Home இரகசியகேள்வி-பதில் பாலியல் ஆறியமையால் ஏற்படும் விளைவுகள் டாக்டர் பதில்கள்

பாலியல் ஆறியமையால் ஏற்படும் விளைவுகள் டாக்டர் பதில்கள்

312

பாலியல் டாக்டர் கேள்வி பதில்:1. பாலியல் கல்வியின் அவசியமென்ன?

மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. உணவு தேவை எனில் மனிதன் கேட்டு பெருகிறான். அதன் சுவையை பிறரிடம் சொல்கிறான். அதைப்பற்றி படித்து அறிந்து கொள்கிறான். எவ்வித தயக்கத்திற்கும் இடம் கொடுக்கமால் பிறிரிடம் கலந்து பேசுகிறான். மேலும், மேலும் அதைப் பற்றி தெரிந்து கொள்கிறான். அதன் சுவையை அனுபவிக்கிறான். அது போல பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.

இயற்கையான இன்பம் அடைவதற்கும்,தன் இனப்பெருக்கத்திற்கு, தன் துணையுடன் இணக்கம் ஏற்படுத்துவதற்கும், பாலியல் பற்றிய புரிதல் மனிதருக்கு அவசியமாகிறது. ஆனால் மனிதன் அது குறித்துப் பேசவும் வெளிப்படையாக விவாதிக்கவும் தயங்குகிறான். ஏனெனில், அது மாதிரியான மன எண்ணத்தை நமது சமூக பண்பாட்டு அமைப்பு மனித சமுகத்தின் மீது திணித்து விட்டது.

இதனால் பாலியல் குறித்த தெளிவான அறிவு பெற வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் மனித வாழ்வில் நிம்மதியின்மையும்,தேவையற்ற பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. சந்தேகம், பாலியல் பற்றிய தெளிவின்மை, தன்னைப் பற்றியான தவறான எண்ணம் போன்ற காரணங்களினால் மனிதன் முழுமையான இன்பம் அடைய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றான். நடைமுறையில் நாம் செய்தி ஏடுகளில் காணும் வெட்டு, குத்து,அடிதடி, சண்டை, கொலை – தற்கொலை பொன்றவை பெரும்பாலும் பாலியலை மையமாகக் கொண்டே நிகழ்கிறது. இதனால் மனித ஆற்றல், பொருளாற்றல் (மொத்தத்தில் சமுக ஆற்றல்) வீணாகிறது. இதற்கு முக்கியக் காரணம் பாலியல் பற்றிய தெளிவின்மையே ஆகும்.

அடிப்படையில் பாலியல் தெளிவு இல்லாததால் பல குடும்பங்களில் சிக்கல்களும் மனம் மற்றும் மண முறிவுகளும் ஏற்படுகின்றன. இன்று எய்ட்ஸ் (AIDS : AQUIRED INNUNE DEFFICIENCY SYNDROME) மற்றும் பால்வினை நோய்கள் (SEXUALLY TRANSMITTED DISEASE)போன்றவை அதிகமாக பரவிவருகிறது. பாலியல் கல்வி இதனைப் பற்றிய அறிவையும், தெளிவையும் தரும். பாலியல் கல்வியால் இது மாதிரியான நோய்கள் வராமல் தடுக்கலாம். அப்படியே வந்தாலும் சரியான அனுகுமுறையைக் கையாளப் பாலியல் கல்வி துணை புரியும்.
அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் நடைபெறும் முக்கிய சமூக பிரச்சினைகளுக்கு இந்நாட்டு மக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், பாலியல் தொடர்பான சின்ன விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாகவும் பல சமூக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேற்கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கையில் பாலியல் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்பதும் தெரிய வருகிறது. எனவே மனித ஆற்றலை விரயமாக்காமலும் அதனை மேம்படுத்தவும் பாலியல் கல்வி பெரிதும் பயன்படும். பாலியல் கல்வி எனது ஆண்,பெண் உள்ளிட்ட அனைவருக்கும் அவசியம். குறிப்பாக பெண்கள் இதனைத் தெரிந்து கொள்வது ஒட்டு மொத்த சமூத்திற்கும் நல்லதாகும். ஏனெனில் பாலியலில் பெரிதும் வஞ்சிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எனவே சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற பாலியல் கல்வி அவசியமாகும்.

2. பாலியல் பற்றி அறியாமையால் ஏற்படும் விளைவுகள் யாவை?
பாலியல் என்பது இரகசியம். இது விவாதிக்கக்கூடாத விசயம் என்று பலராலும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பாலியல் தேவை இயல்பானது. இதை உணராமல் பெரும்பாலோர் பாலியல் தேவையை தவறு, அது குற்றம் என்று நினைக்கின்றனர். எனவே இதனை அறிய,அனுபவிக்க ஏதேனும் ஒரு இரகசியமான,ஆரோக்கியமற்ற வழியை இளைஞர்கள் நாடுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியாபார நோக்கமுள்ள திரைப்படங்களும், நாளேடுகளும், வார-மாத இதழ்களும் தவறான வழி காட்டுதலைத் தருகின்றன.

