Home பெண்கள் தாய்மை நலம் பெண்களே பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா?

பெண்களே பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா?

85

பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது? பிரசவ வலி எது என்று புரியாமல் பயப்படுவார்கள்.

மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

முதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் மருத்துவரிடம் செல்வது சிறந்தது.

இடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம். இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும்.

சில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்த தீர்வு.

பனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பற்றீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.

கர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை உதிரப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.

வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும் கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உடனே மருத்துவரை நாட வேண்டும்.

தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா? ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்..