Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தின் அறிகுறிகள் என்னென்ன (Pregnancy Symptoms)

கர்ப்பத்தின் அறிகுறிகள் என்னென்ன (Pregnancy Symptoms)

93

கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களாவன:

மாதவிடாய் வராமல் போவது (A missed period)

பெரும்பாலும், மாதவிடாய் வராமல் போவதே கர்ப்பத்தின் முதல் அடையாளமாகக் கவனிக்கப்படும். சில சமயம், கருப்பைச் சுவரில் கருவுற்ற முட்டையை உள்பதியவைத்தல் காரணமாக கருப்பை வாய்ப் பகுதியில் இரத்தம் கசியலாம் அல்லது இரத்தக் கறை ஏற்படலாம். பெரும்பாலும் கறை ஏற்படும்போது தசைப்பிடிப்பு வலியும் ஏற்படலாம். ஆனால் மாதவிடாயின்போது ஏற்படும் வலியை விட இவை கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

மாதவிடாய் வராமல் போனால், அது கர்ப்பத்தின் அடையாளமாகவே இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துவிட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்; பிற மறைந்திருக்கும் காரணங்களால் கூட மாதவிடாய் வராமல் போகலாம்.

மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் (Changes in the breast)

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உங்கள் மார்பகங்களில் வலி தோன்றக்கூடும், மேலும் அவை உணர்ச்சி மிகுந்ததாக அல்லது மென்மையாக மாறலாம். அதுமட்டுமின்றி, மார்பகம் கனமாக இருப்பது போலவும் தோன்றலாம்.

மசக்கை (Morning sickness)

ஆங்கிலத்தில் இதனை மார்னிங் சிக்னஸ் என்று கூறினாலும், வாந்தி அல்லது குமட்டல் போன்ற கர்ப்பம் தொடர்பான இந்த அறிகுறிகள் காலையில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் ஏற்படலாம். பொதுவாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் மசக்கை அறிகுறிகள் ஏற்படும். குமட்டலை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில மணங்கள் மீது வெறுப்பு உண்டாகலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)

பருமனான கருப்பை சிறுநீர்ப்பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கலாம்.

களைப்பு (Fatigue)

கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதால், பொதுவாக பெண்கள் களைப்பாக இருப்பார்கள்.

மலச்சிக்கல் (Constipation)

செரிமான மண்டலம் மந்தமடைவதால் உடலில் ஹார்மோன் அளவுகளில் உண்டாகும் மாற்றம் காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம்.

மனநிலையில் திடீர் மாற்றங்கள், தலைவலி, தலைச்சுற்றல், முதுகு வலி போன்ற பிற அறிகுறிகளும் இருக்கலாம். கர்ப்ப காலத்தில், ஒருவருக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் ஏற்படலாம், அல்லது இவற்றில் ஒரு சில அறிகுறிகள் மட்டும் ஏற்படலாம். இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்களை மிகவும் தொந்தரவு செய்தால் மகப்பேறு மருத்துவரிடம் செல்லவும்.

உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்துதல் (Confirming your pregnancy)

இந்த அறிகுறிகள் ஏதும் இல்லாமலே கூட ஒருவர் கர்ப்பமாக இருக்கலாம். இங்கு குறிப்பிடப்பட்ட சில அறிகுறிகளும் அடையாளங்களும் வேறு பிற காரணங்களால் கூட இருக்கலாம், எனவே கர்ப்பத்தை உறுதிப்படுத்த சிறந்த வழி கர்ப்பப் பரிசோதனையாகும்.