Home சூடான செய்திகள் நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

15

தம்பதியருக்கிடையே புரிதல் இல்லாத காரணத்தினாலே சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன. என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா என்று கணவனும், நான் என்ன செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது என்று மனைவியும் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வுப் பூர்வமாக கணவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்த உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலோசனைகள்

புரிதல் வேண்டும்

நம்மை நாம் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கையில், திருமணம் செய்து கொண்டுள்ள கணவரைப் பற்றியும், அவருக்கு பிடித்தமானவைகளையும், புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சற்று சிரமமான காரியம்தான். ஆண்கள் என்பவர்கள் வெளியில் சூரப்புலிகளாக செயல்பட்டாலும் வீட்டைப் பொருத்தவரை அம்மாபிள்ளைகளாகவோ, மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டோதான் இருக்க நினைப்பார்கள். எனவே முதலில் கணவரின் மனதை படியுங்கள். அவருக்கு பிடித்தமான விசயங்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பிரச்சினை எப்படி வரும்?

மனதை வருடும் பேச்சு

உளப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆண்களின் மனதை பெண்களின் அருகாமைக்காக ஏங்கும். எனவே தினசரி சில மணிநேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். கணவரின் அருகில் அமர்ந்து பத்திரிக்கையில் படித்த துணுக்கு, புதிதான ரிலீஸ் ஆன திரைப்படம் பற்றிய விமர்ச்சனம், பக்கத்து வீட்டு சமாச்சாரம் எதைப்பற்றி வேண்டுமானலும் இருக்கட்டும். பேசினால் தகவல் பரிமாற்றத்தோடு அன்றைய நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிகிறது என்ற நினைவு ஆண்களுக்கு ஏற்படும். பேச்சோடு பேச்சாக உறவுகளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசலாம். கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த சூழ்நிலையில் தெரிந்து கொள்வது எளிது.

திருப்தி அடையச் செய்யுங்கள்

திருமணத்திற்குப் பின்னர் ஆண், பெண் இருவருக்கு இடையேயும் உடல் ரீதியான தேவைகளையும், உள ரீதியான ஆறுதல்களையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆண்களுக்கு உணர்வு பூர்வமான தேவைகள் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் அதனை புரிந்து நடந்து கொள்வது ஆண்களை மகிழ்ச்சியுறச்செய்யும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

மனதில் நினைத்தால் தெரியாது

தம்பதியர் தங்களின் தேவைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏனெனில் மனதில் நினைத்தால் அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது எனவே தன்னுடைய தேவைகளை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கணவரிடம் கேட்டுப் பெறுவதில் மனைவியும் கெட்டிக்காரத்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்

தம்பதியருக்கிடையே சட்டதிட்டங்கள் வகுத்து அதற்கேற்ப வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். கணவரின் செயல்களை எப்போதும் விமர்ச்சிப்பதும் உறவுகளை பாதிக்கும்.

மிகச்சிறந்த நபர்

கணவரின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மிகச்சிறந்த நபர் என்பதை உணர்த்துவதும், புரியவைப்பதும் மனைவியின் கடமை. அவரின் உணர்வுப் பூர்வமான தேடல்களுக்கு வடிகாலாக இருக்கவேண்டியதும் மனைவிதான். எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு கணவரை அணுகவேண்டும். அதைவிடுத்து எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே கணவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரிவு ஏற்பட வழியில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.