Home சூடான செய்திகள் செக்ஸ் பற்றி சிற்றவையின் ஒரு விரிவான பார்வை

செக்ஸ் பற்றி சிற்றவையின் ஒரு விரிவான பார்வை

32

முன் அறிவிப்பு

இந்தப்பதிவில் நான் செக்ஸ் பற்றி படித்து, கேட்டு தெரிந்து கொண்டதை வைத்து எழுதியதாகும். இது சரி இது தவறு என்று கூறப்போவதில்லை, இவை எல்லாம் நடக்கிறது நடக்கலாம் என்று என் மனதில் படுவதை பகிர்ந்து கொள்கிறேன் என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன். தவறாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தில் குதிக்க வேண்டாம். புரிந்து கொள்ளாமல் என் பதிலை எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

செக்ஸ்

உலகிலேயே அதிகம் பேருக்கு தெரிந்த வார்த்தைகள் என்று ஒரு கணக்கெடுத்தால் அதில் SEX என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்கும். ஆங்கிலமே தெரியாதவர்களுக்குக் கூட இந்த வார்த்தை அறிமுகம் ஆகி இருக்கும். மனிதனோ விலங்கோ செக்ஸ் என்பது வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது. செக்ஸ் என்ற வார்த்தையை எங்கே படித்தாலும் அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவது ஒரு சராசரி நபரின் எண்ணமாகும். தற்போது முதல் முறையாக என் தளத்தில் நீங்கள் இதை படித்துக்கொண்டு இருந்தால், தலைப்பில் உள்ள வார்த்தைக்காக மட்டுமே! இவ்வளவு நாள் படிக்காமல் படித்தாலும் அதே தான். இது ஒன்றும் தவறான செயல் அல்ல ஒரு சராசரி நபருக்குள்ள இயல்பான ஆர்வம் தான்.

செக்ஸ் பற்றிய ஆரம்பம்

செக்ஸ் பற்றிய எண்ணங்கள் பள்ளி படிக்கும் போதே அனைவருக்கும் வந்து விடுகிறது. இனக்கவர்ச்சி என்ற விசயத்தில் சம்மந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். செக்ஸ் பற்றிய ஆர்வம் தேடுதல் என்பது அப்போது செக்ஸ் புத்தகங்களை படிப்பதில் ஆரம்பிக்கிறது. எனக்கு செக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது ஹாஸ்டல் படிக்கும் போது தான். ஹாஸ்டலில் இருந்தால் இதை கடக்காமல் வர வாய்ப்புக் குறைவு ஆனால், படிக்காமலே முடித்தவர்களும் எனக்கு தெரியும் அவர்களை நான் அறிந்த வரையில் ஆனால், அவர்களின் மறுபக்கம் என்னால் எப்போதும் ஆராய முடியாதது என்பதால், என்னால் மட்டுமல்ல எவராலும் உறுதியாக கூற முடியாது. அப்போது இணையம் நீலப்படங்கள் எல்லாம் பிரபலமாகவில்லை இருந்த ஒரே வாய்ப்பு செக்ஸ் புத்தகங்கள் மட்டும் தான்.

தற்போது நிலைமையே மாறி விட்டது இணையம் சென்றால் என்ன வேண்டும் என்றாலும் பார்க்க முடியும் என்றாகி விட்டது. பள்ளிப் பொடுசுகள் பிரவுசிங் சென்டர் சென்று கதவை சாத்திக்கொண்டு பார்ப்பது “திருக்குறள்” அல்ல என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன். எளிதில் நீலப்படங்கள் (Blue Film – Porno film) DVD கிடைக்கிறது. செக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இணையத்தில் E Book ஆக மாறி விட்டது. கணக்கிலடங்கா செக்ஸ் தளங்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. தமிழிலே இருக்கும் தளங்கள் பலவற்றை படித்தால், தமிழ் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் வாயடைத்து விடுவார்கள். இதைப்போல நடந்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் இவர்களைப்போல இருப்பவர்களைப்பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இந்தத் தளங்களையும் அதில் எழுதப்படுபவையையும் காட்டப்படுபவையையும் வைத்து ஊருல இருக்கிறவங்க எல்லோரும் இப்படித்தான் என்று ஒட்டுமொத்தமாக மற்றவர்களை தவறாக எடை போடமுடியாது என்றாலும், இவையும் அதிகம் நடந்து கொண்டுள்ளன என்பது உண்மை .

