Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு வரும் பொடுகுப் பிரச்சனயை எப்படித் தீர்ப்பது?

குழந்தைகளுக்கு வரும் பொடுகுப் பிரச்சனயை எப்படித் தீர்ப்பது?

26

சிலசமயம், பிறந்து ஓரிரண்டு மாதங்களே ஆன குழந்தைக்கு தலையின் மேல் தோலில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக இருப்பதைப் பார்க்கலாம். இதைப் பற்றி, பெற்றோர்கள் கவலைப்படுவார்கள், ஆனால் இதனால் கெடுதல் எதுவும் இல்லை. பெரியவர்களுக்கு வரும் பொடுகைப் போலவே சிறு குழந்தைகளுக்கும் வருவதுண்டு.இதை ஆங்கிலத்தில் கிரேடில் கேப் என்பார்கள், இதன் மருத்துவப் பெயர் செபோர்ரிக் டெர்மடைட்டஸ் அல்லது செபோர்ரியா என்பதாகும்.
பெரும்பாலும் பிறந்து மூன்று மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு தலையில் சில பகுதிகளில் திட்டு திட்டாக வரும், இன்னும் சில குழந்தைகளுக்கு தலை முழுதும் வரும். சில சமயம் கண் புருவம், கண்ணிமை, மூக்குப்பகுதி, காதுகள், கழுத்தின் பின்புறம், அக்குள் அல்லது டயப்பர் அணியும் பகுதிகளிலும் இது வரலாம். இது பரவக்கூடியதல்ல, மேலும் குழந்தையை சுத்தமாகப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதற்கான அடையாளமுமல்ல.
இதன் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
இதன் பொதுவான அடையாளங்கள்:
தலையின் மேல் தோலில் திட்டு திட்டாக உருவாகும், அல்லது கட்டி போன்று உருவாகும்
தலையின் தோலில் எண்ணெய்ப்பிசுக்கு, அத்துடன் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் தோலுரிதல்
தோல் லேசாகச் சிவத்தல்
தோலுரிதல்
காது, கண்ணிமை, மூக்கு, தொடையிடுக்குப் பகுதிகளிலும் தோல் உரியலாம்
இதற்கான காரணங்கள்:
இதற்கான காரணங்கள் என்னென்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இதை ஏற்படுத்தக்கூடிய சில

காரணிகள்:
ஹார்மோன்கள்: குழந்தை பிறப்பதற்கு முன்பு, தாயிடமிருந்து குழந்தைக்குக் கடத்தப்பட்ட ஹார்மோன்களின் விளைவு காரணமாகவும் பொடுகு உண்டாகலாம். இந்த ஹார்மோன்கள் தலையின் மேற்பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளை அதிகமாக வேலை செய்ய வைத்து அதிக எண்ணெயைச் சுரக்கச் செய்யக்கூடும்.
பூஞ்சைகள்: தலையின் மேற்பகுதியில் சுரக்கும் எண்ணெயில் வளரக்கூடிய மாலசெசியா எனும் பூஞ்சையாலும் பொடுகு உண்டாகலாம்.
பிற காரணிகள்: அளவுக்கு அதிகமான (வெப்பம், ஈரப்பதம் அல்லது குளிருள்ள) காலநிலை, எண்ணெய்ப்பசையுள்ள சருமம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது மற்றும் பிற சரும நோய்களும் பொடுகு உண்டாகும் வாய்ப்பினை அதிகப்படுத்தலாம்.
எப்படிக் குணப்படுத்துவது?
முதலில், பொடுகினால் குழந்தைக்கு எவ்விதக் கெடுதலும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில மாதங்களில் அதுவாகவே போய்விடும். மென்மையான ஷாம்பு போட்டு தினமும் தலை குளிக்க வைத்தாலே போதும்.
எளிதாக இவை மறையாவிட்டால், பின்வரும் சில வீட்டு வைத்திய முறைகளை முயற்சி செய்துபார்க்கலாம்:
தலை குளிக்க வைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பேபி ஆயில் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போட்டு ஊறவைத்து நன்கு தேய்த்துவிட்டு தலை குளிக்க வைக்கலாம். இதனால் தலையின் புறத்தோல் இளகும், குளிக்க வைக்கும்போது பொடுகு எளிதில் வந்துவிடும். பிறகு மென்மையான ஷாம்பு போட்டு தலை குளிக்க வைக்கவும்.
தலை குளிக்க வைக்கும்போது, மென்மையான பிரஷ் கொண்டு தலையில் தேய்த்தும் பொடுகை அகற்றலாம்.
தலை குளிக்க வைக்கும்போது, எண்ணெய் முழுதும் போகும்படி தேய்த்து குளிப்பாட்ட வேண்டும், இல்லாவிட்டால் தலையில் எண்ணெய் தங்கிவிடும், இது பொடுகுப் பிரச்சனையை இன்னும் மோசமாக்கலாம்.
எப்போது மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்?
மேற்கண்ட நடவடிக்கைகளால் எதுவும் பலனில்லாவிட்டால், மருத்துவர் அல்லது ஒரு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மருத்துவர்கள் பொடுகைப் போக்கும் மென்மையான ஷாம்பு ஒன்றைப் பரிந்துரைக்கலாம். இந்த ஷாம்புவைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும், குழந்தையின் கண்களில் அது பட்டால் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
பொடுகு என்பது, சகஜமான பிரச்சனைதான், இதனால் கெடுதல் எதுவும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். குழந்தையின் உடல்நலத்தை எவ்விதத்திலும் பெரிதாக இது பாதித்துவிடாது. எளிய வீட்டு வைத்திய முறைகளிலேயே இதனை முற்றிலுமாகச் சரிசெய்ய முடியும். எனவே, இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம்!

Previous articleReka chooses Aqualily Flexi Mahindra GST road
Next articleகர்ப்பத்தின்போது ஜலஜோஷம் அல்லது இருமலை சமாளிப்பது எப்படி?