Home சூடான செய்திகள் பெண்ணின் தாம்பத்தியத்தில் கடைபிடிக்கவேண்டிய தகவல்

பெண்ணின் தாம்பத்தியத்தில் கடைபிடிக்கவேண்டிய தகவல்

55

பெண்களின் மனோபாவங்கள்:

ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு ஒரு பெண்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறாள் அதே நேரம் அந்த குடும்பம் சீர் குலையவும் அந்த பெண்ணே காரணமாகி விடுகிறாள். இதற்க்கு அவளது குணாதிசியங்கள் முக்கிய பங்கு வகிகின்றன.

பொதுவான குணாதிசியங்கள்:

எல்லா பெண்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். எதிர்காலத்தை பற்றிய கனவுகள் இருக்கும்.

பல பெண்களும் விரும்புவது துடிப்பான, விவேகமான, படித்த, கொஞ்சம் அழகான (ரொம்ப அழகா இருந்தா ஆபத்துதானே), நகைசுவையுடன் பேசக்கூடிய (மனைவியுடன் மட்டும்), உயரமான (மனைவியை விட கொஞ்சம் அதிகமாக), புத்திசாலியான (மனைவிக்கு முன்னால் இல்லை ) , சிகரட் , தண்ணி அப்படினா என்ன என்று கேட்ககூடிய அப்பாவியா (எங்க டார்ச்சர் தாங்க முடியாம தண்ணி அடிக்க தொடங்கினா, பரவாஇல்லை, பொறுத்துக்கலாம் ). அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா கை நிறைய சம்பளம் (கணவன், மனைவி இருவர் கையும் சேர்ந்தால் போல நிறையணும்) . இவ்வளவு தாங்க பெண்களின் எதிர்பார்ப்பு எல்லாம்.

விருப்பங்களும், எண்ணங்களும் ஒவ்வொருத்தருக்கும் ஏற்ப மாறுபடலாம், ஆனால் எதிர்ப்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். எதிர்பார்ப்பில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் அவள் மனதிற்குள் வெறுமை சூழ்ந்து விடும். இதுதான் இன்றைய பெண்களின் மனபோக்கு. இது மிகவும் ஆபத்தான ஒன்று தான்.

முந்திய தலைமுறையினர் கிடைப்பதை வைத்து மனதிருப்தியுடன் குடும்பத்தை நடத்தினர். கணவனின் எண்ணத்திற்கு ஏற்ப தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் சமாளித்தனர், அதனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெள்ளிவிழா கொண்டாடும் அளவிற்காகவாது வந்தது. ஆனால் இப்போது பல திருமணங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவதற்குள் கோர்ட்டில் முடிந்துவிடுகிறது. இந்நிலை கவலை படகூடிய ஒன்று என்பதை யாரும் மறுக்கமுடியாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்குதான்.

ஆண்கள்தான் காரணம் என்று அவர்களை குறை சொல்வதை விடுத்து தங்களால் முடிந்தவரை பிரச்சனைகளை சரி செய்ய முயலவேண்டும். முக்கியமாக பிறர் சொல்வதை கேட்காமல் சுயமாக முடிவு எடுக்க பழகி கொள்ள வேண்டும். பலர் ஆலோசனை சொல்கிறேன் என்று அவர்கள் வாழ்வில் நடந்த சிலவற்றை முன் உதாரணமாக சொல்லி நம்மை குழப்பி விடுவார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது ஆணோ நிச்சயமாக அந்த பிரச்னையை பற்றி மட்டும்தான் யோசிப்பார்கள், ஆக ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும். மற்றவர்களுக்கு இவர்கள் பிரச்சனை சாதாரண ஒரு சம்பவம் ஆனால் இவர்களுக்கு அது வாழ்க்கை அல்லவா ?

பிறரின் சொல்படி நடக்கும் மனோபாவம்:

இப்ப பல பெண்களும் நன்கு படித்து உலக அனுபவம் பெற்றவர்களாக இருந்தும் திருமணம் என்று வந்தவுடன் பலரது ஆலோசனைக்கு செவி சாய்ப்பவர்களாகி விடுகிறார்கள்.

காதல் திருமணம் செய்தவர்களுக்கு திருமணம் முடியும் வரை யார் சொல்வதும் காதில் விழாது. ஆனால் திருமண வாழ்க்கையில் சின்ன பிரச்சனை வந்தால் போதும் அவன் மேல் தவறு என்று அவளும், இவள மேல்தான் தவறு என்று அவனும் மாறி மாறி குறை சொல்ல ஆட்களை வலிய தேடி போய் சொல்வார்கள். கேட்பவர்களும் வாய்க்கு வந்ததை சொல்லி பிரச்சனையில் கொஞ்சம் எண்ணையை ஊற்றி விட்டு செல்வார்கள்.

