Home இரகசியகேள்வி-பதில் ஆண்மை பரிசோதனை அவசியமா?

ஆண்மை பரிசோதனை அவசியமா?

45

ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர முடிவு ஒன்று எடுக்க வேண்டிய அவசியத்தை மதுரை உயர் நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது.

‘ஆண்மைக்குறைவு, இல்லற உறவில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இருதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இது இப்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்குத் தீர்வு காண, ‘திருமணத்துக்கு முன் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை கட்டாயம்’ என்று ஏன் சட்டம் கொண்டு வரக் கூடாது என்பதற்கு, மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என்று விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பல தரப்பிலும் விவாதங்களை உருவாக்கி இருக்கும் இந்தப் பிரச்னை பற்றி சிறுநீரகம் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவரான ஏ.ராஜசேகரனிடம் பேசினோம்.

ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?

‘‘தாம்பத்தியத்தில் ஆண் கொடுப்பவனாகவும் (Active partner), பெண் பெறுபவளாகவும் (Passive partner) இருக்கிறாள். ஒரு உறவின் தன்மை, நேரம் எல்லாவற்றையும் தீர்மானிப்பது ஆண்தான்ஸ பெண்ணின் பங்களிப்பு இதில் குறைவு. நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் இல்லற உறவில் விருப்பமில்லாத பெண்களின் குறையைக்கூட (Frigidity) எளிதில் சரி செய்துவிட முடியும். பெண்களின் மற்ற பாலியல் குறைபாடுகளும் சரிசெய்யக் கூடியவையே.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், 2008ம் ஆண்டு 88 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன் எண்ணிக்கை 2013ல், 715 ஆக உயர்ந்துள்ளது. இந்த 715 வழக்குகளில் பெண்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு காரணமாக விவாகரத்து கேட்டிருக்கும் வழக்குகள் ஐந்தோ ஆறோதான். ஆண்களை குற்றம் சாட்ட வேண்டும் என்பதோ, ஆண்களின் குறை பாடுகள் சரி செய்ய முடியாதவை என்று பயமுறுத்துவதற்காகவோ இதைச் சொல்லவில்லை. தாம்பத்தியத்தில் பெரும் பொறுப்பு வகிக்கிற ஓர் ஆண், தன்னைப் பரிசோதித்துக் கொண்டு குறைகள் இருந்தால் சரி செய்து கொள்ள முன்வர வேண்டும் என்பது தான் இதில் முக்கியம்ஸ’’

ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபித்துவிட முடியுமா?

‘‘மருத்துவரீதியாக ஓர் ஆண் தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியாது. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடைமுறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சிலர் தன் பாலின விருப்பம் கொண்ட ஹோமோசெக்ஷுவலாக இருப்பார்கள்ஸ சிலர் போதைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள்ஸ சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபட முடியாதுஸ மற்ற பெண்களிடம் நார்மலாக இருப்பார்கள் (Selective impotence). இதுபோன்ற நபர்களைப் பரிசோதித்தால் ஆரோக்கியமாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும். பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமுறையில் சரியாகச் செயல்படுபவராகவும் இருக்கலாம்.

பாலியல் உறவில் மனம் பெரும் பங்கு வகிப்பதுதான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இந்தப் பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற்றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடியும்ஸ’’

ஆண் மலட்டுத்தன்மைக்கும் ஆண்மையின்மைக்கும் என்ன வித்தியாசம்?

‘‘ஆண் மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடைய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத்தன்மை இருக்கலாம். ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள முடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொண்டிருக்கலாம். இதில் இன்னொரு விஷயம்ஸ ஆண்மையின்மை காரணமாக விவாகரத்து கேட்க முடியும். மலட்டுத்தன்மையைக் காரணம் காட்டி விவாகரத்து கேட்க முடியாதுஸ’’

திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை சாத்தியம் தானா?

‘‘பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் சட்டமாக்கப்பட்டுள்ளன. திருமணப் பதிவும் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதே போல, திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையும் சட்டம் ஆக்கப்பட்டால்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அதைத்தான் நீதியரசர் கிருபாகரன் கூறியிருக்கிறார். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் ‘உங்கள் மகன் ஆண்மகன்தானா?’ என்று கேட்க முடியாது. ஏன், மாப்பிள்ளையின் வீட்டாருக்கே கூட தெரியாது. சில வீடுகளில், மாப்பிள்ளையின் குறையை மறைத்துத் திருமணம் செய்து வைப்பதும் உண்டு. அதனால், பரிசோதனை சட்டமாக்கப்பட்டால் இந்த வழக்குகளின் விகிதங்கள் பெருமளவும் குறைய வாய்ப்பிருக்கிறதுஸ’’

தம்பதி என்ன செய்ய வேண்டும்?