திருமணத்திற்கு முன் உறவு

இது அதிகம் சர்ச்சையான விசயமாக அனைவராலும் விவாதிக்கப்படுகிறது என்றாலும், பெரும்பாலான மக்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது அல்லது விருப்பம் இருந்தாலும் சமூகத்திற்கு பயந்து எதிர்ப்பதைப் போல காட்டிக்கொள்ளப்படுகிறது. அதற்கு நமது கலாச்சாரமும் ஒரு முக்கியமான விஷயம் ஆகும் ஆனால், கால மாற்றத்தில் கலாச்சாரம் என்பதன் அர்த்தம் அவரது எண்ணங்களுக்கு ஏற்ப மாறி வருகிறது. இது முதலில் இருந்தே அப்படித்தான் என்றாலும், தற்போது அந்த மாற்றத்தின் சதவீதம் அதிகரித்துள்ளது அவ்வளவே. இதை தடுக்கவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம், முன்பு இருப்பதை போல இல்லை. ஒரு ஆணோ பெண்ணோ உறவுகொள்ள தற்போது வாய்ப்புகள் அதிகம் ஆகி விட்டன. தற்போது அது பள்ளியில் இருந்தே ஒரு சிலரிடம் தொடங்கி விட்டது…. அதிர்ச்சி அடையாதீர்கள்! உங்களால் நம்ப முடியவில்லையோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ! இது தான் உண்மை. பள்ளியிலேயே இப்படி என்றால் கல்லூரி, வேலை செய்யும் இடம் மற்றும் மற்ற இடங்களில் உங்கள் கற்பனைக்கெட்டாதவாறு தான் நடந்து கொண்டுள்ளன.

தற்போது கல்லூரி முடிக்கும் ஒரு மாணவன் ஒரு நீலப்படத்தை அல்லது ஏதாவது ஒரு காட்சியையாவது பார்க்காமல் கல்லூரியே முடித்து இருக்க முடியாது என்பது தான் நடைமுறை உண்மை. அது DVD யாகவும் இருக்கலாம் இணையமாகவும் இருக்கலாம். எப்போதும் போல சில விதிவிலக்குகள் இருக்கலாம். இதில் மாணவிகளின் சதவீதம் மாணவர்களை ஒப்பிடும் போது குறைவாக இருக்கலாம் ஆனால், இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆண்கள் பெண்கள் சகஜமாக பழக முன்பை விட தற்போது ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாலும் ஊடகங்கள் மற்றும் இணையம் தரும் செய்திகள் அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதாலும் மேற்கத்திய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்ற நினைப்பதாலும், திருமணத்திற்கு முன்பே உறவு என்பது இன்னும் கொஞ்ச காலம் சென்றால் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ! ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

சிறந்த எடுத்துக்காட்டாக முன்பு செக்ஸ் புத்தங்கங்கள், பின் நீலப்பட கேசட்கள், பின் நீலப்பட DVD (தற்போது 3D), இணையம் என்று கால மாற்றத்திற்கேற்ப வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதை யார் தடுக்க நினைத்தாலும் நிறுத்த முடியாது. முன்பு திருமணம் ஆக தாமதமானால் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் ஆனால், தற்போது கிடைக்கும் வாய்ப்புகள் பலரின் கட்டுப்பாட்டை அசைத்துப் பார்த்து விடுகிறது. இதற்கு முக்கியமாக காரணமாக மேற்கத்திய கலாச்சாரமும் அதை அனைவருக்கும் எளிதாக கொடுக்கும் ஊடகங்களையும், இணையத்தையும் மற்றும் பல நாட்டுப் பயண வசதி வாய்ப்புகளும் காரணமாக கூறலாம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ஒரு சராசரி நபரை டெம்ப் பண்ணக்கூடிய விஷயங்கள் அதிகம் ஆகி விட்டன. நாம் சும்மா இருந்தாலும் எதையும் நினைக்காமல் இருந்தாலும் நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகள் சும்மா விடுவதில்லை. இவையே தவறுகள் அல்லது வரம்பு மீற ஒருவரை தூண்டுகிறது. இவை வரும் காலங்களில் இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும் என்பது உண்மை.

