Home இரகசியகேள்வி-பதில் மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !! (பூப்படைதல் பற்றிய ஆய்வு)

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !! (பூப்படைதல் பற்றிய ஆய்வு)

94

எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை…..?! பொருட்படுத்துவதும் இல்லை…..!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்து கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது…இங்கே இல்லை லண்டனில்…?!!

அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து. பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனை பற்றியதே இந்த பதிவு…..

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும் குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது…இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்….!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

 


உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

 

* குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

* பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச் செய்து விடுகிறது.

* ஆணின் அரவணைப்பு இல்லாமல்…

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன் தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால், அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்….!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரி செய்யும். இப்போது பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவே தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாக தேவை.

* தொலைகாட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள் என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதை பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள் வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்…பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்

பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்….குழந்தைகள் முன்னால் சண்டை போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கபடுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள் ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

நன்றி- இளமை