பெற்றோர்கள் வரன் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பெண்ணிற்கு நல்லது பண்ணவேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் சில விதங்கள் அந்த பெண்ணின் வாழ்கையையே சீரழிப்பதை அவர்கள் உணருவதே இல்லை. வரன் பார்க்க தொடங்கும்போதே தரகரிடம் அவர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே மாமியார் , நாத்தனார் மாதிரி எந்த பிக்கல், பிடுங்கலும் இல்லாத வீடா இருந்தா நல்லது என்பதுதான்…?! (இப்படியே இவர்கள் மகனுக்கு வரும் பெண் வீட்டாரும் இருந்து விட்டால் ஒன்று அந்த பையனுக்கு கல்யாணம் ஆக பல வருடம் ஆகும் அல்லது தாய் உடனே சாக வேண்டும் )

இதை கேட்கும் பெண்ணின் மனநிலை என்ன ஆகும்….? அந்த நிமிடமே அவள் மனதில் மாமியார், நாத்தனார் என்பதின் அர்த்தம் பிக்கல், பிடுங்கல்தான் என்ற விஷ விதை மறைமுகமாக ஊன்றபட்டுவிடுகிறது. ஒருவழியாக சம்பந்தம் இருவீட்டார்க்கும் பிடித்துபோய் நிச்சயத்தின் போது அந்த மாமியார் கேட்கும் வரதட்சணையால் அந்த விதைக்கு நீர் ஊற்றபடுகிறது. பின்னர் திருமண நாள் நெருங்கும் நேரத்தில் அந்த பெண்ணின் உறவினர்களாலும், அக்கம்பக்கத்து நண்பர்களாலும் (நல்லது செய்வதாக நினைத்து கொண்டு ) பல அழிவுரைகள் மன்னிக்கவும் அறிவுரைகள் வழங்க படுகின்றன. அதில் சில வசனங்களை பார்ப்போம்:

i ) ‘மாமியார்கிட்ட கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..!’ ( ஏன்னா அவங்க பூதம் பாரு, தூக்கிட்டு போனாலும் போய்டுவாங்க! ) சில நேரம் இப்படி சொல்றவங்களே ஒரு பெண்ணுக்கு மாமியாரா கூட இருக்கலாம்…..!!

ii ) ‘நாத்தினார கிட்ட சேர்க்காத…!’ ( ஏன் தொத்து வியாதியா? ) ‘ உங்க வீட்டு விசயத்தில அவள் தலையிடாம பார்த்துக்கோ…!’ (உனக்கு உன் பிறந்த வீட்டில் எவ்வளவு உரிமை இருக்கோ அந்த அளவு உரிமை அவளுக்கு அவளது பிறந்த வீட்டில் இருக்ககூடாதா ?)

iii ) அடுத்த ஆபத்து கணவனுக்கு!! ‘ உன் கணவனை உன் கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில முடிஞ்சி வச்சுக்க ‘ ( அவ்வளவு குட்டியாவா இருப்பாரு..!! )

iv ) ‘கடைசியா முக்கியமா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தனி குடித்தனம் போற வழிய பாரு ‘ ( நீ சீரா கொண்டு வந்த பொருட்களை வித்து தின்னுடுவாங்க ) ‘புத்திசாலியா பொழைச்சுக்கோ, நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உன் சாமார்த்தியம் ‘ கடைசியா கொஞ்சம் பொடிவச்சு (அது என்ன பொடி ? தெரிந்தவர்கள் சொல்லவும் ) சொல்லிட்டு சென்று விடுவார்கள்.

அந்த பெண்ணும் தன்னை எப்படி புத்திசாலி என்று நிரூபிப்பது, எப்படி சாமார்த்தசாலி என்று பெயர் எடுப்பது என்பதை பற்றி யோசிக்கும் போதே ஏற்கனவே போடப்பட்ட விதை நன்கு ஆழ ஊன்றி துளிர் விட ஆரம்பத்திருக்கும். இப்படி இந்த விதத்தில் ஒரு பெண்ணை திருமணதிற்கு தயார் படுத்தினால் அவளது எதிர் காலம் என்னாகும் என்று யாரும் ஒரு நிமிடம் கூட நினைத்து பார்ப்பது இல்லை. திருமணதிற்கு பின் ஏதாவது பிரச்சனை என்றால் இந்த நலம் விரும்பிகள் எங்கே என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டு கொண்டுதான் தேட வேண்டும். அப்படியே தென்பட்டாலும் நீதாம்மா பார்த்துக்கணும் என்று சொல்லி நாசுக்காக நழுவி விடுவார்கள். சில பெற்றவர்களும் மகளே உன் சமத்து என்று சொல்லிவிட்டால் அந்த பெண்ணின் நிலை என்ன….? இது இன்றும் பல வீடுகளில் குடும்பங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது…..

