Home உறவு-காதல் காதலி உண்மையானவளா? காதலன் நல்லவனா?

காதலி உண்மையானவளா? காதலன் நல்லவனா?

27

உருகி உருகி காதலை வெளிப்படுத்தி விட்டு உறவுக்குப் பிறகு வேறு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். பீச், பார்க், தியேட்டர் என்று சுற்றி உல்லாசமாக இருந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளை கட்டிக் கொண்டு காதலுக்கு `டாட்டா’ காட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

காதலில் இப்படி இடையூறுகளை சந்திக்காமல் இருக்க என்ன வழி? உண்மையான காதலை கண்டு பிடிப்பது எப்படி? அதற்கு சில எளிய வழிகள்…

`நீ இல்லாம என்னால வாழவே முடியாது. நீ தான் என் உயிர்’ என்று டயலாக் விடுபவர்களிடம் உஷாராக இருங்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது ஈர்ப்பின் அறிகுறி தான். புரிதலுடன் பழகியபின் வருவதே காதல்.

காதலிப்பவர் கொடுக்கும் தகவல்கள் உண்மையானதா என்பதை வைத்து அவரது காதலையும் உண்மையா? இல்லையா? என்று அறியலாம். வேலை பார்க்கும் இடம், வீட்டு முகவரியை சொல்லாதவர்களும், தவறான தகவல் தருபவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருப்பார்கள்.

உங்கள் காதலர் நண்பர்கள், தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரா? என்று பாருங்கள். அதுபோல நீங்களும் அவரை உங்கள் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். பிறருக்குத் தெரிந்து காதல் செய்வது ஒருவிதத்தில் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். அதிக அளவிலான ஏமாற்றத்தையும் தடுக்கும்.

அதேபோல அவரோடு நீங்கள் பழகுவது உங்கள் வீட்டிற்கு பட்டும் படாமலும் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. பெற்றோரும் அவரைப் பற்றிய விஷயங்களில் `உஷார்’ காட்டுவார்கள்.

காதலர் உரிமையுடன் உங்களிடம் கோபப்படுகிறாரா? திட்டுகிறாரா? சில நேரங்களில் கைநீட்டி அடிக்கவும் செய்கிறாரா? அவை உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் காரியமாக மட்டும் எண்ணிவிடாதீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கைக் குறைவும், தன்னம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடும் கூட இம்மாதிரி கோபமாக வெளிப்படும். இதுபோன்ற குணம் உடையவர்களுடன் நீண்டகாலம் சேர்ந்து வாழ முடியாது. எனவே கோபத்தின் காரணத்தையும், அவரது நடவடிக்கைகளையும் கவனமாக கவனியுங்கள்.

`நாம தான் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்கிட்டோமே, தொட்டுப் பேசக்கூடாதா?’ என்று பீடிகை போடுவதும், உறவை வற்புறுத்துவதும் உண்மையான காதலாக இருக்க முடியாது. எல்லை மீறாத காதல் நூலிழை இடைவெளியில் தான் இருக்கிறது.

மேற்கண்ட விஷயங்களை வைத்து உண்மையான காதலை கண்டு பிடிக்கலாம். அவரது அன்பு உண்மையானாலும் அவர் உங்களுக்கு சரியான துணைவரா? என்பதை முடிவு செய்ய இன்னும் யோசிக்க வேண்டும். அதற்கான சில விஷயங்கள்…

தன்னையே சுற்றிச் சுற்றி வந்தார் என்பதற்காக காதலை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

`நீ குழந்தை மாதிரி நடந்துக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று சொல்கிற காதலர், திருமணத்துக்குப் பிறகு, `நமக்கு திருமணம் ஆகி விட்டது, கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ, குழந்தை மாதிரி நடந்துக்காதேன்னு’ திட்டினால் வெறுப்பு விளையும். எனவே பொடி வைத்துப் பேசினாலும் மயக்கத்தில் வீழாதீர்கள்.

நான் உனக்காக எதுஎதையெல்லாம் விட்டுக்கொடுத்தேன், நீ எனக்கு இதைக்கூட செய்யமாட்டியா, இந்த தப்பை பொறுத்துக்க மாட்டியா? என்று உணர்ச்சி பொங்க பேசுபவரும், கெஞ்சுபவரும் சரியான நபரல்ல. அதேபோல `நீ தானே என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னே, நான் இப்படித்தான் இருப்பேன் அட்ஜஸ்ட் பண்ண முடிஞ்சா ஓகே’ என்று கண்டிஷன் போடும் பெண்ணும் சரியல்ல. அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக நிகழ வேண்டும்.

வேலையில் இருக்கும் பெண், தனக்கு நிகரான பணியில் இருப்பவரையோ, இணையாக சம்பாதிப்பவரையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருவரும் ஒருபோதும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பவராகவோ, தொழிலை ஒப்பிட்டுப் பேசி வாக்குவாதம் செய்பவராகவோ இருந்தால் காதல் அம்பேல்.

