Home சமையல் குறிப்புகள் மைசூர் மசாலா தோசை

மைசூர் மசாலா தோசை

16

தேவையான பொருட்கள்


அரிசி – 1 கப்
உளுத்தம்பருப்பு – 1/4 கப்
கடலை பருப்பு – 1/8 கப்
துவரம் பருப்பு – 1/8 கப்
வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
அவல் – ஒரு கைப்பிடி அளவு
உப்பு
நெய்

செய்முறை:
1. அரிசி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் இவற்றை 6 முதல் 7 மணி வரை ஊற வைக்கவும்.
2. அவலை ஊறவைத்த பொருட்களுடன் சேர்த்து மேலும் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
3. ஊறவைத்த பொருட்களை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த மாவு புளிக்க ஓர் இரவு முழுவதும் வெளியில் வைக்கவும் (நான் இங்கே மிகவும் குளிர் என்பதால் நுண்ணலை அடுப்பில்/ஓவனில் வைத்து விடுவேன்).
5. பிறகு இதனுடன் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
6. ஒரு நான் ஸ்டிக் தோசை கல்லை சூடு படுத்திக் கொள்ளவும், இதில் சிறிது எண்ணெய் / நெய் தடவி, ஒரு கரண்டியில் தேவையான அளவு மாவை எடுத்து தோசையாக வார்க்கவும். எந்த அளவிற்கு மொத்தமாக வேண்டுமோ அந்த அளவிற்கு வார்த்துக் கொள்ளவும். தோசையை 1 முதல் 2 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். தோசையின் அடிப்பாகம் பொன்னிறமாகி முறுகலானவுடன் மூடியை எடுத்து விடவும், இதற்கு மேல் சிறிது நெய், தக்காளி சட்னி, உருளைக்கிழங்கு பாஜி இவற்றை பரவலாக வைத்து தோசையை உருட்டிக் கொள்ளவும். சூடாக சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
உருளைக்கிழங்கு பாஜி செய்ய தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
கேரட் – 2
வெங்காயம் -1 பெரியது
துண்டு துண்தாக வெட்டிய‌ இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகை தாளிக்கவும், பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
3. இதனுடன் இஞ்சி சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.
4. இப்பொழுது நறுக்கிய‌ உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. உப்பு, மஞ்சள் தூள், போதுமான தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை நன்கு வேக வைக்கவும், உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதை அப்படியே சிறிதளவு மசித்து விடவும்.
தக்காளி சட்னிக்கு தேவையான பொருட்கள்:
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 3 அல்லது 4
பெரிய வெங்காயம் – 1 நடுத்தரமானது
சிவப்பு மிளகாய் தூள் (1/2 தேக்கரண்டி)
கறிவேப்பிலை (சிறிதளவு)
பூண்டு பல் – 1 அல்லது 2
உப்பு சுவைக்கேற்ப‌
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
2. இதனுடன் தக்காளி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பூண்டு இவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு இந்த கலவையை ஆற விடவும். ஆறிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
குறிப்புகள்:
பொதுவாக உணவகங்களில் மசாலா தோசையை மூடாமல் வேக வைக்கிறார்கள். ஆனால் நான் வீட்டில், தோசையை மூடி வைத்து வேக வைப்பதால் சுவை கூடுவதோடு, முறுகளாகவும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தேன்.