Home உறவு-காதல் பெண்கள் திருமணத்தை தவிர்க்க காரணம் என்ன?

பெண்கள் திருமணத்தை தவிர்க்க காரணம் என்ன?

17

ஆண்கள், வேலை கிடைத்தால்தான் திருமணம் என்று சொல்வார்கள். அதனால் ஊர்சுற்றிக்கொண்டிருந்த பல ஆண்கள், திருமண ஆசையில் வேலைத் தேடிச் செல்வதுண்டு. திருமணத்திற்காக வேலை தேடும் ஆண்கள் ஒருபுறம் இருக்க, வேலைக்கு போகும் பெண்களோ, ‘வேலையில் ரொம்ப பிசியாக இருக்கிறேன்.

இப்போதைக்கு கல்யாணம் செய்துகொண்டால் கணவருக்கு தேவையான நேரத்தை ஒதுக்க முடியாது’ என்று கூறி திருமணத்தை தள்ளிவைக்கிறார்கள். சிலரோ தவிர்த்து விடுகிறார்கள். பெண்கள் திருமணத்தை தள்ளிவைக்க வேறு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?

குடும்பச்சூழல்:

பெற்றோர்கள், பெண்களை நிறைய கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். அதனால் படித்து முடித்ததும் பெண்கள் வேலை தேட வேண்டியதாகிவிடுகிறது. வேலை தேடும் முன்பே அவர்கள் திருமணம் செய்துகொண்டால், கடன் சுமை பெற்றோர்களின் தலையில் விழுந்துவிடுகிறது.

அதை தவிர்க்கவும், கல்யாண செலவு என்ற சுமை அழுத்தாமல் இருக்கவும் பெண்கள் திருமணத்தை தள்ளிவைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் வேலை தேடலாம். ஆனால் திருமணத்திற்கு முன்பே வேலை தேடி சம்பாதித்தால் மட்டுமே குடும்ப சுமையை குறைக்க முடியும். திருமண செலவுகளையும் சமாளிக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

சொந்தச் சூழல்:

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன. யாரையாவது காதலிக்கலாம். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க காத்திருக்கலாம். சில காதல்கள் பிரச்சினையை கிளப்பும். அந்த பிரச்சினையை எதிர்கொள் ளும் ஆற்றல் கிடைக்கும் வரை காத்திருக்க நேரிடலாம். சில காதலர்களை பொறுத்தவரையில் பெண்ணுக்கு வேலை கிடைத்திருக்கும்.

ஆணுக்கு கிடைத்திருக்காது. அவருக்கும் வேலை கிடைக்கட்டும் என்று காத்திருக்கிறார்கள். தங்களுக்கு நெருக்கமான பெண்களுக்கு திருமணம் நடந்திருக்கும். ஆனால் அவர்கள் கணவரால் பல்வேறு விதமான சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பார்கள். ஒருவேளை இறந்துகூட போயிருக்கலாம். அதனால் ‘தனது வாழ்க்கையும் அவ்வாறு ஆகிவிடுமோ’ என்ற கவலை கலந்த பயத்தால் திருமணத்தை தள்ளிப்போடும் பெண்களும் உண்டு.

பெண்கள் திருமணத்தை தவிர்க்க காரணம் என்ன?

திருமணக்காலம்:

பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கியமானது. குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டால்தான் வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும் முடியும். காலம் தாழ்த்தி செய்யும் திருமணங்கள் வெறும் கடமையாக மட்டுமே இருக்கும். பெண்களின் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்ட காலம் வரைதான் அவரை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள்.

குறிப்பிட்ட காலம் வரைதான் மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஆண்களும், இளம் வயது பெண்களைத்தான் திருமணத்திற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள மற்றவர்கள் விரும்பும் காலத்தில் மவுனமாக இருந்துவிட்டு, அதன் பின்பு வரன் தேட ஆரம்பித்தால், ஒப்புக்கு சப்பான வரனே அமையும் நிலை ஏற்பட்டு விடும்.

டாக்டர்கள், ‘பெண்கள் 20 முதல் 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும். திருமணத்தை தள்ளிப்போடும்போது, பிரசவமும் தள்ளிப்போகும். 30 வயதுவரை திருமணத்தை பற்றி யோசிக்காமல் அதன் பின்பு அவசரஅவசரமாக திருமணம் செய்துகொண்டு, குழந்தைப்பேறு அமையாமல் அவதிப்படும் பெண்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

தகுதியான மாப்பிள்ளை:

உயர்ந்த பணியில் அமர்ந்துவிடும் பெண்கள், தங்களுக்கு தகுதியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அதனால் திருமணத்தை தள்ளி வைப்பதாக சொல்கிறார்கள். அவர்களைவிட அதிகம் படித்தவரை, அதிகம் சம்பாதிப்பவரை திருமணம் செய்தால்தான் தங்கள் தகுதி அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள்.

படிப்பிலோ, உத்தியோகத்திலோ தன்னைவிட குறைந்த ஆணை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். திருமண வாழ்க்கை வெற்றியடைய படிப்பு, பணம், அந்தஸ்து போன்றவை மட்டுமே காரணம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள அதிக காலம் அவசியப்படுகிறது. பெண்களுக்கு படித்த உடன் வேலை கிடைத்துவிட்டால் நல்லது தான்.

அப்படி கிடைக்காத பட்சத்தில் அதற்காக காத்திருந்து காலத்தை விரயமாக்க வேண்டாம். நல்ல வரன் வந்தால் திருமணத்தை முடித்துக் கொண்டு வேலையை தேட ஆரம்பிக்கலாம். வாழ்க்கை சூழல் என்பது எல்லோருக்கும் எப்போதும் ஒன்றுபோல் சாதகமாக இருப்பதில்லை. எதிர்கால நலன் கருதி சூழலை அனுசரித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

அதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் விழும் முற்றுப்புள்ளி அல்ல. அது அவர்களது திறமைக்கு கிடைக்கும் தொடக்க புள்ளியாகவும், வெற்றிப் புள்ளியாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் திருமணத்தை அதிக காலம் தள்ளிப்போடாமல் பருவத்தே பயிர் செய்துவிடுவதுதான் நல்லது என்பது பலரது கருத்தாக இருக்கிறது