Home ஆரோக்கியம் உளவியல் மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படும் தாக்கங்கள்..!!

மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படும் தாக்கங்கள்..!!

45

நோய்க்கான பொதுக் காரணிகள்

ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது போவது, காதலில் தோர்வியடைவது) அல்லது சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத சமூக விரோத செயல்களில் ஏடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு, கடன்பட்டு பின் அதனை செலுத்த முடியாது போவதால் ஏற்படும் மானநஷ்டம், பெரிய எதிபார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்கிப் போவதால் ஏற்படும் திடீர் மாற்றம் என்பனவற்றால் ஒருவர் மனதை துன்புறுத்தும் மன வேதனையும், தாழ்வு உணர்வு (Low Mood) நிலையும் தேவையற்ற யோசனையுமே மன அழுத்தம் உண்டாக காரணமாகின்றது.

நடந்த சில சம்பவங்கள் மறக்க முடியாதவைகளே. அதற்காக என்நேரமும் அதனையே சிந்திக் கொண்டு நேரத்திற்கு உண்ணாது ஊறங்காது மூலையில் இருப்பதனால் அதற்கு துணை போகும் சில ஹோமோன்கள் சுரந்து வேதனையையை அதிகரிக்கச் செய்து மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் வாழ்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்தல், கொலை செய்ய முயற்சித்தல், குடிபோதைக்கு அடிமையாதல் போன்றவற்றை செய்யவும் தூண்டப்படுகிறார்கள். இது ஒரு நோயாகவே கருதப்படுகின்றது.

இந் நோயானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். ஒரு சிறு மன உழைச்சல் கூட பாரிய மன அழுத்தத்தைத் தூண்டி விடுகிறது. இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே கவலை, தனிமை, உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள் தோன்றுகின்றன. இந்த மன அழுத்தமானது கோபம், பயம், கவலை, நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, அக்கறையின்மை, துக்கம் போன்ற பலதரப்பட்ட உணர்வுகளின் கலவை. இதன்போது செய்யப் படாததை செய்யத் தூண்டுவதும் கூட பொதுவானது

மன அழுத்த நோயாளியின் அறிகுறிகள்

தூக்கமின்மை, கவலை, சோர்வு, பயம், அடிக்கடி தலைவலி, மயக்கம், எரிச்சல், மன உழைச்சல், அஜீரணக் குறைபாடுகள், தனிமை, தாழ்வு மனப்பான்மை, குறைவாக அல்லது மிக அதிகமாக உண்வு அருந்துதல் போன்றவை மன அழுத்தத்தின் சாதாரணமான அறிகுறிகள். மன அழுத்தத்தின் தொடர் தாக்குதலினால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, தோல் நோய்கள், ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் புண், ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உண்டாகலாம்.

மன அழுத்த நோயாளியியை கண்டறிவது எப்படி?

கவலை உணர்வுடன் உடம்பின் பலமிழத உணர்வுகள், தன்னம்பிக்கை இழந்து தனிமை எனும் உணர்வுடன் ஒதுங்கிக் கொள்லுதல், வழக்கமாக பொழுதுபோக்குகளில் நாட்டமின்மை போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிககாகும். அதுவே அதிகமாகி, அதிகாலையில் தூக்கமின்றி விழித்துக் கொள்ளுதல், வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு வாழக்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற எண்ணம் அடிக்கடி மனதில் எழுதல், அதற்கான தற்கொலை முயற்சி போன்றவைகளில் ஏதோவொன்று காணப்பட்டால் தகுந்த அலோசகரையோ மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை வெறுவது முக்கியமாகும்..

ஒருவருடை மன அழுத்தத்தை மூளையின் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சூழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம் என இருவகையாக பிரிக்கலாம். இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பரவலாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய அடிப்படைக் காரணிகள். எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் திடீரென்றோ படிப்படியாகவோ தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.

சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்ப்படுகின்றன. இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.

இந் நோயியில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்?

மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடை செய்ய கீழுள்ள ஆலோசனைகளை பின் பற்றுங்கள், அவை உங்களுக்கு உதவக்கூடும். உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக யாருடனாவது பேசுங்கள், உங்கள் குடும்ப அங்கத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ இது பற்றிக் கூறுவதற்கு விரும்பாவிட்டால் இதற்காக தகுந்த ஆலோசனைகள் வழங்க காத்திருக்கும் மனநிலை (Counseling)) ஆலோசகரை அணுகலாம். அப்போதுதான் உங்க்களுக்கு விடிவு கிடைக்கும்.

நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியாக விடயங்களை மீண்டும் செய்து பாருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த சக்தியூட்டும் செயற்பாடு உங்கள் பொது சுகாதாரத்தைப் பேணுவதோடு மன உழைச்சலைக் குறைக்கவும் உதவுகிறது.

சுகாதார அலுவலர் ஒருவருடன் பேசுங்கள். அவர்களுடன் நேர்மையாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு சிறப்பு மருந்துகளை வழங்கி அல்லது சிகிச்சைகளை வழங்கி உதவக் கூடும்.  அடையக்கூடிய இலக்கொன்றைத் தீர்மானித்துக்கொண்டு அது நோக்கி செயற்படுங்கள். போதுமான அளவு உணவு தூக்கம் இரண்டும் உடலுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இறுதியாக இந்த சின்ன விடயம் உங்கள் வாழ்க்கையின் நீடிப்புத் தன்மையை வழங்கும்.