திருமணம்

திருமணம் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் அனைவராலும் போற்றப்படும் ஒரு விஷயம் மற்ற நாடுகள் கூட இந்தியா பற்றி பேசும் போது நம்முடைய திருமண பந்தத்தை பற்றி சிலாகித்து கூறுகின்றன ஆனால், தற்போது நடக்கிறது என்ன? திருமணம் நடந்த ஒரு வாரத்தில் விவாகரத்து கேட்கும் நிலை சர்வசாதரணமாக வந்து விட்டது. ஈகோ பிரச்சனைகள் அதிகம் பெருகி விட்டன. தனது மனைவி கணவரை விட அடுத்தவர் பெட்டராக தெரிவதால் குடும்ப வாழ்வில் சலிப்பு வந்து வாழ்க்கையே பலருக்கு சூனியமாகி விடுகிறது. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக செக்ஸ் ஐ கூறலாம். திருப்தியடையாத கணவன் மனைவி அடுத்தவரை நாடுவது என்பது தற்போது செய்திகளில் அதிகம் அடிபடும் விசயமாகி விட்டது.

தினமும் செய்தித் தாள்களில் கள்ள உறவு செய்திகள் வராமல் இருந்தால், அன்று அது அதிசய நிகழ்வே. தாங்கள் செய்யும் செயல்களுக்கு அவரவர் நியாயம் கற்பித்துக்கொள்கிறார்கள் அது தவறாகவே இருந்தாலும். “உறவு முறைகள்” மாறுகிறது. குடும்ப ஆண்கள் குடும்பப் பெண்கள் என்ற ஒரு பதம் அனைவராலும் கூறப்படுகிறது செய்திகளிலும் வருகிறது. இவர்கள் தான் ஊரில் ஒழுக்கமானவர்கள் மற்றவர்கள்!! எல்லாம் மோசம் என்கிற ரீதியில். அப்படி என்றால் கள்ள உறவுகளில் மாட்டுபவர்கள் கள்ள உறவிற்காக தங்கள் குழந்தையைக்கூட கொலை செய்யத் தயங்காதவர்கள் எல்லாம் யார்? இவர்கள் எல்லாம் இந்த பிரச்சனையில் மாட்டும் முன்பு எந்தப் பதத்தில் இருக்கிறார்கள்? முரண்பாடாக இல்லையா!

க்ரூப் செக்ஸ்

தற்போது சில இடங்களில் நடந்து கொண்டு இருக்கும் செயல் இது. ஆண் பெண் இருவர் என்ற நிலை மாறி பல ஆண்கள் பல பெண்கள் ஒன்றாக உறவு கொள்வதே க்ரூப் செக்ஸ் என்று கூறப்படுகிறது. இவை பற்றி எல்லாம் மேலை நாடுகளில் மட்டும் கேள்விப்பட்டதுண்டு ஆனால் இவை எல்லாம் தற்போது நமது தங்கத்தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டு இருக்கும் விசயமாகும். இதை நான் கூறவில்லை ஊடகங்களே பல கட்டுரைகளை எழுதித்தள்ளி விட்டது. இவை எல்லாம் நடக்காது பொய்யாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் Mr அப்பாவி பட்டத்தை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

ஓரினச்சேர்க்கை

ஆணும் பெண்ணும் உறவு கொள்வதே உலகில் உள்ள மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட இயற்கையான உறவு முறையாகும் ஆனால், அதோடு பண்டைக் காலத்திலே இருந்து அதுனுடன் தொடர்ந்து வரும் இன்னொரு உறவு முறை ஓரினச்சேர்க்கையாகும். ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதையே ஓரினச்சேர்க்கை என்கிறோம். முன்பு இலைமறைவு காயாக நடந்து கொண்டு இருந்தது தற்போது பல நாடுகளில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்றாக மாறி விட்டது கால ஓட்டத்தில். இப்போது ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் எல்லாம் சர்வ சாதரணமாக நடக்கும் அளவிற்கு காலம் மாறி விட்டது.

