Home சூடான செய்திகள் இன்றைய நவீன பெண்களின் திருமண வாழ்வு எப்படி தெரியுமா?

இன்றைய நவீன பெண்களின் திருமண வாழ்வு எப்படி தெரியுமா?

38

பெண்களின் வாழ்வு:“எனது பெற்றோர் வசதி படைத்தவர்கள். நான் அவர்களுக்கு ஒரே மகள். கணக்கு பார்க்காமல் காசை வாரியடித்து எனக்கு ஊரே வியக்கும் அளவுக்கு திருமணம் செய்துவைக்க என் அப்பா திட்டம் போட்டுவைத்திருக்கிறார். நான் அவரிடம், ‘அப்பா.. ஐந்தாயிரம் பேரை திரட்டப்போகிறீர்கள். எல்லோரும் கஷ்டப்பட்டு ஒரு கல்யாண மண்டபத்தில் குவியப் போகிறார்கள்.

எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் முன்னால் ஏன் சடங்கு சம்பிரதாயங்களை நடத்தவேண்டும். தேவையில்லாமல் நமது உறவினர்களையும், உங்கள் நண்பர்களையும் அலையவைக்காதீர்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணைய வேண்டிய சிம்பிளான விஷயம். எனது மனதுக்கு பிடித்தவரோடு நான் இணைந்துவிட்டேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கல்யாணம் என்பது இரண்டு பேர் வாழ்க்கையில் ஏற்படும் ரகசியமான திருப்பம். அதற்கு கூட்டம்.. கொண்டாட்டம்.. லட்சங்களில் பணச்செலவு போன்றவைகள் எல்லாம் தேவையில்லை’ என்று என் தந்தையிடம் சொல்லப்போகிறேன். அது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் உண்மையை நான் அவரிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்” என்று, திருமணம் பற்றி நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அதிரடியாய் கருத்து தெரிவித்திருக்கிறார், இளம் பெண் ஒருவர். அவர் வயது 25. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள பெண்களிடம், ‘மாறி வரும் திருமண விருப்பங்கள்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெண்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள், அடிப்படையையே புரட்டிப்போடும் அளவுக்கு அதிரடியாய் அமைந்திருக்கிறது.

‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, அது ‘தவறு’ என்று சொன்னவர்கள் 48 சதவீதம் என்றால், கிட்டத்தட்ட அதே சதவீதத்தினர் அது ‘தவறில்லை’ என்று சொல்லும் அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களும், ‘எதிர்காலத்தில் ஒருவேளை அதுதான் சரி என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சர்வே, ‘பெண்களின் மனநிலை மாற்றத்தை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகள் எங்கோ போய்விட்டன. சமூகம் இன்னும் பழைய நினைப்பில் இங்கேயே நின்று கொண்டிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுகிறது.

எப்படி என்றால், ‘அம்மாவைப்போல் நானும் அதிகாலையிலே விழித்து கோலம்போடுவேன். அவரிடமிருந்து மீன்குழம்பும், சாம்பாரும் தயாரிக்க கற்றுக்கொண்டு, நீண்ட கூந்தலையும் பராமரிப்பேன். வெளியாட்கள் யாராவது வந்தால் வீட்டுக்குள் போய் முடங்கிக்கொள்வேன்.. என்ற கோணத்தில்தான் என் குடும்பம் என்னை கணித்துவைத்திருக்கிறது. 1980-ம் ஆண்டுகளில் உள்ள பெண்களாக எங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சில நேரங்களில் அவர்களது எதிர்பார்ப்புக்கு தக்கபடி கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கிறோம். எங்களது உண்மையான சிந்தனையையும், செயல்பாட்டையும் அவர்கள் இனியாவது சரியாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும்’ என்று சர்வேயில் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

‘உங்கள் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, பெண்கள் அளித்திருக்கும் பதில் யோசிக்கவைக்கிறது.

‘மத ஆச்சாரங்களின்படி ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கவேண்டு்ம். தகுதிக்கு மீறி அழைப்பிதழ்கள் அச்சடித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் வினியோகித்து, 500 பேர் கூட உட்காரமுடியாத இடத்தில் 5 ஆயிரம் பேரை அழைத்து கணக்கற்ற உணவுப் பொருட்களை வைத்து, யாரும் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இப்போது நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இதைத்தான் பல்வேறு திருமணங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு சிரமத்தை எங்கள் திருமணத்தில் யாரும் அனுபவித்து விடக்கூடாது. அமைதியாக, மகிழ்ச்சியாக எங்கள் திருமணம் நடக்கவேண்டும்’ என்று 65 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

காதல் திருமண ஆர்வமும் பெண்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதலித்துக்கொண்டிருக்கும் பெண்களிடம், ‘உங்கள் காதலரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள உங்கள் பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு 52 சதவீதம் பேர், ‘என்ன ஆனாலும் காதலித்தவரை கைவிடமாட்டோம்’ என்று கூறி யிருக்கிறார்கள். 30 சதவீதம் பேர், ‘காதலரைவிட பெற்றோர் முக்கியம். அவர்களது எண்ணங் களுக்கு மரியாதை கொடுப்போம்’ என்று நெகிழவைத்திருக்கிறார்கள். 18 சதவீதம் பேர், ‘காதலுக்கு எதிர்ப்பு வந்தால் திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுவோம்’ என்று அதிரடிகாட்டியிருக்கிறார்கள்.

‘நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணின் வயது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, ‘ஆணுக்கு, எங்களைவிட ஐந்து வயது வரை கூடுதலாக இருக்கலாம்’ என்று 75 சதவீத பெண்களும், ‘ஐந்து வயதுக்கு மேல் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை’ என்று 7 சதவீத பெண்களும், ‘சமவயது இருந்தால் போதும்’ என்று 9 சதவீத பெண்களும், அதே சதவீதத்தினர் ‘ஆணுக்கு எங்களைவிட வயது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஜோதிட பொருத்தங்கள் பார்க்கும் விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 52 சதவீதம் பேர் கூறியிருக் கிறார்கள். ஓரளவு நம்புவதாக 37 சதவீதம் பேரும், முழுமையாக நம்புவதாக 11 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.

இந்த சர்வே முடிவுகளை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருப்பது உண்மைதான். அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும். ஆர்ப்பாட்டமான திருமணங்களும், அடுத்த சில மாதங்களிலே நடக்கும் விவாகரத்துக்களும் பெண்களின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் வெளிப்பாட்டை சர்வேக்களில் காண முடிகிறது” என்கிறார்கள்.

கலாசாரம் முக்கியம்! அது காப்பாற்றப்படவேண்டியது அவசியம்!