உங்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்ட வசமான சம்பவம் உங்க்களைப் பாதித்திருந்தால், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட பொருட்களை ஒதுக்கி அவற்றை காணாத இடத்தில் பதுக்கி வைத்து விடுங்க்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நினைவுகளை தூண்டப் படாது தவிர்த்துக் கொள்ளலாம். அத்துடன் பாதித்த நிகழ்வுகள் பற்றி பேசாது இருத்தல் போன்ற செயல்கள் அவற்றை மறக்கச் செய்து சுய நினைவை ஏற்படுத்த உதவுகின்றது.

மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள சிலர் இவற்றை நாடுகின்றனர். ஆனால் இவை அதிகரிக்கவே செய்யும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துங்கள்.

சர்க்கரை மற்றும் கபீன் அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். மன அழுத்த ஹோர்மோன்களை இந்த கபீன் சுரக்கச் செய்வதோடு உணர்ச்சிகளை கூட்டிக் குறைப்பதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது.

அவை மட்டுமன்றி பாதிக்கப்பட்டவருடன் உறவினர், நண்பர்கள் பேச்சுக் கொடுத்து அவர்களையும் சம்பாஷனையில் உள்வாங்கி வழமைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஒருவர் மன அழுத்ததினால் பீடிக்கப்பட்டு இருக்கும்போது அவரை தனிமைப்படுத்தி வைக்காது தொடர்பாடலை ஏற்படுத்தி அவர்களின் மனநிலை மாற்றம் ஏற்படும் வகையில் ஆறுதல் கூற வேண்டும்

உலகில் வாழும் அனைவருமே தங்கள் வாழ்நாளின் ஒரு முறையாவது தற்கொலை செய்யலாமா என்ற நிலைமைக்கு வருகின்றனர் என்று மனோதத்துவம் சொல்கிறது. இன்றைய வேகமான உலகத்திற்கு ஈடுகொடுத்து நாம் காரியங்களை செய்யும்போது மெல்ல மெல்ல நம்மை அமுக்கி மூழ்கடிக்கவரும் அரக்கனே மன அழுத்தம். இதை உடனே அடையாளம் கண்டுகொண்டு தீர்வு காண்பதன் மூலம் பெரும் இழப்புகளை தவிர்க்க முடியும்.

தற்பொழுது மன அழுத்தத்திற்கான (Depression) காரணங்களும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் விரிவாக அலசப்படுகின்றன. இருப்பினும் மனஅழுத்தம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்று தான். அறிவியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் மனிதன் பெருவளர்ச்சி கண்ட பின்னரும் எதிர்பார்த்த ஏதோவொன்று இன்னமும் கிடைக்காத ஏமாற்றம், தோல்வி, வெறுமை உணர்வில் மன அழுத்தம் அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. வான்மழை பொய்த்தால் வறுமையின் கொடுமை தாங்காமல் உயிர்விடும் விவசாயிகள் முதல் பணவீக்க ஏற்றத்தாழ்வினால் பதவியிழந்து பரிதவிக்கும் படித்தவர்கள், காதல் தோல்வியுற்றால் வாழ்க்கையை வெறுக்கும் காதலர்கள் வரையிலும் அது எவரையுமே விட்டு வைப்பதில்லை.

மன அழுத்தம்- ஒரு நோய்

சாதாரணமாக உடல் நலக் குறைவினால் பொது மருத்துவரை அணுகுவோரில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவர்களின் மன அளவில் ஆரோக்கியமின்மையால் அவர்களது உடல் நலத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பது வெளிப்படை.

உலகில் வாழும் அனைவருமே நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புகிறார்கள். ஆரோக்கியமாக வாழ்தல் என்பது பெரிய வருத்தங்கள் எதுவுமின்றி வாழ்வது மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் சமூக அளவில் ஒருவன் நலமாக இருப்பதே ஆரோக்கியமாயிருத்தல் என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. இந்த வரையறையின்படி உலகில் வாழும் அனைவருமே ஒருவிதத்தில் ஏதாவதொரு கட்டத்தில் நோயாளிகளாக உள்ளார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

மன அழுத்தத்தின் மதிப்பீடு

மனநல மருத்துவர்களை நாடும் மன நோயாளிகளின்(Mental Disorders) எண்ணிக்கை 20 மில்லியானாக இருக்கும் பட்சத்தில், இதுதவிர மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 120 மில்லியன் என கணக்கிடப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டி வெளியில் தெரிவது கொஞ்சமாக இருப்பினும் அதன் மொத்த உருவமோ மிகவும் பெரிதாக இருக்கும். அதுபோன்றே இவர்கள் உட்பட எதோவொரு விதத்தில் மனநலம் குன்றியோரின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டுகிறது. உலகில் ஆண்டுதோறும் 8, 00, 000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தமே காரணம்.

ஆன்மீகத்தின் பங்கு

மனநல மருத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்றது ஒருகாலம். அப்போது மதம் மற்றும் ஆன்மீக காரியங்களே மன நோயாக கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுமுடிவுகள் ஆன்மீகம் மனிதனின் நோய் மற்றும் அதனால் ஏற்படும் மன உழைச்சலுக்கு தீர்வாக அமைவதை உறுதிப் படுத்துகின்றன. இதன் விளைவாக சமீப காலங்களில் உலகமெங்கிலும் பரவலாக பல நாடுகளின் மனநல மருத்துவத் துறையில் ஆன்மீகத்துக்கென்றே தனிபிரிவுகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தியானம், ஆலய வழிபாடு, பிரார்த்தனைகள் என்பன வாழ்க்கையில் நம்பிக்கையையும் தென்பையும் கொடுத்து மனதை திடப்படுத்திக் கொள்கின்றது.

அனுப்பி வைத்தவர்: டாக்டர் நளினி சிவப்பிரகாசம்