Home இரகசியகேள்வி-பதில் தாம்பத்யத்தில் ஆர்வமின்மைக்கு என்ன என்ன காரணங்கள் ?

தாம்பத்யத்தில் ஆர்வமின்மைக்கு என்ன என்ன காரணங்கள் ?

40

உணவு, உறக்கம் என எதையும் மறக்கச் செய்து எதிர்பார்த்து ஏங்க வைக்கிற உணர்வுதான் செக்ஸ். ஆனால் அது எத்தனை பேருக்கு இன்ப அனுபவமாக அமைகிறது? தினசரி இரவு எத்தனையோ பெண்களுக்கு திகில் இரவுகளாகவே கழிகிறது. செக்ஸை வெறுத்து ஒதுங்கச் செய்கிறது. செக்ஸின் மீதான எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக அமைய என்னவெல்லாம் காரணங்கள்….?
*தொற்றுக் கிருமிகளின் தாக்குதல்:-*
செக்ஸ் உறவு இன்பமாக அமையாமல் போக முதல் காரணம் தொற்றுக் கிருமிகளின் தாக்குதல். இந்தத் தொற்றில் பல வகைகள் உண்டு. அரிப்பும், வெள்ளைப் படுதலும் இருந்தால், உறவின் போது வலி மற்றும் செக்ஸுக்குப் பிறகு உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வித மீன்வாடை இருந்தால் அது பாக்டீரியா தொற்றின் விளைவாக இருக்கலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இடுப்பெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் செக்ஸ் இன்பம் பாதிக்கப்படும். தொற்று சினைக் குழாய்கள் வரை இருக்கும் என்பதால் செக்ஸ் வலி மிகுந்ததாக அமையும்.

*என்டோமெட்ரியாஸிஸ்:-*
கர்ப்பப்பை லைனிங்கின் துண்டுப் பகுதிகள் கர்ப்பப்பைக்கு வெளியே, சினைப்பை மற்றும் சினைப்பை குழாய்கள் அல்லது இடுப்பெலும்பு என எங்கேயாவது வளரலாம். இதன் விளைவாக மாதவிடாயின் போது வெளியேற வேண்டிய இரத்தம் வெளியேறாமல், சின்னச் சின்ன வளரும் நிலையிலான கட்டிகளாக மாறலாம். இது செக்ஸின் போது உயிர் போகும்படியான வலியை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைக்கான தீர்வு அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை.

*பிறப்புறுப்பு வறட்சி:-*
பிறப்புறுப்பில் இயல்பிலேயே சுரக்கக் கூடிய கசிவு இல்லாத போது செக்ஸ் வலி மிக்கதாகவும், பல சமயங் களில் செக்ஸ் உறவே சாத்தியப் படாமலும் போகச் செய்து விடும். மெனோபாஸ் காலத்துக்குப் பிறகுதான் இப்பிரச்சினை அதிகரிக்கிறது. கே.ஒய். ஜெல்லி எனப்படும் வழுவழுப்புத் திரவம் இப்பிரச்சினையை சரியாக்கும். ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபியும் கை கொடுக்கும். செக்ஸ் உறவின் போது உணர்ச்சிகள் தூண்டப் படாமலிருந்தால், இந்த பிறப்புறுப்பு வறட்சிப் பிரச்சினை எந்த வயதினருக்கும் வரலாம்.

*தசைப்பிடிப்பு:-*
உறவுக்கு ஒத்துழைக்காமல் பிறப்புறுப்பு மக்கர் செய்கிற இந்தப் பிரச்சினைக்கு வாஜினிஸ்மஸ் எனப் பெயர். உறவைப் பற்றிய பயமே இதற்கான பிரதான காரணம். கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் மாதிரியான சம்பவங்களால் இப்பிரச்சினை உருவாகிறது. கவுன்சிலிங்குடன் கூடிய சிகிச்சை இதற்குப் பலனளிக்கும். உறவு கொள்ள முடியும் என்றாலும், பிறப்புறுப்பு செக்ஸை அனுமதிக்காமல் இறுகிக் கொள்ளும். வீட்டிலேயே பின்பற்றக் கூடிய பிரத்யேக சிகிச்சைகளும் இந்தப் பிரச்சினைக்குப் பரிந்துரைக்கப் படுகிறது.

*பிரசவத்துக்குப் பிறகான உறவு:-*
பிரசவத்துக்குப் பிறகான உடலுறவு பெரும்பாலும் வலிமிக்கதாகவே அமைகிறது. காரணம் பிரசவத்தின் போது பிறப்புறுப்பில் போடப்படுகிற தையல். சிக்கலான பிரசவங்களின் போது ஆயுதங்கள் உபயோகிக்கப் பட்டிருக்கக் கூடும். இதனால் ஏற்பட்ட காயம் ஆற குறைந்த பட்சம் ஆறு வாரங்களாவது ஆகலாம். கூடவே பிறப்புறுப்புத் தொற்றும் இருக்குமானால், இந்தக் காயங்கள் ஆற இன்னும் தாமதமாகும். செக்ஸ் மேலும் துன்பமாக அமையும். பிரசவத்தைத் தொடர்ந்து உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு தம்பதியர் இருவருக்குமே உண்டு. சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு அதைத் தொடர்ந்த உறவு கூடுதல் வலியைத் தரும். பிரசவத்துக்குப் பிறகு இயல்பான உறவு சாத்தியப்பட காலம் ஒன்றே மருந்து. உடல், மனம் இரண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகே அது சாத்தியம்.