இங்கே பலரும் ஓரினச்சேர்க்கை என்ற விஷயம் தமிழ்நாட்டில் தற்போது தான் வந்தது போலவும் அதில் மிகச்சிலரே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் நினைத்துக்கொண்டுள்ளார்கள். அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் என்று கருத வேண்டியிருக்கிறது. சென்னையில் 1996 வருடம் முன்பு என்று நினைக்கிறேன் ஜூனியர் விகடனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றி செய்தி வந்தது ஒரு சிலருக்கு தெரிந்து இருக்கலாம், குறிப்பாக சென்னை டி நகர் பனகல் பூங்கா பற்றி. இங்கே அதிகமாக ஓரினசேர்க்கையாளர்கள் வந்து செல்கின்றார்கள் என்று. இது செய்தியில் வந்ததால் நமக்கு தெரிந்தது ஆனால், இதற்கு முன்பேயும் தற்போதும் ஏராளமான ஓரினச்சேர்க்கை நபர்கள் இங்கே இருக்கிறார்கள் சதவீத அளவில் மட்டுமே வேறுபாடு.

தற்போது அதிர்ந்து போகக்கூடிய அளவிற்க்கெல்லாம் இல்லாமல் ஓரினச்சேர்க்கை செய்திகள் எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. முதன் முதலில் ஓரினச்சேர்க்கை என்பதை நான் கேள்விப்பட்டது நான் பள்ளியில் படிக்கும் போது ஹாஸ்டலில். ஹாஸ்டல் என்றாலே அங்கே ஓரினச்சேர்க்கை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை, அதுவும் தற்போதெல்லாம் இன்னும் அதிகம் ஆகி விட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் ஆண் பெண் தங்கும் விடுதிகள் என்று எங்கும் ஓரினச்சேர்க்கை நீக்கமற நிறைந்து இருக்கிறது. இதைப்படித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிலர் கூட ஓரினச்சேர்க்கை என்ற விசயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் ஆண் பெண் இருவரையும் சேர்த்தே கூறுகிறேன். வேலைக்குச்செல்லும் ஆண்கள், பெண்கள் விடுதிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கேட்டாலே இது பற்றி கூறுவார்கள். இங்கேயே இப்படி என்றால் இவை இல்லாமல் பொது மக்களிடையே நடப்பது தனி. மேலே கூறியது போல இதை நான் சரி தவறு என்று கூறவில்லை இது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

எது சரி எது தவறு?

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம். நமக்கு சரி என்று படுவது இன்னொருவருக்கு தவறு. நமக்கு தவறாக தெரிவது இன்னொருவருக்கு சரியாகத் தோன்றுகிறது. ஓரினச்சேர்க்கை நபர்களை கேட்டால் அவர்கள் செய்வது சரி என்பார்கள். திருமணத்திற்கு முன் உறவு கொள்பவர்களை கேளுங்கள் தான் செய்வது தவறில்லை என்பார்கள். இன்னும் பலர் இவை அனைத்துமே தவறு என்பார்கள். இதில் யார் கூறுவது சரி தவறு! யாரும் இதை முடிவு செய்ய முடியாது என்பதே உண்மை. அவரவர் வாழும் சூழ்நிலை, கலாச்சாரம், வளர்ப்பு ஆகியவற்றை பொறுத்து நமது எண்ணங்கள் வளருகிறது. இதையொட்டியே ஒரு விஷயத்தைப்பற்றிய சரி தவறு என்ற தீர்மானங்கள் முடிவாகின்றன. கலாச்சாரம் என்பது கால மாற்றத்திற்கு ஏற்ப மாறி வரும் ஒன்றாகும் நிலையானதல்ல. இன்று தவறு என்பது நாளை ஏற்றுக்கொள்ளும்படி வரலாம்.

எடுத்துக்காட்டாக எது ஒழுக்கம் / ஆபாசம் என்பதை யார் தீர்மானிப்பது? நீங்கள் (நீங்கள் என்றால் இதைப்படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் பொது மக்கள் அல்ல) எதை ஆபாசம் இல்லை என்று கருதுகிறீர்களோ! அது இன்னொருவருக்கு ஆபாசமாகத் தெரியும் அதே போலத்தான் ஒழுக்கமும். இப்ப யார் தீர்மானிப்பது ஒழுக்கம் / ஆபாசம்! இதை டென்ஷன் ஆகாமல் பொறுமையாக யோசித்துப்பாருங்கள்.