அதுபோலத்தான் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் ஒருவர் மற்றவர் மதத்தையோ, நம்பிக்கையையோ விளையாட்டாகக்கூட கேலி செய்யக்கூடாது. உங்கள் காதலர் அப்படிப்பட்டவர் என்றால் ஓ.கே.

ஒருவேளை நல்லவர் என்று நம்பி பழகியபின்பு உங்கள் காதலர் மோசமானவர் என்று தெரிந்தால், தயங்காமல் அவரை விட்டு விலக வேண்டும். அதுதான் தெளிவான முடிவு! `இல்லை, நான் அவரை நம்புகிறேன், அவரை மாற்றிக் காட்டுவேன், என்னால் அவரை மறக்க முடியாது’ என்று பிடிவாதம் காட்டுவது உங்களை இழப்புகளில் இட்டுச் செல்லும்.

பள்ளி, கல்லூரியில் தொடங்கும் காதல் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை. இதற்குள்ளாக உறவில் கலந்து விடுபவர்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கிறார்கள்.

எனவே பக்குவப்பட்ட வயதுக்குப் பிறகு தனது ஆசையை விருப்பப்பட்டவரிடம் தெரிவிப்பவரையும், உறவுக்குள் நுழையாமல் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பவரையும் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யுங்கள். காதல் மாதிரியே வாழ்க்கையும் இனிக்கும்.

***

காதல் இன்று பொழுதுபோக்கே!

`காதலில் ஆண்கள்தான் ஏமாற்றுகிறார்கள்’ என்று பெண்கள் குமுறிய காலம் மாறிவிட்டது. `ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள்’ என்பதை இன்றைய இளைஞிகளே ஒப்புக் கொள்கிறார்கள். காதல் இன்று எப்படி இருக்கிறது, பெண்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கல்லூரி மாணவிகள் சிலரது கருத்து…

* இன்றைய காதல் 90 சதவீதம் பொழுதுபோக்காகவே இருக்கிறது.

* பெண்களை எளிதில் மயக்கிவிடுவது ஆண்களின் வர்ணனை தான். “நீ ரொம்ப அழகா இருக்கே” என்று சொல்லிவிட்டால் பெண்ணிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்படிச் சொல்லியவரை பெண் காதலராக தேர்வு செய்யாவிட்டாலும், பல நேரங்களில் அவர் சொல்லியதை தன் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள் பெண்கள்.

* பல ஆண்களைப் போன்று பெண்களும் பழகி விட்டு பிரிந்து விடுவதை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், பெண்கள் பெற்றோர் கண்காணிப்பைத் தாண்டி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குடியேறி படிப்பதும், வேலை செய்வதும் தான். அவர்கள், தங்களை விரும்பி வரும் ஆண்களை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

* காதலர் தினமென்றால் காதலருடன் ஜாலியாக பொழுதுபோக்கும் நாள் என்று எண்ணும் பெண்களும் ஏராளம். `பப்’ பார்ட்டிக்குச் சென்று நடனம் ஆடுவதை காதலர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மேல்தட்டு மக்களின் பழக்கமான `பப்’ பார்ட்டி இன்றைய காதலர்களுக்கும் இனிக்கிறது.

* ஆண்கள் இப்போது காதலைச் சொல்வதற்கு ரோஜா கொடுப்பதில்லை. எஸ்.எம்.எஸ்.களில் தான் இன்றைய காதல் வளர்கிறது. அத்துடன் தோழிகளிடம் விசாரித்து காதலிக்கு என்ன கலர் பிடிக்கும், என்ன உணவு பிடிக்கும், என்ன கிப்ட் பிடிக்கும் என்பதை தெரிந்து `திடீர் சர்ப்ரைஸ்’ கொடுத்து கவர்ந்து விடுவதை நிறைய ஆண்கள் தங்கள் பாணியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

* பெண்கள் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் காதலிப்பதில்லை என்றும் கல்லூரி மாணவிகள் சொல்கிறார்கள். இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. தன்னைச் சுற்றும் ஆண்களில் நாலைந்து பேரை அவர்களும் கணக்கு பண்ணுகிறார்கள். அதில் பெஸ்ட்டாகத் தோன்றும் ஒருவரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். அவரிடம் வசதிக்குறைவு தெரிந்தால் இரண்டாம் நபரை தேர்வு செய்யும் வகையிலேயே பழக்கத்தில் வைத்திருப்பார்கள். இருந்தாலும் திருமணத்துடன் இந்த ஆண் நண்பர்களை கைகழுவி விடுகிறார்கள் பெண்கள்.

காதலும், பெண்களின் சிந்தனையும் இன்று ரொம்பத்தான் மாறியிருக்கிறது இல்லையா?!