Home குழந்தை நலம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு சரியான அளவில் தூக்கம் கிடைப்பதில்லை

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு சரியான அளவில் தூக்கம் கிடைப்பதில்லை

20

இக்கால குழந்தைகள் நம்மை விட அதிகமாகவே தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதன் பாதிப்புகள் மறுபுறம் நம்மை பயமுறுத்துகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் பிரச்சினைகள். தகுந்த வயது இல்லாத பல குழந்தைகள் விரைவில் மூழ்கிப்போகும் விஷயம் இந்த ஸ்மார்ட்போன்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை விளையாட கொடுக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் கண்டிப்பாக இந்தக் கட்டுரையினைப் படிக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் பாதிப்புகளை தெரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளை வெவ்வேறு அறைகளில் தூங்கச் செய்தனர். இந்த அறைகளின் அளவு ஒரேமாதிரியாக இருந்தது, ஒரு அறையில் இருந்த குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்களை விளையாடக் கொடுத்தனர், மற்ற குழந்தைகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. இதனால் சாதாரணமாக இருந்த குழந்தைகளைக் காட்டிலும், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திய குழந்தைகள் 21 நிமிடங்கள் கழித்துதான் உறங்கினார்கள். இக்குழந்தைகளின் வயது 9 முதல் 12 வரை இருக்கும். ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு வழக்கமான தூக்கம் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வின் மூலம் தெளிவுற தெரிந்தது.
உடல்நலம் பற்றிய செய்திகளை வெளிவிடும் நாளிதழ் ஒன்றும் இதே கருத்தினைத்தான் கூறியுள்ளது. ஸ்மார்ட்போன்களை குழந்தைகள் பயன்படுத்த தொடங்குவதால் அவர்களின் தூங்கும் நேரம் குறைக்கப்படுவதாகவும், உடல் எடை அதிகரித்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் அவர்களின் பள்ளிப் படிப்பின் தரம், குணநலன்களில் மாற்றம், தூக்கத்தின் தரம் என இதர பிரச்சினைகளும் ஏற்படும் என ஃபால்ப் எனும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். மேலும் உடலின் எடை அதிகரிப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

நமது உடலுக்கு வெளிப்புறமுள்ள வெளிச்சம் மற்றும் இருட்டு, மெலட்டனின் எனும் ஹார்மோனின் உற்பத்தியில் பங்கெடுத்துக்கொள்கிறது. இந்த ஹார்மோன்தான் நமது தூக்கத்தினைக் கட்டுப்படுத்தும், ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் உடலின் காரணி இதுதான். அதிக ஒளிச்செறிவு கொண்ட பொருளின்முன் குழந்தைகள் அதிக நேரத்தினை செலவிடும்போது அவர்களின் மெலட்டனின் ஹார்மோன்கள் பாதிக்கப்படும். இது நான்கு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் 2000 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளில் அதிக உடல் பருமன கொண்ட பல குழந்தைகள் ஸ்மார்போன்களை தூங்கும் முன்பு பயன்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதேபோல் தொலைக்காட்சி அதிகம் பார்க்கும் குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு 18 நிமிடங்கள் தாமதமாகிறது. இந்த சிறிய அளவு மற்றும் பெரிய அளவு திரைகளின் ஒளிச்செறிவுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பதையறிய இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படுகிறது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.