும் இந்தத் தொந்தரவு நீங்கவில்லை.
காலையில் எழுந்தவுடன் நான்கு முறையாவது போகிறேன். மதியம், இரவு, சாப்பிட்டவுடன் போகிறேன். இதனால் என்னால் வெளியில் விசேஷங்களுக்கு எங்கும் போக முடியவில்லை. இதற்கு நீங்கள்தான் ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்..’’
பதில் : ‘‘உங்களுடைய பிரச்னைக்கும் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘ஒரு நாளைக்கு காலையில் நான்கு தடவை போகுது’ என்று சொல்வதைப் பார்க்கும்போது உங்களுக்கு உடல் ஒவ்வாமை நோய் இருக்கலாம். அல்லது பெருங்குடலில் ஏதாவது கிருமிகள் ஒட்டிக் கொண்டிருந்தாலும் இப்படி ஆகலாம். உணவில் புரோட்டின் அதிகம் இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும். இது தவிர, டென்ஷனும் காரணமாக இருக்கலாம்.

இதை நீங்கள் உடனே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை, என்டாஸ்கோப்பி, க்ளானாஸ்கோப்பி பரிசோதனைளை செய்து, இதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரே வாரத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
உங்கள் எடை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்..’’
(பதிலளித்தவர் : டாக்டர். கே.ஆர்.பிரகாசம், வயிறு மற்றும் குடல்நோய் மருத்துவ நிபுணர், சேலம்)

கேள்வி 30 : ‘‘என் வயது 48. பத்து வருடங்களுக்கு முன் கர்ப்பப் பையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு எனது எடை கூடிவிட்டது. இப்போது 70 கிலோ. தினமும் காலையில் ஒரு மணிநேரம் வாக் போகிறேன். எனது உடம்பைவிட என் கைகள்.. குறிப்பாக வலது கை, முழங்கைக்கு மேல் அதிக சதையுடன் தடியாக உள்ளது. என்னால் எடை எதுவும் தூக்க முடிவதில்லை. தூக்கினால் கை வீங்கிவிடுகிறது. முழங்கைக்கு கீழே கை மெலிதாக உள்ளது. இதைச் சரிப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?

எனது மகளுக்கும் இதே பிரச்னைகள் இருக்கின்றன. அவளுக்கு வயது 22. ஏன் இப்படி?’’
பதில் : ‘‘உங்களுடைய பிரச்னைக்கு ‘லைப்போடிஸ்ப்ரோஃபி என்று பெயர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்வதை இப்படிக் குறிப்பிடுவோம். பொதுவாக, பெண்களுக்கு தொடையிலும் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும் இப்படி கொழுப்பு சேர்வதுண்டு. மிக அரிதாக சிலருக்கு உங்களுக்கு இருப்பது போல் ஆகும்.

ஒரு முக்கியமான விஷயம்.. ‘கர்ப்பப் பையை எடுப்பதால் உடல் பருமன் ஆகும்’ என்பது காலங்காலமாக நம்பப்படுகிற பொய். கர்ப்பப் பையை எடுத்ததும் பெண்களின் செயல்பாடு குறைந்துவிடுகிறது. சும்மா உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, நொறுக்குத்தீனி சாப்பிட்டபடியே இருப்பது போன்றவற்றால்தான் எடையும் கொழுப்பும் கூடுகிறது.
நீங்கள் தைராய்டு சுரப்பி, சர்க்கரை, கொலஸ்டிரால் ஆகிய பரிசோதனைகளை செய்து, ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுக்க வேண்டும். நீங்கள் மெனோபாஸ்க்கு முன்னாலேயே கர்ப்பப் பையை எடுத்திருப்பதால் எலும்பின் அடர்த்தியை பரிசோதிக்கும் ‘டெக்ஸா’ என்கிற பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
உங்கள் மகளுக்கும் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவரது தினசரி செயல்பாடு மற்றும் உணவுப் பழக்கங்களிலும் கவனம் தேவை. உணவில் கால்சியம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..’’
(பதிலளித்தவர் : டாக்டர். கிருஷ்ணா சேஷாத்ரி, ஹார்மோன் சிறப்பு நிபுணர், சென்னை)