நமது நாட்டிலே மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் என்று மூன்று பிரிவு இருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் மேற்கூறிய அனைத்தும் நடக்கிறது. இல்லை என்று மறுக்க முடியுமா! நடக்கும் செயல்களில் சதவீத அளவில் மட்டும் மாற்றம், மற்றபடி அனைத்தும் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. இப்படி எல்லாம் நம்மை சுற்றி நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் அறியாமை. எது ஒழுக்கம் என்பதை யாரும் அறுதியிட்டு கூற முடியாது என்பதே உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒழுக்கத்திற்கான அளவுகோல் வேறுபடும். நிர்வாணமாக இருக்கும் ஊரில் நீங்கள் ஆடை அணிந்தால் அவர்கள் பார்வையில் நீங்கள் பைத்தியம். பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டதை சரி என்று அனைவரும் பின்பற்றுகிறோம் அவ்வளவே.

மாற்றங்கள் என்றும் தவிர்க்க முடியாதது

உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றம் ஒன்று தான். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம் அதற்கு அதைப் பற்றி எதுவும் கவலையில்லை மாற்றத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும். முன்பு செக்ஸ் புத்தங்கங்கள் படிப்பது பெரிய விசயமாக இருந்தது பின் நீலப்படங்கள் என்றானது தற்போது திருமணத்திற்கு முன் பின் பலருடன் உறவு என்று ஆங்காங்கே நடந்து கொண்டுள்ளது. எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்று எனக்கு தோன்றினாலும் அதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். பிற்காலங்களில் நாம் யாரையும் கட்டுப்பாடு செய்ய முடியாது “இப்படி செய்யாதே என்று கூற முடியாமல் பாதுகாப்பாக இரு” என்ற வெளிப்படையாக கூற வேண்டிய நிலை வரலாம் வரும்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்துக்கொள்ளுமாம், வசனம் பழையதாக இருந்தாலும் இந்த விசயத்திற்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும். நாம் நினைக்கும்படி இந்த உலகம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். யாரையும் இவன் நல்லவன் கெட்டவன் என்று வெளிப்புற நடவடிக்கையை வைத்து முடிவு செய்து விடாதீர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மோசமான மறுபக்கம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் இருக்கலாம். அது தெரியாதவரை அவர் வெளி உலகிற்கு நல்லவர் தான். இது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் சந்தேகமில்லாமல் பொருந்தும்.

சுருக்கமாக கூறுவதென்றால் தவறு செய்ய வாய்ப்பு அமையாத வரை ஒருவர் நல்லவரே! சூழ்நிலையே நம் முடிவுகளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

உலகத்திற்கு ஒழுக்கமானவன்(ள்) என்பவன்(ள்) யார் தெரியுமா? தான் செய்யும் தவறை திறமையாக மறைப்பவன்(ள்) தான். இவை இல்லாமல் சில விதிவிலக்குகள் எப்போதும் போல இருக்கும். தான் ரொம்ப யோக்கியன் ஒழுக்கமானவன்(ள்) என்று அனைவரிடமும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறவர்களின் மனசாட்சிக்குத் தெரியும் தான் எப்படிப்பட்டவர் என்று, இதை படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் உட்பட. எனவே அடுத்தவரைக் குறை சொல்வதை விட்டு விட்டு நம் அளவில் நாம் சரியாக இருக்கிறோமா! என்று பார்த்தாலே போதுமானது நம் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.

“ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தில் பெண்களுக்கு உள்ளாடை விற்பனை செய்ததற்காக சிவக்குமாருக்கு அவர்களுடைய ஊர் பஞ்சாயத்தில் தண்டனை கொடுப்பார்கள் காரணம், அந்த ஊரில் பெண்கள் உள்ளாடைகள் அணிவது என்பது ஒரு கலாச்சார சீரழிவு. அப்போது அந்த ஊர் பெரிய மனிதராக வரும் வினுச்சக்கரவர்த்தி அவர்கள் கூறுவார் “என்ன கட்டுப்பாடு போட்டாலும் வருகிற நாகரீகம் வந்துட்டு தான் இருக்கும்.. ஊருக்கு தான் கட்டுப்பாடு போட முடியும் உலகத்துக்கேவா போட முடியும்” என்று… எவ்வளவு உண்மை! இதையே நாம் நாகரீகம் என்பதற்குப் பதிலாக செக்ஸ் பற்றிய மாற்றங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இவை மாறிக்கொண்டே தான் இருக்கும் நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.