மேலும் இவைகள், இத்தகைய மனோ நிலையை பணமாக்கிக் கொள்கின்றன. இது ஆண்,பெண் இருபாலர்களையும் தவறான பாதைக்கு கொண்டு செல்லவும்,மோசமான விளைவுகளுக்கு உள்ளாக்கவும் காரணமாக இருகின்றன. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே. சமூகத்தில் அதிகமாக நிகழ்ந்து வரும் தகராறுகளுக்கும் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பல குடும்பங்களில் உறவுகள் விரிசல் அடைவதற்கும் பாலியல் பற்றிய தெளிவின்மையே முக்கிய காரணமாகும்.

பெரும்பாலான மக்களின் பாலியல் பற்றிய புரிதலின்மை காரணமாக,தவறான திரைப்படங்களும்,செய்தியேடுகளும் அவர்கள் மனதில் சலசலப்பை ஏற்படுத்தி விடுகின்றன,இதனால் அவர்கள் தங்கள் கடமைகளில் (படிப்பு, விளையாட்டு, ஆராய்ச்சி) போன்றவைகளில் தெளிவான மனதோடு ஈடுபட முடிவதில்லை. இங்கு காதல் உருவாவதற்கும் அது முறிந்து போவதற்கும், காதல் தோல்வியினால் தேவையற்ற தற்கொலைகள் நிகழ்வதற்கும் முக்கியக் காரணம் பாலியல் பற்றிய தெளிவின்மையே காரணமாகிறது. மேலும் பெரும்பாலான காதல் உடல் ரீதியான ஈர்ப்பாக (INFATUATION) மட்டுமே அமைந்து விடுவதும் காரணமாகும்.

3. பாலியல் கல்வி மூலம் கிடைக்கும் நன்மைகள் யாவை?

நம் சமுகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான நேரங்களில் இருபொருளில் பேசுகிறார்கள். அத்துடன் தவறான பாலியல் எண்ணத்தை தூண்டக்கூடிய கதைகளை படிக்கின்றனர். கிளர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்களையும்,நாடகங்களையும் பார்க்கின்றனர். அத்தோடு சாலையோரங்களில் நின்று பெண்களை தவறான நோக்கத்தில் பார்ப்பது, கேலி பேசுவது போன்ற பல செயல்களில் இளைஞர்கள் நேரத்தை வீணாக்க நேரிடுகிறது. இது பாலியல் கல்வியைப் புகட்டாமல், அதை இரகசியம் என புதைத்து வருவதால் ஏற்படும் விளைவேயாகும்.

பாலியல் கல்வி மூலம் பாலுணர்வு மற்றும் பாலியல் இன்பம் இயல்பானது என அறிய முடியும். இது முறையானது,இயற்கையானது, நியாயமானது என உணர முடியும். அக்கல்வி மனிதன் அனைவருக்கும் தேவையான ஒன்று என்பதை அறியவும், பாலியல் பற்றிய தெளிவு ஏற்படவும் பயன்படும். இதன் மூலம் பாலியல் பற்றிய தவறான எண்ணங்கள் விலகும். இது குறித்து அனைவரும் உளறித் திரியாமலும் வீண் பொழுது போக்காமலும் பயனுள்ள பணிகளில் ஈடுபட முடியும். இதன் மூலம் சமூகத்தையும் தன்னையும் உயர்த்திக்கொள்ள முடியும். பாலியல் தேவைகளை நேர்மையான ஆரோக்கியமான முறையில் நெறிப்படுத்திக்கொள்ளவும், பாலியல் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளவும்,பாலியல் குறைகள் இருப்பதாகத் தெரிந்தவுடன் (துவக்க நிலையில்) மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள முயல்வதும் பாலியல் கல்வியின் பயன்களாகும்.

4. பாலுணார்வு என்பது ஒரு இயற்கையான உணர்வு தானே? அதை எந்த உயிரும் தன்னிச்சையாக உடலுறவு மூலம் வெளிப்படுத்தத்தானே செய்கிறது?அதற்கு யாரும் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லையே? மனிதரை மட்டும் அதனை தெரிந்து கொள்ள செய்ய வேண்டுமா?

பாலுணர்வு எல்லா உயிர்களுக்கும் உள்ள இயற்கையான உணர்வுதான். அவைகளுக்கு எவரும் சொல்லிக்கொடுத்து அவைகள் செய்வதில்லை. அப்படியிருக்க மனிதன் மட்டும் ஏன் அதனை அறிந்துகொள்ள
வேண்டுமென்றால்:
1. மனிதன் மற்ற உயிரனங்களை விட அறிவில் உயர்ந்தவன். நாகரிகமான உயர் நெறியுடன் கூடிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். அதாவது சமூகக் கூட்டு வாழ்க்கையை ஏற்று நடப்பவன்.

