Home இரகசியகேள்வி-பதில் தங்கையின் கணவர் அக்காவிற்கும் கணவர்…!!

தங்கையின் கணவர் அக்காவிற்கும் கணவர்…!!

58

என் வயது 28. எனக்கு திருமணமாகி, எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு, ஒரு மகன் உள்ளான். என் தங்கைக்கு திருமணமாகி, நான்கு வருடமாகிறது. என் தங்கைக்கும், ஒரு மகன் உள்ளான். என் கணவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தினசரி வசூலுக்கு போயிருந்த சமயத்தில், என் மொபைல் எண்ணுக்கு என் தங்கை கணவர், வேறு யாரோ போல் பேசி, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

பணி நிமித்தமாக, ஒரு மாதம் வெளியூர் சென்றிருந்தார் என் கணவர். அந்த சமயத்தில், என் தங்கை கணவர், என் வீட்டுக்கு வந்து, என்னுடன் உறவு கொண்டார். நானும் சபலபுத்தியில் அதற்கு உடன்பட்டேன். பின், அடிக்கடி வரத் தொடங்கினார். பல சமயம் நானே என் கணவர் இல்லாத சமயத்தில், போன் செய்து வரச்சொல்லி உறவு கொள்வோம்.

என் கணவர் மீதும், தாம்பத்ய விஷயத்தில், ஒரு குறையும் சொல்ல முடியாது. என் மீது, முழு நம்பிக்கை வைத்துள்ள கணவர், இந்த விஷயம் தெரிந்தால், உயிரையே விட்டு விடுவார். இது தவறு என்று தெரிந்தும், எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை.
என் தங்கை கணவரை விட்டு விலகவும், என் தங்கை கணவருக்கு புரியும்படியும், அறிவுரை சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

“அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி; தம்பி பொண்டாட்டி முழு பொண்டாட்டி’ என கிராமப்புறங்களில் சொலவடை கூறுவர். “அக்கா புருஷன் அரை புருஷன்; தங்கை புருஷன் முழு புருஷன்’ என்கிற புது சொலவடையை நீ உருவாக்கி விட்டாய்.

உனக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. உனக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். தாம்பத்யத்தில் குறை சொல்ல முடியாத கணவன். உன் தங்கைக்கு திருமணமாகி, நான்கு வருடங்கள் ஆகின்றன. தங்கைக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபட துடிக்கும் கணவனை பெற்றிருக்கிறாள் உன் தங்கை.

கைபேசி யுகம் இது. கைபேசியால் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும், தலையாய தீமைகளும் உள்ளன. தவறான உறவுகளுக்கு கை கொடுக்கிறது கைபேசி. கைபேசி மூலம் ஒருவன் ஒரு பத்தினிப் பெண்ணை ஆயிரம் தடவை தொடர்பு கொண்டு பேசினால், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தையும் சிறிது தடம் புரள செய்து விடலாம். கைபேசி, கல்லையும் கரைக்கும் வீரியம் கொண்டது. உன்னுடைய கைபேசி எண்ணை, உன் தங்கையின் கைபேசியில் பார்த்து தெரிந்து கொண்டே, உன் தங்கை கணவன் ராங்கால் போல் பேசி, முதலில் உன் மனதில் ஆழம் பார்த்திருக்கிறான். ராங்கால் என நினைத்து, நீ ஏதோ வாய் வார்த்தைகளை விட்டிருக்கிறாய். உன் வாய் வார்த்தைளால், உன் பலவீனமான பக்கத்தை புரிந்திருக் கிறான் தங்கை கணவன். ஒரு கட்டத்தில், உன் மீதிருந்த பயம் தெளிந்து போய், உன் வீட்டிற்கே வந்திருக்கிறான். நீ அவனை திட்டவில்லை, அடித்து விரட்டவில்லை, அரவணைத்துக் கொண்டாய். அதையடுத்து, உன் கணவன் வீட்டில் இல்லாதபோது, உன் தங்கை கணவனை நீயே வரவழைத்து உறவு கொள்கிறாய்.