கேள்வி 31 : ‘‘எனக்கு வயது 27. என் கணவருக்கு வயது 28. திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. நாங்கள் என் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறோம். எங்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், தற்போது கருத்தரித்து உள்ளேன். கருக்கலைப்பு செய்யலாம் என்றால் உறவினர்களும் தோழிகளும் ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். எனக்குக் குழப்பமாக உள்ளது. உங்களது ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்.’’
பதில் : ‘‘உங்கள் தோழிகளும் உறவினர்களும் சொல்வதே சரி. ஏனென்றால் கருக்கலைப்பு ஆபரேஷன் செய்யும்போது கர்ப்பப்பையின் இரண்டு புறமும் உள்ள ஃபெலோபியன் ட்யூபில் அடைப்பு ஏற்படும். அதன் காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, முதல் குழந்தைக்கு தாயாகும் முன்னரே கருக்கலைப்பு செய்வது வரவேற்கக் கூடிய விஷயமல்ல.

அதோடு, குழந்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதுதான் சரியான வயது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடவேண்டாம். செலவுகளை சுருக்கி, குழந்தைப் பிறப்பைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!’’
(பதிலளித்தவர் : டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை)

கேள்வி 32 : ‘‘எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது என் உடல்நலனை உத்தேசித்து, என் கணவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துகொள்ள தீர்மானித்து இருக்கிறார். ஆனால், அதில் அவருக்கு சில சந்தேகங்கள்…
குடும்பக் கட்டுப்பாடு செய்தால் அது தாம்பத்ய உறவைப் பாதிக்குமா? சிகிச்சைக்குப் பிறகு ஆண் உறுப்பிலிருந்து விந்து வெளியேறாதே… பிறகு எப்படி திருப்தியான வாழ்க்கை இருக்க முடியும்? ஆண்களுக்கு அறுவைசிகிச்சை எளிமையானதா? எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டும்? எந்தெந்த முறைகளில் இந்த சர்ஜரி செய்யப்படுகிறது? எது சிறந்ததது? சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டுகிறேன்.’’

பதில் : ‘‘உங்கள் கணவர் ‘வாசக்டமி’ என்கிற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் ‘கர்ப்பம் தரிக்குமே’ என்ற பயம் இருக்காது என்பதால் செக்ஸ் உணர்வு கூடுமே தவிர, குறையாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு விந்து வெளியேறாது என்பதிலும் உண்மையில்லை. அந்த திரவத்தில் கரு உருவாக்கும் உயிரணுக்கள் இருக்காது, அவ்வளவுதான்!
இந்த அறுவைசிகிச்சை எளிமையானதுதான். இதற்காக மருத்துவமனையில் ஒரே ஒரு நாள்தான் தங்கவேண்டியிருக்கும். வாசக்டமி தவிர, வேறு எந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையும் ஆண்களுக்குக் கிடையாது.’’
(பதிலளித்தவர் : டாக்டர். சபிதா ஸ்ரீதரன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை)

கேள்வி 33 : ‘‘என் வயது 47. எனக்கு 22 வயதில் திருமணம் ஆனது. 23 வயதில் 3 மாத அபார்ஷன். 50 நாட்கள் தொடர் ரத்தப்போக்கு இருந்தது. சுத்தப்படுத்திய பிறகு பொறுக்கமுடியாமல் டாக்டரிடம் போக, ‘ஏன் உடனே வரவில்லை?’ என்று திட்டினார். பின் உடல் குணம் அடைந்ததும் பத்து மாதத்தில் குழந்தை பிறந்தது.