2. மற்ற உயிரனங்கள், இனப் பெருக்கத்திற்காக குறிப்பிட்ட பருவ காலங்களில் சில முறை கூடுவதோடு பாலுறவை முடித்துக்கொள்கிறது. எனவே அவைகளுக்கு பாலியல் பிரச்சனைகள் மிக மிகக்குறைவே ஆகும். ஆனால் மனிதனின் தேவை அப்படிப்பட்டதல்ல. எல்லாக் காலங்களிலும் அவனுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வெண்டிய அவசியம் உள்ளதால் அவற்றில் ஏற்படும் பிரச்சனைகள்,தீர்வுகள் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

3. மேலும் பாலுறவில் ஈடுபடும் ஆண்,தனது இணையான பெண் துணையை சந்தேகிப்பதும், ஆளுமைப்படுத்துவதும் மனித சமுகத்தில் உள்ள சூழல்களாகும். இத்தகைய குணங்கள் நம் சமுகத்தில் இருப்பதால் பல் வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவர்கள் பெண்களாகவே உள்ளனர். அப்பிரச்சனைகளில் பெரும்பாலானவற்றை தீர்க்க பாலியல் கல்வியை கற்றுக்கொள்வது அவசியமாகும்.

4. மேலும் தவறான பாலியல் வழிகாட்டுதல்களைத் தரக்கூடிய மதங்கள்,திரைபடங்கள், செய்தியேடுகள் போன்ற ஊடகங்கள் விலங்குகளுக்குக் கிடையாது.

5. இருபாலர் கல்வி எனப்படும் கோ–எஜுக்கேசன் (CO-EDUCATION) கல்வி முறை நல்ல முறை தானா?
ஆண்,பெண் இருவரும் சேர்ந்து படிப்பது நல்லது. சிறிய வயதில் பெரும்பாலும் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒன்றாக படிக்கின்றனர். இந்த காலம் சிறுவயது காலமாதலால் ஆண், பெண் பருவகால உணர்வுகள் அவர்கள் மனதில் ஏற்படுவதில்லை. அதன் பின்னர் 6-ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பெரும்பாலும் ஆணும், பெண்ணும் தனித்தனியாக பிரிந்தே படிக்கின்றனர். இடைப்பட்ட இந்த நிலையில்தான் ஆண்,பெண் பருவ மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்ற்ன. இருபாலரிடையேயும் மீசை, மார்பு என உடல் ரீதியாகவும், மற்றும் உணர்வு ரீதியாகவும் பல மாற்றங்கள் வெளிப்படுகின்றன. அச்சமயத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் இல்லாமல் போகிறது. உணர்வுகள் மேலோங்கி வளர்வது இந்த இளம் (TEEN-AGE) பருவத்தில்தான். எனவே பாலியல் பற்றிய புரிதல் இல்லாத பள்ளிப் பருவத்தில், இருபாலரையும் பிரித்து வைத்துவிட்டு பாலுணர்வு மேலோங்கி வரும் கல்லூரிப்பருவத்தில் அவர்களை சேர்த்துப் படிக்க வைத்தாலும் பிரித்து படிக்க வைத்தாலும், அவர்கள் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் .இத்தன்மையானது பள்ளிப்பருவத்தில் அவர்களைப் பிரித்து வைப்பதால் ஏற்படுவதே ஆகும்.

இதன் விளைவாக இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகும். இதனால் பாலியல் வக்கிர வெளிப்பாடுகள் இருபாலரிடமும் வெளிப்படுகின்றன. மேலும் இருபாலருக்கும் இங்கு பாலியல் கல்வி கற்பிக்கப்படாததும், குறைபாடாக அமைகிறது. எனவே தொடக்கக் கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் இருபாலர் கல்வி நடைமுறையில் இருப்பது அவசியம் ஆகும்., இதனால் இருபாலரும் ஒருவரை ஒருவர் வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்ப்பது நீங்கும். இயல்பான பழக்க வழக்கங்கங்கள் உண்டாகும். இதனால் ஏற்படும் கொலை-தற்கொலை போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் தடுக்கப்படும் வாய்ப்புகள் உருவாகும்.
படிக்கும் காலத்திலேயே ஆண்,பெண் இருவருக்கிடையே இவ்விதமான பாலியல் அறிவை புகட்டாமல் திருமண வயதில் இணைய வைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பாலியல் பற்றிய வீணான அச்சம் உண்டாகிறது.

இது சந்தேகம்,குழப்பம் எனத் துவங்கி மனமுறிவு,திருமண முறிவு என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.
இருபாலர் கல்வி முறை நடைமுறைப்படுத்தினால் இவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். இருபாலர் கல்வியோடு உயர் பள்ளி வகுப்பு துவக்கத்தில் இருந்து பாலியல் கல்வியும் புகட்டுவதே மிக சிறந்ததாகும். (எந்த வகுப்பிலிருந்து துவங்கலாம் என்பபதை, பாலியல் வல்லுனர்கள்,உளவியலார், கல்வித்துறை வல்லுனர்கள்,பெண்ணிய அமைப்பினரின் ஒத்த கருத்தைப் பெற்று அவ்வகுப்பிலிருந்து துவங்குவதும் சிறந்த வழிமுறையாகும்)