Home பெண்கள் பெண்குறி வெள்ளை படுதலும் அதற்கான சில தீர்வுகளும்!!

வெள்ளை படுதலும் அதற்கான சில தீர்வுகளும்!!

63

03பெரும்பாலான பெண்களில் அதிக பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவது வெள்ளை படுதல் இதனால் இப் பெண்கள் மிக அதிகளவில் உடல் உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக இவர்கள் அதிகம் தனிமையை நாடுபவர்களாகவும், மற்றவர்களுடன் சாதாரணமாக பழக தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

வெள்ளை படுதலினால் இப்பெண்கள் எந்தளவு பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் தாம் அணிந்துள்ள ஆடைகள் ஈரமாகி அதை மற்றவர்கள் அவதானித்து விடுவார்களோ, இதனால் நம்மிடமிருந்து ஏதும் துர்வாடை மற்றவர்களால் உணரப்படுமோ அல்லது இது சாதாரண விடயமா அல்லது தொற்று நோயா, இதன் மூலம் வேறு விளைவுகள் ஏற்படுமோ அல்லது இது குழந்தை பெறுவதில் ஏதும் சிக்கல்களை ஏற்படுத்துமோ என்றெல்லாம் பல வகைகளில் பயம் கொள்கின்றனர். அத்துடன் இது சம்பந்தப்பட்ட விடயங்களை சந்தேகங்களை ஒரு வைத்தியரிடம் வெளிப்படையாக கேட்டு அதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் காண தயக்கம் காட்டுகின்றனர்.

இதையிட்டு பயம் கொள்வதற்கோ அல்லது தயக்கம் காட்டுவதற்கோ இது ஒரு பெரும் விடயமே அல்ல. வெள்ளை படுதலானது அது ஏற்படும் வயது, ஏற்படும் சந்தர்ப்பம், அவற்றின் தன்மை, அதனுடன் இணைந்து உண்டாகிற ஏனைய நோய் அறிகுறிகள் என்பவற்றை கொண்டு இதற்கான பிரதான காரணிகளை கண்டறிய முடியும். அத்துடன் அவற்றுக்கான தீர்வுகளையும் காணலாம்.

வெள்ளை படுதல் என்பது யோனி வழியினூடு திரவத்தன்மையான பதார்த்தம் வெளியேறுவதாகும். இது சாதாரண உடற்றொழிலியல் ரீதியாக நடைபெறுகின்ற யோனிக்குரிய ஒரு பாதுகாப்பு பொறிமுறை. இதனூடு வெளியாகும் திரவமானது பொதுவாக நிறமற்றதாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் அதன் அடத்தி வேறுபடுகையில் இளம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இது பெண்களில் காணப்படும் ஈஸ்டரஜன் (Oestrogen) எனும் ஹோமோனின் செயற்பாட்டினால் நடைபெறுகின்றதும், யோனியின் இரசாயன சமனிலையை உரிய முறையில் பேணுவதற்கும் அதன் இழைய மீளமைப்பை பாதுகாப்பதற்குமான இயற்கையில் அமைந்த ஒரு பொறிமுறையாகும். ஈஸ்டரஜன் ஹோமோன் உள்ள போது யோனியின் உற் சுவரின் மேற்பரப்பில் உள்ள (Glycogen) கிளைகோஜன் ‘லக்டிக் அமிலமாக’ (Lactic Acid) மாற்றமடைகிறது. இச் செயற்பாடு ‘லக்டோபசிலஸ்’ (Lacto bacillus) எனும் பக்டீரியாவின் தொழிட்பாட்டால் இடம்பெறுகிறது. இதனால் யோனி அமிலத்தன்மையாக பேணப்படுவதுடன் கிருமித் தொற்றுக்கள் ஏதும் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இந்த லக்டிக் அமிலத்துடன் வேறு பல பதார்த்தங்களும் சேர்ந்து வெளியேறும் திரவமே இந்த வெள்ளை படுதலில் காணப்படுவது. இது துர்வாடை அற்றதாக இருக்கும். அத்துடன் சாதாரண அளவில் காணப்படும். இது நிறமற்றது. ஆனால் உள்ளாடையில் பட்டு உலர்ந்தால் வெள்ளை நிற அல்லது இள மஞ்சல் அல்லது இளம் கபில நிற கறையினை ஏற்படுத்தும். எரிவு, சொறிதல் என்பனவும் காணப்படாது. இது சில சாதாரண சந்தர்ப்பங்களில் சற்று அதிக அளவில் காணப்படும். அவை,
* பருவமடைந்த காலத்தில் (Puberty)
* மாதவிலக்குக்கு முன், பின்னுள்ள நேரம் ((Pre and post menstrual period)
* கர்ப்ப காலத்தில் (Pregnancy)
* பாலியல் தூண்டலுக்குள்ளான நேரம் (Sexual excitement)
* கருத்தடை மாத்திரைகள் உட்கொள்கின்ற போது (Oral Contraceptive Pill users)

மாதவிலக்குக்கு முன் சற்று தடிப்பான சுரப்பாகவும், மாதவிடாய் வட்ட நடுப்பகுதியளவில் (11 – 20ம் நாள்) சூலிடலின் போது தெளிவான மெல்லிய சுரப்பாகவும் இருக்கும். ஆதலால் மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் வெள்ளை படுதலின் அளவானது அதிகளவில் காணப்படுவதையிட்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.
வெள்ளை படுதல் சம்பந்தமாக இன்னொரு விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவுகள் உட்கொள்ளப்படும் நேரம் என்பனவும் இதில் தாக்கத்தை உண்டுபண்ணும். எளிதில் சமிபாடடையாத, போஷாக்கு குறைவான, உடலுக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை உண்ணுவதுடன் வேளா வேளைக்கு உணவு உட்கொள்ளாமையும் வெள்ளைபடுதலுக்குரிய காரணிகளாகும்.
அத்துடன் உடற் பலவீனம், கருப்பை பலவீனம், குருதிச் சோகை என்பனவும் இதற்குரிய காரணிகளாகும்.
மேற்குறிப்பிட்ட உணவு வகைகளின் சமிபாட்டின் மூலம் உண்டாகின்ற, உடலுக்கு வேண்டாத (வெளியேற்றப்பட வேண்டிய) பதார்த்தங்கள் கழிவு அங்கங்களான தோல், சுவாசப்பை, சிறுநீரகம், குடல் போன்றவற்றினால் வெளியேற்றப்படாதவிடத்து அவை யோனியினூடு சுரப்பாக வெளியேற்றப்படுகிறது. இதுவும் சாதாரணமானது எனினும் கூடிய அளவில் வெளியேறலாம்.
சாதாரண வெள்ளை படுதலில் அதிகளவு உள ரீதியான பாதிப்புக்கள் தவிர்ந்த அரிதாக சில அறிகுறிகளும் தென்படலாம். அவை உடற் பலவீனம், லேசான தலைவலி, அடிவயிற்றில் லேசான வலி, மலச்சிக்கல் என்பனவாகும். இவ் வெள்ளை படுதலானது கிருமித் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் சாதாரண நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும். இது பக்டீரியா, பங்கஸ் என்பவற்றின் தொற்றுக்களினால் ஏற்படும். இது சாதாரண வெள்ளைபடுதலின் நிறம், மணம், அளவு என்பவற்றி லிருந்து வேறுபடுவதோடு சொறிதல், எரிவு என்பனவும் காணப்படும்.