பிறகு 10 வருடம் கழித்து மீண்டும் அபார்ஷன். பின் 20 நாளுக்கு ஒரு முறை மாதவிலக்கு. அதீத ரத்தப்போக்கு என்று தொடர்ந்தது. அப்படியே கஷ்டத்துடன் பல வருடங்கள் கழிந்தபிறகு சமீபத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் கர்ப்பப் பையை நீக்கினார்கள். அதனுடன் ஓவரீஸையும் எடுத்து விட்டார்கள். அதை எடுத்திருக்கக் கூடாதோ என்று என் மனதில் ஒரு எண்ணம்.
ஏனெனில், இந்த 5 மாதத்தில் என் முகத்தில் ஆங்காங்கே வரிகள் தெரிகின்றன. 5 மாதம் முன்பு இப்படியெல்லாம் இல்லை. இதைச் சரிசெய்ய க்ரீம் தடவலாமா? வேறு ஏதாவது டானிக் மாத்திரை உண்டா?’’
பதில் : ‘‘47 வயதான உங்களுக்கு கர்ப்பப் பையை எடுத்தபோது ஓவரீஸையும் சேர்ந்து எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. அவற்றை எடுக்காமல் விட்டால், அதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்பட்டு மீண்டும் ஆபரேஷன் செய்யக்கூட நேரிடலாம். ஓவரீஸ் எடுத்ததால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க, நீங்கள் எடுத்துக் கொள்கிற மாத்திரைகளே போதுமானவை.

முகத்தில் ஏற்படும் கருப்பு கோடுகள், கண் களைச் சுற்றி கருவளையம் போன்றவை மெனோபாஸின் விளைவுகளாகும். அதைக் குறைப்பதற்கு ‘ஆலோவேரா’ என்கிற பொருள் அடங்கிய பல இயற்கைப் பொருட்கள் கிடைக்கின் றன. இவற்றைத் தடவுவதால் அந்தப் பிரச்னைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
மேலும், புரதம் சேர்ந்த உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. தினமும் யோகாவும் தியானமும் செய்வதால் சோர்வு, எலும்பு பலவீனம் போன்றவற்றை பெருமளவிற்குக் குறைக்கலாம். தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்த்து சந்தோஷமாக இருங்கள்.’’
(பதிலளித்தவர் : டாக்டர். புஷ்பா ராஜூ, மகப்பேறு நிபுணர், நெல்லை)

கேள்வி 34 : “எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்.”
பதில் : “உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

கருத்தரிக்காமல் இருப்பதற்குஸ ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்.”
(பதிலளித்தவர் : டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை)

கேள்வி 35 : ‘‘எனக்கு 21 வயதாகிறது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. அந்த இடமும் மிகவும் கறுப்பாக உள்ளது. ஐந்தரை வருடங்களாக இந்தப் பிரச்னை இருக்கிறது.

அரிப்பு எடுக்கும் இடம் புண் போல் ஆகி, மருந்து போட்டவுடன் காய்ந்து போகிறது. நான்கைந்து நாட்களில் மறுபடியும் இதே அவஸ்தை! கிரீம், மாத்திரை, மருந்து, ஆயுர்வேதம் என அனைத்தும் உபயோகப்படுத்தினேன். ஒன்றும் சரியாகவில்லை (மருத்துவரிடமும் காண்பித்தேன். ஆனால், தோல் டாக்டர் இல்லை!).
நான் வசிக்கும் இடம் கிராமப்பகுதி. தயவுசெய்து எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி சொல்வீர்களா?’’
பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் சருமம் கறுப்பு நிறமாக மாறப் பொதுவான காரணங்கள் மூன்று:

ஒன்று | உராய்வு. பாவாடையை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால், அந்த இடத்தில் அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு, அதனால் கறுப்பு நிறமாக மாறுவதுடன் அரிப்பும் ஏற்படும்.
இரண்டு | படர்தாமரை போன்ற நுண்ணுயிர் தொற்று. காற்றுப் புகாத மற்றும் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் இடங்களில் இது ஏற்படும்.
மூன்று | வியர்வை. அதிகப்படியான வியர்வையினால் கிருமிகள் உருவாகி, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றி, பின் அந்த இடத்தையே கறுப்பாக மாற்றிவிடும்.
இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும். அது, எது என்று கண்டு பிடித்து, அதை நிவர்த்தி செய்யுங்கள். மேலும், இந்த மூன்றில் உங்கள் பிரச்னைக்கு எது காரணமாக அமைந்தாலும், அதற்கு ‘Lobate-GM’ என்ற கிரீமை, ஒரு நல்ல தோல் மருத்துவரைக் கலந்தாலோசித்தபின், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து காலை வேளையிலும், இரவிலும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதோடு, அரிப்பும் அடங்கி, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கறுப்பு நிறமும் மறைந்துவிடும்!
(பதிலளித்தவர் : டாக்டர்