நீ மிக அதிகமாக தமிழ் சீரியல்கள் பார்க்கும் பெண் என நம்புகிறேன். அவைகளில் தான் உறவு கலப்படங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. அந்த நியாயத்தைதான், நீ உன் வாழ்க்கையிலும் எடுத்துக் கொண்டிருக்கிறாய்.
திருமணத்திற்கு முன்னும் பின்னும் சரி, நீ ஆண்களை கவரும் விதமாய், உன் பேச்சு வார்த்தைகளை, அங்க அசைவுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய். ஆண்கள் உன்னை கண்டால் சொக்கி போவது உனக்கு ரகசிய சந்தோஷம்.

குடிநோயாளி, போதை பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து தோற்பதை போல, நீயும் இப்பழக்கத்தி லிருந்து வெளிவர முயற்சித்து தோற்றுப் போகிறாய். உணர்ச்சிகள் பெரிய மீனாகின்றன. உறவுகள் நலம், கற்பு நெறி பேணுதல் சின்ன மீனாகின்றன. பெரிய மீன், சின்னமீனை விழுங்குகின்றன. உன் தங்கை பிற ஆடவர் நோக்கினால், உன் தங்கை கணவர் தாங்குவாரா அல்லது உன் கணவர் பிற பெண்டிருடன் தொடர்பு கொண்டால், நீ தாங்குவாயா?
விவரம் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை, உன் தங்கை உன்னுடன் பழகும் விதத்தை, ப்ரேம் பை ப்ரேம் மனக்கணக்கில் கொண்டு வந்து பார். உன் தங்கை மகன் உன்னை பெரியம்மா என்று ஆசையாய் விளிப்பானே… அதை கேட்கும் சுகம் உனக்கு மறந்து விட்டதா?

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே…
உன் கைபேசி எண்ணை மாற்று அல்லது கைபேசி வைத்துக் கொள்ளாதே. தரைபேசி வைத்துக் கொள். இதுவரை நீ செய்த தவறுகளுக்கு, உன் கணவனின் புகைப்படத்தின் முன் நின்று, உன் தலையில் நீயே குட்டிக் கொண்டும், உன் கன்னத்தில் நீயே அறைந்து கொண்டும் தண்டனை வழங்கு.
உன் தங்கை கணவன், உன் கணவன் இல்லாத சமயங்களில் வீட்டுக்கு வந்தால், தயவுதாட்சண்யம் பார்க்காமல் அடித்து விரட்டு. அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்து. கணவருடன் தாம்பத்ய எண்ணிக்கை களை கூட்டு. தமிழ் சீரியல்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நல்ல புத்தகங்களை படி, பள்ளி படிக்கும் மாணவனுக்கு, மாலை நேரங்களில் பாடம் சொல்லிக் கொடு. உன் தங்கை மற்றும் அவளது மகனிடம் மானசீகமாக மன்னிப்பு கேள்.
மிருகங்களுக்குத் தான் வாழ்க்கையில் ஒரு கொள்கையோ, ஒரு இலக்கோ இராது. நாம் மனிதர்கள். உன்னுடைய வாழ்க்கையில் கற்புநிலை தவறாத கொள்கையும், குடும்பநல இலக்கும் கொண்டு நட. இப்போது உன்னை திருத்திக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பல தவறுகள் புரிய ஆரம்பித்து விடுவாய்.

நீ அடுக்களையை பூட்டி வைத்தால், திருட்டுப்பூனை சமையல் பாத்திரங்களை உருட்டிச் செல்லாது. உனக்குதான் அறிவுரை தேவை; தங்கை கணவனுக்கல்ல. அவன் திருந்தாவிட்டால் எங்காவது அடிபட்டோ, உதைபட்டோ, குத்துபட்டோ பிணமாய் கிடப்பான். அவனுக்கு என் அனுதாபங்கள்!