‘‘துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத்து வரவேண்டும். நான்கு சுவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. தம்பதிக்குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்களாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங்களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்ஸ’’

ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

‘‘இன்று மருத்துவம் பலவிதத்திலும் முன்னேறி இருக்கும் நிலையில் ஆண்மைக்குறைவுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்துவிடுகிறது. இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அதனால், 90 சதவிகிதம் பேர் கவுன்சலிங் கொடுத்தாலே குணமாகிவிடுவார்கள். 5 சதவிகிதம் பேருக்கு மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் தேவைப்படும். மீதி 5 சதவிகிதம் பேர் மட்டுமே கொஞ்சம் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதற்கு, பிரச்னை என்னவென்று முதலில் மருத்துவருக்கு தெரியவேண்டும். பிரச்னையை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மறைக்க முயற்சிப்பது, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்களோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவுக்கு வெளியே இன்னொருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல்கள் அல்லஸ’’

பாலியல் கல்வி ஏன் அவசியம்?

‘‘பாலியல் கல்வி என்றவுடனே பதறிப் போய் அதெல்லாம் தப்பு என்று சொல்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பாலியல் கல்வியில் கிளர்ச்சியூட்டுகிற படங்களை காட்டப் போவதில்லைஸ கதைகள் சொல்லப் போவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களது உடல் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்து திடீரென வாலிப வயதுக்குள் நுழையும் ஓர் ஆணும் பெண்ணும் திடீரென உடல் மாற்றங்களால் குழப்பமடைகிறார்கள். இதைப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டுஸ’’

இப்போது நடக்கிற சம்பவங்கள் திருமணமாகாதவர்களை குழப்பாதா?

‘‘திருமணத்துக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரையோ, பாலியல் சிகிச்சை மருத்துவரையோ சந்தித்து தனக்கிருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன்பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம் காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். ரகசியமாக இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று தேடி போலி மருத்துவர்களிடம் மாட்டிக் கொண்டு பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள். அதையெல்லாம் தவிர்க்க இந்த வழக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறேன்!’’

தயக்கம் என்ன?

குழந்தையின்மைக்கான பரிசோதனைக்கு முன் வருவதில் ஆண்களுக்கு இருக்கும் அதே தயக்கம், இந்த விஷயத்திலும் இருப்பதாகச் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு. மாற்றம் தேவைப்படுகிற விஷயங்கள் குறித்தும் பேசுகிறார் அவர்.‘‘பிரச்னைனு சொல்லிக்கிட்டு கணவன் – மனைவி ரெண்டு பேரும் வருவாங்க. தனக்குத்தான் பிரச்னைங்கிற மாதிரியே இருக்கும் மனைவியோட அணுகுமுறை. பேசிப் பார்த்தா, கணவருக்குத்தான் பிரச்னைங்கிறது தெரிய வரும். குழந்தையில்லைங்கிற நிலைமையில ஒரு பெண் தன்கிட்ட பிரச்னை இருக்கலாம்னு சந்தேகப்பட்டு பரிசோதனைகளுக்குத் தயாராகிற மாதிரி, ஆண்மைக் குறைபாடுகள் விஷயத்துல ஒரு ஆணால தைரியமா முன் வர முடியறதில்லை.

ஆண்மைக் குறைபாடுங்கிறதை ரெண்டு விதமா பார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணுக்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோசமான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்னைகள், அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாமப் போகறது ஒரு வகை. உண்மையிலேயே உடம்புல பிரச்னைகள் இருந்து, அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறைபாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலாம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பையில கோளாறு’னு ஒரு பெண் தயங்காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்னைகளை வெளியில சொல்லத் தயாராகணும். கவுன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்னைகளும் தீர்க்கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக்கம். ஆலோசனைக்கு வந்தாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான்ஸ’’

ஆண்மை பரிசோதனை எப்படிச் செய்யப்படுகிறது?

சிறுநீரகவியல் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர்கள்தான் ஆண்மை பரிசோதனையை நடத்துவார்கள். இந்த பரிசோதனையில் மூன்று கட்டங்கள் உள்ளன. உறவில் ஈடுபட ஓர் ஆண் தகுதியானவனா என்பதை விறைப்புத் தன்மை ஏற்படுவதை வைத்துப் பரிசோதிப்பது ஒரு கட்டம். விறைப்புத் தன்மையை ஏற்படுத்துவதற்கு போர்னோகிராபி படங்கள் பார்க்க வைப்பது, கதைகள் படிக்க வைப்பது அல்லது ஆணுறுப்பில் ஊசி போடுவது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இவை விஷுவல் எக்ஸாமினேஷன் வகையை சேர்ந்தவை. விந்தணுக்களை ஆய்வு செய்வது பரிசோதனையின் இன்னொரு கட்டம். விந்தணுக்களின் எண்ணிக்கை, அணுக்கள் நீந்தும் வேகம், வீரியம் போன்றவற்றை பரிசோதித்து முடிவெடுப்பார்கள். மூன்றாவது, ஆணுறுப்பு எழுச்சியுடன் இருக்கிறதா என்பதை டாப்ளர் ஸ்கேன் என்ற முறையின் மூலம் பரிசோதிப்பார்கள்.