திருமணதிற்கு பிறகும் தொடரும் அவலம்

திருமணதிற்கு பின் புகுந்த வீட்டில் புகும் பெண்ணின் கண்களுக்கு அங்குள்ள அனைவருமே எதிரிகளாகவே தெரியும். யாரிடமும் சரியாக பேசி பழகாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளே முடங்கிவிடுகிறாள். கணவன் இருக்கும் நேரத்தில் மட்டும்தான் அவளது பேச்சையும், சிரிப்பையும் மற்றவர்கள் கேட்க முடியும். புதுபெண்தானே போகப்போக சரியாகிவிடும் என்று பிறரும் சமாதானம் செய்து கொள்வார்கள் ( இவள் மனதில் விஷம் என்ற மரம் தற்போது கிளை பரப்பி செழித்து வளர்ந்திருப்பதை அறியாதவர்களாய்!! )

அந்த மாமியாரும், நாத்தனாரும் ஒருவேளை நல்லவர்களாக இருந்தாலும் இந்த பெண்ணை பொறுத்தவரை கெட்டவர்கள்தான் (அப்படிதானே அவளுக்கு சொல்ல பட்டிருக்கிறது) புகுந்த வீட்டினரை தனது நாக்கு என்னும் விஷ கொடுக்கால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கொட்ட தவறுவதே இல்லை. சில நாட்களில் எடுத்ததுக்கெல்லாம் குற்றம் குறை சொல்லி தன் கணவனை அந்த குடும்பத்திடம் இருந்து பிரித்து தனி குடித்தனம் கொண்டு போய்விடுகிறாள்.

கணவனும் அப்படி போனாலாவது சண்டை குறையுமே என்றுதான் போகிறான். அங்கும் சச்சரவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் (எதையும் குறை சொல்லி பழகி விட்டதால்) காலம் கொஞ்சம் கடந்த பின்தான் கணவனும் தன் தாயை தவிக்கவிட்டு வந்ததை உணர்ந்து மனம் குமைகிறான். அவனுடைய இயலாமை வெறுப்பாக மனைவியின் மீது திரும்ப வீடு நரகமாகிறது, கணவன், மனைவி உறவு பாதிக்கபடுகிறது.

ஆக இப்படிப்பட்ட நிலை உருவாக காரணமாக அமைவது அந்த பெண்ணின் நிலையற்ற மனநிலைதான். மற்றவர்கள் ஆயிரம் சொன்னாலும் கேட்கிறவர்களுக்கு புத்தி எங்கே போனது..? தன் வாழ்க்கை எப்படிப்பட்ட நிலையில் அமைய வேண்டும் என்பதை படித்த அந்த பெண்தான் முடிவு செய்யவேண்டும் . மற்றவர்களின் ஆலோசனையை கேட்டாலும் தனக்குள் அதை பொருத்தி ‘சரியாக இருக்குமா?’ என்று சீர்தூக்கி பார்க்கும் மனபக்குவம் இல்லாமைதான் கணவன் மனைவி உறவு கெட காரணமாகி விடுகிறது . இதுதான் இன்று பலரின் அனுபவம்.

(பின் குறிப்பு)

நாங்கள் மட்டுமா காரணம் ?

இந்த கேள்வி பலருக்கும் தோன்றும்தான். மனைவியரும் ஒரு காரணம் தான். ஆனால் பெண்களால் மட்டும்தான் மலைபோல் பிரச்னையை உண்டாக்கவும் முடியும், அதை பனிபோல் விலக்கவும் முடியும். இன்னும் நிறைய பகிர வேண்டியது உள்ளது. தாம்பத்தியம் கெட எடுப்பாற்கைபிள்ளை போன்ற மனநிலை ஒரு காரணம் என்றால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் ஏற்படக்கூடிய சண்டையை பார்த்தே வளரக்கூடிய பெண்பிள்ளைகளின் பாதிக்கப்பட்ட மனநிலையும் ஒரு பெரிய முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு காரணங்கள் பற்றி மட்டும் நாம் பார்த்தாலே போதும், குடும்ப சீர்குலைவு எங்கிருந்து தொடங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது காரணத்தால் ஒரு படித்த, வசதியான, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கணவன், திறமையான நல்ல குணம் படைத்த மனைவி, நல்ல குழந்தைகள் என்று எல்லாம் சரியாக இருந்தும் கருத்து வேறுபாடால் இன்று சிதைந்து (அவர்கள் இல்லை அவர்களது குழந்தைகள் ) நாலாபுறமாக சிதறி இருக்கிறார்கள் (கிடக்கிறார்கள் ). அந்த வீட்டின் பெண் பிள்ளையின் குடும்ப வாழ்விலும் இது எதிரொலித்து கொண்டிருக்கிறது, விளைவு அவளது குழந்தைகளையும் பாதித்து வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பயங்கரம்…..!! இது ஏதோ கற்பனை கதை இல்லை, கண்முன்னே நான் காணும் உண்மை.